தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

இலங்கைக்கு நாடு கடத்துவதை மேற்குலக நாடுகள் நிறுத்த வேண்டும்: பா.அரியநேத்திரன்


அரசியலையும் - கலையையும் பிரித்தறிய வேண்டும்: சண். குகவரதன்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 09:21.41 AM GMT ]
தென்னிந்திய தமிழ்த் திரைப் படங்களை இலங்கையில் திரையிடக் கூடாதென்ற 'இராவணா சக்தியின்' கோரிக்கையானது 'முகத்துடன் கோபித்துக் கொண்டு மூக்கை வெட்டிக் கொள்வதைப் போன்றதாகும்' என ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
அரசியலையும் கலையையும் பிரித்துப் பார்க்க வேண்டுமே தவிர இரண்டையும் இணைத்துப் பார்க்கலாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,   சண். குகவரதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரஜனிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார் போன்ற நடிகர்கள் நடித்த திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவதை தடை செய்ய வேண்டும் என 'இராவணா சக்தி' திரைப்படக் கூட்டுத்தாபனத்தை வலியுறுத்தியுள்ளது.
நடிகர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் அரசியல் ரீதியாக தாம் கொண்டுள்ள கருத்துக்களை வெளியிடும் உரிமை உண்டு. இதுவே ஜனநாயகம்.
அதேபோன்று, இலங்கை கலைஞர்களுக்கும் அந்த ஜனநாயக உரிமை இருக்கின்றது. கடந்த யுத்த காலங்களில் இலங்கை கலைஞர்கள் தமது அரசியல் கருத்துக்களை வெளியிட்டமை நாம் கண்ணுற்றோம்.
எனவே, அரசியலையும் கலையையும் ஒன்றாக இணைப்பதை கைவிட வேண்டும். இவை இரண்டும் இரு துருவங்கள். தென்னிந்தியத் தமிழ் திரைப்படத் துறையென்பது இலங்கைக்கு மட்டுமே வரையறுக்கப்படவில்லை.
அது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களை சென்றடைகின்றது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு இலங்கையில் தமிழ் திரைப் படங்களை விரும்பி ரசிக்கும் பெரும்பாலான சகோதர சிங்களமொழி ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
அதேபோன்று, ஹிந்தித் திரைப்படங்கள், பாடல்களை கேட்கும் சிங்கள ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இதனை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
எனவே, எமது சிந்தனைகள் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும். அரசியல் பிரச்சினைகளை ராஜதந்திர ரீதியாகவே அணுக வேண்டுமே தவிர அதனை கலைகளுடாக அணுகலாகாது.
எமது யாத்திரீகர்கள் தென்னிந்தியாவில் அசௌகரியங்களை சந்திப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமே இந்திய மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தற்போது பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர்.
எனவே, அரசியல் வேறு, கலை வேறு என்பதை பிரித்தறிய வேண்டும். தென்னிந்திய திரைப்படங்களை இங்கு வெளியிடுவதால் இலங்கைக்கே வருமானம் கிடைக்கின்றதென்பதையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நாடு கடத்துவதை மேற்குலக நாடுகள் நிறுத்த வேண்டும்: பா.அரியநேத்திரன்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 08:55.49 AM GMT ]
புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை குறித்த நாடுகள் கைவிட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்
கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் புகலிட தஞ்சம் கோரிய பலர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக அண்மையில் செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை இளைஞன் குலசேகரம் கோகுலராஜேஸ் என்ற இளைஞனும் கனடாவில் இருந்து இவ்வாறு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் இலங்கை குற்றப்புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் அண்மைய நாட்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாயும் ஒரு விதவையுமான ஒரு பெண் இவ்வாறு விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எனவே இரு குழந்தைகளின் தாயாகிய ஒரு பெண்ணே மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்யப்பட்டால் இளைஞர்களின் கதி என்னவாவது?
எனவே கனடா மற்றும் அவுஸ்ரேலியாவில் இருந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை குறித்த நாடுகள் மீள் பரிசீலனை செய்து அவர்களுக்கும் புகலிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten