[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 11:44.16 PM GMT ]
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பலதரப்புகளிலும் இருந்து பலவாறாக பேசப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தலை 2016ம் ஆண்டு வரை நடத்துவதற்கு சட்டத்திலே இடம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம், கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் பதவிக்காலம் 2016ம் ஆண்டே நிறைவடையவுள்ள நிலையில் பல எதிர்பார்ப்புகளை குழப்புவதற்காகவோ இன்றேல் வேறு எதற்காகவோ, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா புதியதொரு கருத்தை முன்வைத்துள்ளார்.
18வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஏற்கெனவே ஜனாதிபதியாக இருந்த ஒருவர் 3வது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே அப்புதிய கருத்தாகும்.
18ம் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னுடைய இரண்டாம் காலத்தை ஆரம்பித்து விட்ட காரணத்தினாலே, அவர் ஆரம்பித்த வேளையிலே, அது அவருடைய இரண்டாம் பதவிக்காலத்தின் இறுதியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு பிறகு வந்த சட்டத்திருத்தத்தின் பிரகாரம் அவர், இம்முறையுள்ள தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஒரு சட்ட பிரச்சினையை முன்னாள் பிரதம நீதியரசர் கிளப்பியிருக்கின்றார்.
அவரது கருத்தை ஆராய்ந்து பார்த்தால், சட்டத்தின் பிரகாரம் அது நீதியானதாகவே காணப்படுகின்றது. 2010ம் ஆண்டு ஜனவரி மாத காலத்தில் 18வது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருந்தும் தற்போது இச்சட்டம் காணப்படுவதன் காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.
எனினும் இப்படியானதொரு கருத்தை 3 வருடங்களுக்கு பிறகு முன்வைத்ததற்கான காரணம் என்ன என்ற சந்தேகமும் எம்மில் எழுந்துள்ளது.
இதை இந்நேரத்தில் தெரிவிப்பது யாருடைய தேவையாக இருக்கும். கட்சிக்குள் பிரச்சினையொன்று இருக்கின்றதா?
தற்போதுள்ள ஜனாதிபதி பதவியில் உள்ளவரை நீக்கிவிட்டு ஐ.ம.சு.மு. கட்சியில் இருக்கும் வேறொருவரை தேர்தலில் போட்டியிட வைப்பதா?
இல்லையேல் ஜாதிக ஹெல உறுமயவில் உள்ளவர்கள், சரத் என் சில்வாவை இவ்வாறு கூறுமாறு தூண்டி விட்டனரா?
அதுவும் இல்லையாயின் குடும்பத்துக்குள்ளேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கொடுத்த வாய்ப்பு போதும். குடும்பத்துக்குள் வேரு யாராவது போட்டியிடலாம் என்ற எண்ணம் இருக்கின்றதா? என்ற சந்தேகமும் எழுகின்றது.
என்னவாக இருந்தாலும் யுத்தத்தை நாமே முடிவுக்கு கொண்டு வந்தோம் என்று கூறிய காலத்தில் அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் இருந்த புகழ் தற்போது மிகவும் குறைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் வந்தால் மீண்டும் வெற்றியடைய முடியுமா என்ற சந்தேகமும் பயமும் ஏற்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு காரணத்தை வைத்தாவது இதில் வெற்றி பெற வேண்டும் என்ற வழிமுறைகளையும் தேடிக்கொண்டு இருப்பது இதனூடாக நன்றாகவே தெரிகிறது.
இதற்கு பிரதான காரணம் யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் ஆகின்ற நிலையில் நாட்டில் ஊழல் அதிகரித்துக்கொண்டே போகின்றது. நாட்டை சரியான முறையில் ஆட்சி செய்ய முடியாது இருக்கும் சூழ்நிலை காணப்படுகின்றது.
ஊவா மாகாண சபை தேர்தலின் முடிவில் ஆளும் கட்சிக்கான புகழ் எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பதை வெளிப்படையாக தெரிந்துகொள்ள முடியும்.
நாட்டை இனபேதமின்றி கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் தான் இந்திய அரசாங்கம் இலங்கை விடயத்தில் தலையீடு செய்கின்றது. ஜனாதிபதியினுடைய குடும்பமே நாட்டை ஆட்சிசெய்து கொண்டிருக்கின்றது.
நாட்டில் இனபேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என்பதை புரிந்து கொள்ளாமல் அரசாங்கம் ஆட்சி செய்யுமாயின் வெகுதூரத்துக்கு இது நிலைத்து நிற்காது.
ஆகையினால் யாராக இருந்தாலும் இந்நாட்டில் வாழுகின்ற மற்ற தேசிய இனங்களோடு ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து அரச அதிகாரங்களை எவ்வாறு முழுமையான விதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்ற தீர்மானத்தை பேசி முடிவெடுப்பதை தவிர, தொடர்ச்சியாக எவரும் இந்நாட்டிலே ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாது என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கின்றோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkw4.html
சர்வதேச போட்டித்தன்மை தரப்பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு! சுவிட்ஸலாந்து முதலிடம்
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 11:54.37 PM GMT ]
ஜெனீவாவை தளமாகக்கொண்ட உலக பொருளாதார மையம் நேற்று 2014 - 2015 ம் ஆண்டுக்கான சர்வதேச போட்டித்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கைக்கு 73வது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.
144 நாடுகளின் பட்டியலில் இலங்கை 4.2 என்ற புள்ளியின் அடிப்படையில் சரிவைக்கண்டுள்ளது.
கடந்த வருடத்தில் இலங்கை இந்த தரப்பட்டியலில் 65வது இடத்தை பெற்றிருந்தது.
நிறுவனங்கள், அடித்தள வசதிகள், சிறியரக பொருளாதாரம், சுற்றாடல், சுகாதாரம், ஆரம்பக்கல்வி, உயர்கல்வி, பயிற்சிகள், சந்தைப்படுத்தல், தொழில்நுட்பம் உட்பட்ட 12 விடயங்கள் இந்த தரப்படுத்தலுக்காக பார்க்கப்படுகின்றன.
இந்தியா 71வது இடத்தை பெற்றுள்ளது.
நேபாளம் 102ம் இடத்தையும், பங்களாதேஸ் 109வது இடத்தையும், பாகிஸ்தான் 129வது இடத்தையும் பெற்றுள்ளன.
சுவிட்ஸர்லாந்து முதலிடத்தையும், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகியன இரண்டாம் இடத்தையும், பின்லாந்து 4ம் இடத்தையும் ஜெர்மனி 5ம் இடத்தையும் பெற்றுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkw5.html
போதைப்பொருளுக்கு அடிமையாகும் கொழும்பை அண்டிய பாடசாலை மாணவர்கள்!
[ புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2014, 11:58.18 PM GMT ]
அரச புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் கொழும்பு பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமன்றி சர்வதேச பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் இவ்வாறு போதைப்பொருள் பயன்படுத்தி வருகின்றனர்.
பாடசாலைகளை மையப்படுத்தி போதைப்பொருள் வர்த்தகத்தை மேற்கொண்டு வரும் சந்தேக நபர்கள் பற்றி தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவ்வாறானவர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் பல மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது தேசிய ரீதியில் பாரிய பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkw6.html
Geen opmerkingen:
Een reactie posten