கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த இலங்கை அரச பேரூந்து ஒன்றில் பெண் பயணி ஒருவர் நேற்று சனிக்கிழமை அதிகாலை தனிமையாக இறக்கி விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குறித்த பெண் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி அந்தப்பெண் குறிப்பிட்டபோது- “நேற்று சனிக்கிழமை 25 ஆம் திகதி அதிகாலை 2.45 மணியளவில் கொழும்பில் இருந்து தலைமன்னாருக்கு செல்ல வேண்டிய அரச பேரூந்து மன்னார் அரச பேரூந்து நிலையத்தினை வந்தடைந்தது.
குறித்த பேரூந்து உடனடியாக மன்னார் சாலையில் இருந்து பயணிகளுடன் தலைன்னார் வரை செல்வதற்காக காத்திருந்தது.இதன் போது குறித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேரூந்தில் நான் பேசாலை செல்வதற்காக ஏறச்சென்ற வேளை என்னிடம் இந்த பேருந்தின் ஓட்டுனர் எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்டார்.
அதற்கு நான் பேசாலை செல்ல வேண்டும் என்று கூறியதற்கு இந்த பேரூந்து பேசாலைக்கு செல்லாது எனத்தெரிவித்தார்.
அதற்கு நான் இந்த பேரூந்து தலைமன்னாருக்குதானே செல்கின்றது என கேட்ட வேளை ஆம் ஆனால் நீங்கள் போக முடியாது என தெரிவித்தார்.
அதற்கு நான் ஏன் என்று கேட்ட வேளை தனியார் பேரூந்தில் வருபவர்களை நாங்கள் அரச பேரூந்தில் ஏற்றுவதில்லை என அந்த பேரூந்தின் ஓட்டுனர் என்னிடம் தெரிவித்தார்.
அதற்கு நான் இது அரசாங்கத்திற்கு சொந்தமான பேரூந்தில் என்னை ஏற வேண்டாம் என்று நீங்கள் சொல்ல முடியாது என கூறிய வேளை ஏற்றுவது நாங்கள் தானே ஆகவே நாங்கள் சொல்லலாம் என அந்த பேரூந்தின் ஓட்டுனர் என்னிடம் தெரிவித்தார்.
எந்த பேரூந்தில் பயணம் செய்ய வேண்டும் என தீர்மானிப்பது எமது விருப்பம் .அத்துடன் அது எனது அடிப்படை உரிமையாகும். ஒரு தனிப்பட்ட நபர் என்னை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் நீங்கள் பயணம் செய்ய முடியாது என தெரிவித்தது எனது அடிப்படை உரிமை மீறப்பட்ட செயலாகும். அத்துடன் நான் ஒரு பெண்ணாகவும் எனது உரிமை மீறப்பட்டுள்துடன் பாரபட்சமும் காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகாலை 2.40 மணியளவில் நான் பேரூந்து நிலையத்தில் தனித்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ச்சியாக பல பெண் பயணிகளுக்கு அதிகாலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது” என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten