[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 12:52.20 PM GMT ]
அங்கத்துவக் கட்சிகளின் தலமைகளுக்கிடையிலான சந்திப்பு நடத்தப்பட்டு அதில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது. மாவட்ட கட்சிக் கிளைகள் எடுக்கும் தீர்மானங்களை குறித்து நாங்கள் கவலையடையவில்லை.
கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழரசு கட்சிக்கு இரு வரைபுகளை வழங்கியிருக்கின்றோம். அதில் அங்கத்துவக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்த்தை நாம் கோரியிருக்கின்றோம். எனவே தனித்தொரு கட்சிக்கு பெரும்பான்மை கொடுப்பதை ஒத்துக்கொள்ளோம்.
கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழரசுக்கு பெரும்பான்மை அந்தஸ்து வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்டக் கிளைக் கூட்டத்தில் தமிழரசு கட்சிக்கு 51 வீதமும் மற்றய கட்சிகளுக்கு 49 வீதமும் என்ற அடிப்படையிலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்.
எனினும் நாம் தமிழரசு கட்சிக்கு, இரு வரைபுகளை வழங்கியிருக்கின்றோம். அதில் ஒரு வரைபு யாப்பு சம்பந்தமானது. மற்றய வரைபு புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமானது. இதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமான வரைபில் நாங்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என குறிப்பிட்டிருக்கின்றோம்.
அதனை விடுத்து ஒரு கட்சிக்கு பெரும்பான்மை அந்தஸ்தை எடுத்துக் கொள்வதை நாங்கள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. என்பதுடன், இந்த விடயம் தொடர்பாக கட்சிகளின் தலைவர்கள் கூடி பேசவில்லை. அதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 17ம், 18ம் திகதிகளிலேயே நடைபெற விருக்கின்றது.
எனவே அதற்கு முன்னதாக மாவட்டக் கிளைகளில் தீர்மானிக்கப்படும் விடயங்கள் தொடர்பாக நாங்கள் கவலையடையவில்லை. மேலும் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சி முழுமையாக தனது மறுப்பினை தெரிவித்திருக்கின்றது.
இதற்கு மேலதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டமைப்பு என்னும் வகையில் ஒரு பொதுவான சின்னத்தில், தேர்தலை எதிர்கொள்வதற்கும் தமிழரசுக் கட்சி தனது மறுப்பினை தெரிவித்திருக்கின்றது.
இந்நிலையிலேயே இறுதியான முடிவினை நாங்கள் 17ம், 18ம் திகதிகளில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னதாகவே அறிவிக்க முடியும். அதற்கு முன்னதாக எந்தவொரு தீர்மானமும் இறுதியான தீர்மானமாக அமைய முடியாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyESZSUjoyI.html
சந்திரிகாவை பிரதமராக்குவதே மைத்திரியின் செய்ந்நன்றி
[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 02:52.23 PM GMT ]
தென்பகுதியில் மட்டுமன்றி வடபுலத்திலும் அரசியல் திருகுதாளங்களுக்குப் பஞ்சமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு சாரார் பிரதமர் ரணிலோடு சேர்ந்து கொண்டு வடக்கின் முதல்வரை வஞ்சம் தீர்க்கின்றனர். இது தவிர கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் எந்தப்பக்கம் நிற்கிறார்? என்ன செய்கிறார்? என்று புரியாமலே உள்ளது.
ஏதோ! சீவியம் போகிறது என்பதைத் தவிர, அரசியல் பக்கத்தால் எந்த நன்மையும் ஏற்பட்டதாக தெரியவில்லை. நிலைமை இதுவாக இருக்கையில், நூறு நாள் வேலைத்திட்டத்தின் வேகம் போதுமானதாக இல்லையென்றே சொல்ல வேண்டும்.
நூறுநாள் வேலைத்திட்டத்தை அமுலாக்குவதற்கு முன்னதாக, பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னதாக நூறுநாள் வேலைத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்றால், சீமான் மகிந்த மீண்டும் அரசியல் பிரவேசம் செய்வதான செய்திகள் ஜனாதிபதி மைத்திரிக்கு கடும் சுகவீனத்தைக் கொடுத்துள்ளது.
ஒரு பக்கம் பிரதமர் ரணிலின் அழுத்தம், மறு பக்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியல் பிரவேசித்தல் என்ற தலையிடி என்றவாறு எல்லாமுமே குழப்பமாக உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதிக்குச் சென்றபோது, திருப்பதியானின் திருக்கதவுத் திறப்பு உடைந்த சம்பவத்தையும் நினைக்க அரசியலில் ஏதோ விபரீதம் நடக்கும் சாத்தியம் உள்ளது என்று மனம் ஏங்குகிறது.
எதுவாயினும் பாராளுமன்றம் கலைக்கப்படும் போது, ஜனாதிபதி மைத்திரி ஒரு தத்திலிருந்து தப்பிக் கொள்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலில் பிரவேசிக்கின்ற நிலைமை ஏற்படுவதை தடுப்பதும் மைத்திரியின் தலையாய பணியாக இருக்கும்.
இந்தப் பணியில் மைத்திரிக்கு இருக்கக் கூடிய முக்கியமான உதவுகரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவாகவே இருப்பார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் சந்திரிகா குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் போது, மகிந்தவின் அரசியல் பிரவேசம் தடுக்கப்படும்.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரி கூறுவது போல ஒரு வேட்பாளராக போட்டியிடுவதற்கு மகிந்தவிற்கு தடையில்லை என்பதை மகிந்த ஏற்றுக்கொள்வாரா என்றால் இல்லை என்பதே பதிலாகவே இருக்கும்.
இந்த நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு ஒரு போதும் உடன்பட மாட்டார். அவரைப் பொறுத்தவரை ஆகக் குறைந்தது பிரதமர் பதவியாவது தனக்குத் தரப்படவேண்டும் என்பதாகும்.
ஆனால், தன்னை ஜனாதிபதியாக்கிய சந்திரிகாவை பிரதமராக்குவதே அவருக்குத் தான் செய்யும் செய்ந்நன்றி என்பது ஜனாதிபதி மைத்திரியின் நிலைப்பாடு.
அதேநேரம் மகிந்த ராஜபக்சவின் அரசியல் பிரவேசத்தைத் தடுக்க, ரணில் விக்கிரமசிங்கவை ஓரம் கட்ட, மகிந்தவுக்கு ஆதரவாக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை மடக்க சந்திரிகாவை பிரதமராக்குவதே மைத்திரிக்கு இருக்கக் கூடிய ஒரே வழி என்பதால், எதிர்வரும் பொதுத்தேர்தலில் சந்திரிகா பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு நிறையவே உண்டெனலாம்.
http://www.tamilwin.com/show-RUmtyESZSUjozB.html
Geen opmerkingen:
Een reactie posten