மாலைதீவில் அமெரிக்கத் வேவு தளம்! இலங்கைக்கு அச்சம்! தப்பிக்க முடியாது??
சுபத்ரா
மாலைதீவில் அமெரிக்கா நிரந்தரப் படைத்தளத்தை அமைக்கப் போவதாகவும் அதனால் இலங்கையின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் அபாய எச்சரிக்கை ஒன்றை கடந்த வாரம் விடுத்திருந்தார் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.
இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அண்மைக்காலமாக அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், நகர்வுகளின் பின்னணியில், சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு இந்த விவகாரம் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை.
இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அண்மைக்காலமாக அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், நகர்வுகளின் பின்னணியில், சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு இந்த விவகாரம் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை.
தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கை வளர்த்து விடுவதற்குத் துணைபோகும் இலங்கை, தன்னருகே உலகின் மிகப்பெரிய வல்லரசு இன்னொரு தளம் அமைக்கப் போவதை நிம்மதியோடு பார்க்க முடியாது தான்.
மாலைதீவுடன் அமெரிக்கா விரைவில் செய்து கொள்ளவுள்ள உடன்பாட்டின் பிரதி ஒன்று வெளியானதை இடுத்தே இந்த அச்சம் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கூட இந்த உடன்பாடு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உடன்பாட்டுக்கு எதிராக இலங்கை மற்றும் இந்தியாவிடம் கவலைகளை எழுப்புவதில் வெற்றி கண்டுள்ளார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட்.
இந்திய சார்பாளரான அவர் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் கூட நெருக்கமானவர்.
தற்போது ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்ற விசாரணைகளை எதிர்நோக்கியுள்ள அவர் சீன சார்புடைய தற்போதைய அரசாங்கத்துக்கும் இந்தியாவுக்கும் சண்டையை மூட்டி விடுவதற்குப் பெரும் பாடுபட்டு வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.
மாலைதீவு அரசாங்கம் பல்வேறு விடயங்களில் இந்தியாவுடன் முட்டி மோதினாலும் சீனாவுடன் இணைந்து செயற்பட்டிருந்தாலும் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளும் அளவுக்கும் போயுள்ளது.
தெற்காசியாவில், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கைத் தோற்கடிக்கும் அமெரிக்க மூலோபாயத் திட்டத்தின் ஒரு கட்டமாகவே மாலைதீவுடன் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளது.
சீனாவின் செல்வாக்கை முறியடிக்கின்ற மூலோபாயத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்தே இருந்தாலும் மாலைதீவு விவகாரத்தில் இந்தியாவுக்கு கவலைகள் இருப்பதை மறுக்க முடியாது.
இந்தியாவில் இருந்து மிகக்குறுகிய தொலைவில் அமெரிக்கத் தளம் அமைவதை இந்தியாவினால் அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது தான்.
மாலைதீவின் செய்மதிகளை ஏவும் விடயத்தில் சீனாவின் ஆதிக்கத்தை உடைப்பதில் ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ள இந்தியாவுக்கு இப்போது அமெரிக்காவின் நகர்வு கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.
அதுபோலவே சீனாவின் அரவணைப்பில் உள்ள இலங்கைக்கும் இந்த அமெரிக்க நகர்வு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் மாலைதீவில் அமெரிக்கா நிரந்தரத் தளத்தை அமைக்கப் போகிறதா? அவ்வாறு தளம் எதையும் அமைக்கும் திட்டம் ஏதும் தம்மிட்ம் கிடையாது என்று அமெரிக்கா கூறுவது உண்மையா? என்ற கேள்விகள் எழுகின்றன.
மாலைதீவில் நிரந்தரத் தளத்தை அமைக்கும் எந்தத் திட்டமும் அமெரிக்காவுக்கு இல்லை என்றும், இது வழக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடே என்றும் அமெரிக்கத் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்கத் தரப்பில் இருவர் விளக்கமளித்துள்ளனர்.
ஒருவர் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன்.
இரண்டாமவர் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்.
இவர்கள் இருவருமே நிரந்தரத் தளத்தை அமைக்கும் திட்டம் ஏதும் கிடையாது என்று அடித்துக் கூறியுள்ளனர்.
அவ்வாறாயின் சோபா எனப்படும் இந்த உடன்பாடு எதற்கானது? என்ற கேள்வி எழுகிறது.
முதலில் சோபா என்றால் என்ன? இந்த உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் என்னவென்று பார்க்க வேண்டும்.
அமெரிக்கா உள்ளிட்ட வலிமையான நாடுகள் தமது படைகளை பிற நாடுகளில் நிலைநிறுத்துவதற்காக அந்த நாடுகளுடன் செய்து கொள்ளும் உடன்பாடு தான் சோபா.
மாலைதீவுடன் அமெரிக்கா தற்போது செய்து கொள்ளப் போவது சோபா என்ற உடன்பாடுதான்.
அதாவது படைகளை நிலைப்படுத்துவதற்கான உடன்பாடு என்று இதனைப் பொருள் கொள்ளலாம்.
ஒரு நாடு வெளிநாடு ஒன்றில் தனது படைகளை நிலை நிறுத்திக் கொள்வதற்கு வழி செய்வதே இந்த உடன்பாடு.
ஏனைய எல்லா விதமான பாதுகாப்பு ஒத்துழைப்புகளையும் உள்ளடக்கியதாகவே இந்த சோபா உடன்பாடு அமைந்திருக்கும்.
உலகில் அமெரிக்கா தான் மிகப் பெரியளவில் சோபா உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ள நாடு.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜோ்மனி, இத்தாலி, அவுஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா போன்ற நாடுகளும் தமது படைகளை வெளிநாடுகளில் நிலைகொள்ள வைப்பதற்காக இத்தகைய உடன்பாடுகளை செய்து கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்கா தான அதிகளவில் இத்தகைய உடன்பாட்டைச் செய்துள்ளது. அவற்றில் பல இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
மாலைதீவு விடயத்திலும் அமெரிக்கா இந்த இரகசியத் தன்மையை பேணிய போதிலும் எப்படியோ அதன் பிரதி வெளியே கசிந்து விட்டது.
அதற்குப்’் பிரதான காரணம் மாலைதீவின் உள்நாட்டு அரசியல் தான்.
உண்மையில் சோபா உடன்பாடானது படைகளை நிலைப்படுத்துவதற்கானது என்ற போதிலும் அமெரிக்காவோ அதனை நிராகரிக்கிறது.
இது வழக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு தான், இது பொல 100ற்கும் மேற்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா உடன்பாடு செய்து கொண்டுள்ளது என்று அமெரிக்கத் தரப்பில் நியாயம் கூறப்பட்டுள்ளது.
ஆனால் 100ற்கும் அதிகமான நாடுகளுடன் அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடுகளைச் செய்து கொண்டிருப்பினும் அவையெல்லாம் சோபா உடன்படிக்கையல்ல.
அமெரிக்கா 100ற்கும் அதிகமான நாடுகளுடன் செய்து கொண்டுள்ள உடன்’பாட்டுக்குப் பெயர், ஏ.சி.எஸ்.ஏ எனப்படும் உடன்பாடுதான். கையளகப்படுத்தல் மற்றும் சேவைகளைப் பரிமாறுவதற்கான உடன்பாடு என்று இதனை வரையறுக்கலாம்.
இது இராணுவ விநியோக விடயங்கள் சார்ந்த அடிப்படையான ஒத்துழைப்புகளை உறுதிப்படுத்துவதற்கானது.
உதவிகள் விநியோகங்கள் சேவைகளைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்த உடன்பாடு செய்து கொள்ளப்படுகிறது.
இது எந்த வழியிலும் ஒரு நாட்டின் மீது இராணுவ நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கவில்லை.
2003 ஒக்ரோபரில் அமெரிக்கா 76 நாடுகளுடன் இத்தகைய உடன்பாட்டைச் செய்து கொண்டது. இவற்றில் பெரும்பாலானவை நேட்டோ நாடுகள்.
இதில் இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் அமெரிக்காவுடன் ஏ.சி.எஸ்.ஏ எனப்படும் இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ள நாடுகளில் இலங்கையும்2007 மார்ச் 5ம் திகதி கையெழுத்திட்டன.
சந்திரிகா ஜனாதிபதியாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்த காலப்பகுதியில் இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகின.
இதன் விளைவாக 2007ல் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டதன் பின்னர் அமெரிக்கா கொடுத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகளின் நான்கு ஆயுதக்கப்பல்களை இலங்கைக் கடற்படை ஆழ்கடலில் தாக்கி அழித்தது.
அதுபோலவே தான் மாலைதீவும் ஏற்கனவே அமெரிக்காவுடன் இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது.
முகமட் நசீட் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் அந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.
அப்போது அமெரிக்காவுடன் ஏ.சி.எஸ்.ஏ உடன்பாட்டைச் செய்து கொண்ட நசீட் தான், இப்போது சோபா உடன்பாட்டை செய்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
அதேவேளை, மாலைதீவில் அமெரிக்கா நிரந்தரத் தளத்தை அமைக்காது என்று அந்த நாட்டின் அமைச்சர் முகமட் நசீம் கூறியுள்ளார்.
இந்த உடன்பாட்டின் கீழ் மாலைதீவு படையினருடன் அமெரிக்கப் படைகள் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.
அமெரிக்கத் தளத்தை நிறுவும் திட்டம் ஏதும் இதில் உள்ளடக்கப்படவில்லை.
எந்தவொரு நாட்டுக்கும் அதற்கான வாய்ப்பை மாலைதீவு வழங்காது.
இந்த உடன்பாடு இன்னமும் இறுதியாகவில்லை. சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்ட பின்னர் தான் கையெழுத்திடப்படும் என்று மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் முகமட் நசீம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அமெரிக்கத் தூதுவர் சிசன், மாலைதீவுடன் செய்து கொள்ளப்படவுள்ள சோபா உடன்பாடு ஒரு நாட்டின் இராணுவத்துடன் அமெரிக்கா நெருக்கமான ஒத்துழைப்பை வைத்துக் கொள்வதற்காக கையாளப்படும் வழக்கமான நடைமுறை தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
உதவிகள் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கான சட்ட அங்கீகாரமே இந்த சோபா உடன்பாடு என்கிறார் சிசன்.
எவ்வாறாயினும் சோபா உடன்பாடு எனப்படுவது பொதுவாக படைகளை நிலை நிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டதே.
ஆனாலும் மாலைதீவில் நிரந்தரப் படைத்தளத்தை நிறுவும் திட்டம் தமக்கு இல்லையென்று அமெரிக்கா கூறுகிறது.
சிலவேளைகளில் மாலைதீவு விவகாரத்தில் இந்தியாவுடனான நட்புக் கருதி அமெரிக்கா சில மென்போக்குகளை கடைப்பிடிக்கலாம்.
ஏனென்றால் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள ஒருபோதும் அமெரிக்கா விரும்பாது.
அதனால் தான் பிளேக் தெற்காசிய விவகாரங்களில் இந்தியாவுடன் அமெரிக்கா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவும் கூட இந்த விவகாரத்தை அதிஜகளவில் பெரிதுபடுத்த விரும்பவில்லை. காரணம் இது சீனத் தலையீட்டுக்கு ஆப்பு வைக்கின்ற ஒரு மூலோபாய நகர்வு.
அதனால் தான் அமெரிக்காவுடன் அதிகளவில் முரண்டு பிடிக்கவில்லை.
மாலைதீவுடன் அமெரிக்கா சோபா உடன்பாடு செய்து கொண்டால் அந்த நாட்டை அமெரிக்கா தனது கடற்படைக் கப்பல்கள் போர் விமானங்களை தரித்து நிற்கும் தளமாக பயன்படுத்த முடியும்.
இப்போது இலங்கை அரசுக்கும் சிங்கள் அரசியல் தலைவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் வந்துள்ள மிகப் பெரிய அச்சம் என்னவென்றால் இந்தியப் பெருங்கடலில் அம்பாந்தோட்டையைப் பயன்படுத்தி சீனா திறந்து விட்டுள்ள விநியோகப் பாதைக்கு இந்தச் சோபாவினால் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதுதான்.
மாலைதீவில் அமெரிக்கத் தளம் அமையப் போகிறதோ இல்லையோ புவிசார் அரசியல் போக்குகளை கருத்தில் கொண்டு சீனாவைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டு காய்களை நகர்த்திய இலங்கைக்கு இது இப்போதே காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது என்பதே உண்மை.
புலிகள் என் மீது தற்கொலை தாக்குதல் நடத்தவில்லை மறுக்கிறார் பொன்சேக்கா
2007 ஆம் ஆண்டு கொழும்பில் தன் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பாக அன்றைய இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையின்படி தன் மீது அந்த தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொன்சேக்கா கூறியுள்ளார்.
குண்டு தாக்குதல் தொடர்பாக வாக்;குமூலம் ஒன்றை பெறுவதற்காக புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் பொன்சேக்காவை தொடர்பு கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறே அந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.
அதிகாரி – பொன்சேக்கா அவர்களே உங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுதாக்குதல் குறித்து சந்தேகிக்க கூடிய எவராவது உள்ளனரா?.
பொன்சேக்கா – ஆம் ஆம் அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றதா?.
அதிகாரி – இந்த தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக நம்புகிறீர்களா?.
பொன்சேக்கா- விடுதலைப்புலிகள் அந்த காலத்தில் காட்டில் இருந்தனர். அவர்களை காட்டுக்குள் நான் மட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.
அதிகாரி – இந்த தாக்குதல் குறித்து நீங்கள் சந்தேகிப்பது பிரபாகரனையா? பொட்டம்மானையா?.
பொன்சேக்கா – நான் ஒரு தடவை கூறினே; அவர்கள் காட்டில் உள்ளனர் என்று.
அதிகாரி – அப்படியொன்றால் விடுதலைப்புலிகளின் நீங்கள் யாரை சந்தேகின்றீர்கள்?.
பொன்சேககா- எனக்கு விடுதலைப்புலிகளில் உள்ள எவர் மீதும் சந்தேகமில்லை. இதில் சந்தேக நபர்கள் இல்லை. இதனை ஜனாதிபதியும் கோத்தபாயவுமே செய்தனர். நாட்டின் அதிஷ்டம் நான் உயிர் தப்பினேன். இல்லை என்றால் இவர்கள் இன்னும் யுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். யுத்தம் செய்வது மாத்திரமல்ல அதனை விற்று திண்பார்கள். யுத்தத்தை நான் முடிவுக்கு கொண்டு வந்து விடுவேன் என்று இவர்கள் அப்போதிருந்தே பயத்தில் இருந்தனர். அது அவர்களுக்கு நஷ்டம்.
பொன்சேக்காவின் கருத்துக்களை அடுத்து அந்த அதிகாரி எதனையும் பேசாது மௌனமாக இருந்துள்ளார்.
பொன்சேக்கா – வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?.
அதிகாரி – இல்லை சார் இந்த விடயம் சம்பந்தமாக உங்களிடம் வாக்குமூலத்தை பெற வேண்டும் என எனக்கு உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு வந்தது. அதுதான் உங்களிடம் பேசினேன். நீங்கள் வாக்குமூலத்தை வழங்க முடியுமா?.
பொன்சேக்கா – ஆம் முடியும். ஆனால் நான் கூறுவதை அப்படியே எழுதி கொள்ள வேண்டும். பின்னர் மாற்றங்கள் செய்யக் கூடாது. அதனை ஏற்றுக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் எனது அலுவலகத்திற்கு வரலாம் என பொன்சேக்கா கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten