தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 april 2015

மாற்றம் செய்யப்பட்ட தேசிய கொடி பயன்பாடு இனவாதத்தின் உச்சகட்டம்: பா.உ. அரியம்

மாற்றம் செய்யப்பட்ட தேசிய கொடி பயன்பாட்டை விமர்சித்துள்ள ஜே.வி.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 05:32.50 AM GMT ]
மாற்றம் செய்யப்பட்ட தேசியகொடியை பயன்படுத்திய அரசியல் தலைவர்கள் மீது மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 23ம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பார்ட்டத்தில் தமிழ் – முஸ்லிம் இனங்களை சுட்டிக்காட்டும் நிறங்களை அகற்றிய தேசியக் கொடியை சில அரசியல்வாதிகள் ஏந்தியிருந்தனர்.
அரசியல்வாதிகளின் இந்நடவடிக்கை தவறானது என ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சந்திரசேகரன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை சாதாரண தேங்காயை திருடியவனை சிறையில் அடைக்கும் சட்டம் நாட்டில் உள்ள நிலையில், பாரிய அளவில் மக்களின் பணத்தினை சூறையாடியவர்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சராக உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மாற்றம் செய்யப்பட்ட தேசிய கொடி பயன்பாடு இனவாதத்தின் உச்சகட்டம்: பா.உ. அரியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 05:48.23 AM GMT ]
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிறுபான்மை இனத்தவரை பிரதிபலிக்கும் செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் அகற்றப்பட்ட தேசிய கொடியினை முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் ஏந்தியிருந்தமை இனவாதத்தின் உச்சகட்டமாகவே தாம் கருதுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களுக்கிடையிலான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய கொடியை மாற்றியமைத்தல் நாட்டின் இறைமையப் பாதிக்கும் செயலாகும் இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆரம்பித்ததன் காரணமாக நாங்கள் தமிழன் என்ற பெயருடன் எங்கள் நிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
தற்போது தமிழர் வாழ்கின்ற பகுதிகளில் வடக்கான் கிழக்கான் என்ற பிரதேசவாதத்தை தூண்டி வருகின்றார்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நலிவடையச் செய்த மையப்பொருளாகவும் இந்த பிரதேசவாதம் இருந்தது.
தந்தை செல்வா வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம் என்பதில் உறுதியாக இருந்தார்.
தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டைக் கூட அவர் வடக்கிலே நடாத்தவில்லை திருகோணமலையில் நடாத்தினார்.
அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.
எமது மக்களின் உரிமைப் போராட்டங்கள் பலவற்றை தமிழரசுக் கட்சி முன்னெடுத்துள்ளதை நாங்கள் அனைவரும் அறிவோம்.
தந்தை செல்வாவின் அகிம்சை ரீதியான போராட்டத்திற்கு அன்றிருந்த அரசாங்கங்கள் தீர்வு ஒன்று தந்து அந்த போராட்டத்தை சரியான முறையில் தக்க வைத்திருப்பார்களானால் ஆயுதப் போராட்டம் உருவெடுத்திருக்காது.
அகிம்சைப் போராட்டத்தின் அடுத்த பரினாமம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது அதனையடுத்து தற்போது இராஜதந்திர போராட்டமாக மாறியுள்ளது.
போராட்டங்கள் மாறலாம் எமது போராட்டத்தின் இலக்கு என்பது எப்போதும் மாறாது.
தந்தை செல்வாவின் அகிம்சை ரீதியான போராட்டத்தில் இஸ்லாமிய பெண்களும் பங்குபற்றியுள்ளமை வரலாறு.
இந்த எல்லா போராட்டங்களிலும் கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக பங்களிப்புச் செய்தது.
இந்த போராடங்களில் முதலாவது தியாகம் செய்தது கிழக்கு மாகாணம்.
1952ல் திருகோணமலையில் சுதந்திர தின நிகழ்வொன்றில் தேசிய கொடியை எதிர்த்து கறுப்புக் கொடி கட்டியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனித்த பின்பு வட, கிழக்கிலே இருக்கக் கூடிய மக்கள் தமிழன் எவரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற மமதையில் முன்னாள் ஜனாதிபதி இருந்தார்.
2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்தீர்கள்.
எமது உன்னதமான போராட்டத்தை அழித்த மஹிந்த ராஜபக்ஷவிற்குப் பின்னால் நாங்கள் சென்றிருந்தால் படுவான்கரை மண் என்பது முற்றாக மாறியிருக்கும் கெவிளியாமடு சித்தாண்டியில் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
2010ம் ஆண்டுக்கு பின்பு வந்த அனைத்து தேர்தல்களிலும் வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ஆதரித்து எமக்கு பாரிய பலத்தினை ஏற்படுத்தியுள்ளீர்கள் இதனை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
புதிய அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டத்தில் இன்னும் இனவாதம் இருந்து கொண்டிருப்பதை அண்மைக்காலங்களில் நடைபெறும் ஆர்பாட்டங்களின் மூலம் தெளிவாக உணர முடிகிறது.
இலங்கையின் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் இன மக்கள் வாழ்கின்றார்கள் என்ற அடையாளத்துடன் உருவாக்கப்பட்ட தேசிய கொடியில் சிறுபான்மையினருக்குரிய செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை அகற்றி விட்டு அந்த கொடியை முன்னாள் அமைச்சர்கள் ஆர்பாட்டங்களுக்கு கொண்டு செல்கின்றார்கள் என்றால் அவர்களின் மனோநிலை எவ்வாறுள்ளது என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இது நாட்டின் இறைமையைப் பாதிக்கும் செயலாகும் இவர்களுக்கெதிராக நடவடிக்கையெடுக்க வேண்டும்.
இந்த நாட்டிலே சிறுபான்மை இனமாகிய தமிழர்களும் முஸ்லிம்களும் வாழவில்லை இந்த நாடு எங்கள் நாடு என்ற மமதையில் இதனையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த மமதை இருக்கும் வரை எங்களுக்குரிய தீர்வுகளைப் பெறுவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை எமது மக்களுக்கு இருக்கின்றது.
எதிர்வரும் காலத்தில் ஒரு தேர்தல் வரவிருக்கின்றது அது தொகுதி ரீதியாகவும் வரலாம் மாவட்ட அடிப்படையிலும் வரலாம்.
எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு நீங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் அதன் மூலம் எமது தீர்வை நோக்கிய பயணத்தை தொடர அது வழிவகை செய்யும்.
இலங்கையின் வரலாற்றிலே இரவு முழுவதும் பாராளுமன்ற உறுப்பிர்கள் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த செயலானது தற்போது நடைபெறும் ஆட்சியில் நடைபெற்றுள்ளது.
நாங்களும் பாராளுமன்றத்திலே பல போராட்டங்களை நடத்தியுள்ளோம் நாங்கள் இரவு முழுவதும் ஆகிரமித்து போராட்டம் செய்யவில்லை அதற்கான அனுமதி பாராளுமன்றம் எங்களுக்குத் தரவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ந.சிவனடியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் நடந்து முடியும் வரை இலங்கைக்கு வரவேண்டாம்: தமிழர்களை கோரும் அரியநேத்திரன் எம்.பி
பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்தே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் தொழில் புரிந்து வந்த மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளை தந்தையான ரகுபதி கனகசூரியம் என்பவர் விடுமுறையில் நாடு திரும்பிய போது கடந்த 22 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட ரகுபதி தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னர் விடுமுறையில் நாடு திரும்பி மீண்டும் எந்த வித இடையூறும் இன்றி ரகுபதி சவூதி அரேபியாவுக்கு திரும்பிச் சென்றிருந்ததாகவும் முதல் முறையாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், நல்லாட்சி நடக்குமாயின் எப்படி தமிழ் மக்கள் இவ்வாறு கைது செய்யப்படலாம் என அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளோர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் முன்னாள் போராளிகள் இந்த சந்தர்ப்பத்தில் நாடு திரும்புவதை தவிர்க்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் முடிவில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 15 தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடு சென்று தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடு திரும்பியவர்களும் இதில் அடங்குகின்றனர்.
குவைத், ஓமான், சவூதி அரேபியா, இத்தாலி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து நாடு திரும்பிய பலர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyERaSUjv3I.html

Geen opmerkingen:

Een reactie posten