தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லுவது போல அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றனர்.
ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது 4ம் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது.
இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன், எம்.பத்மநாதன், அரியநேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் 4ம் மாடிக்கு சென்றுள்ளனர்.
எதிர் வரும் 21ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாங்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது போல 4ம் மாடிக்கும் சென்று வருகின்றோம்.
எப்போது தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
எத்தனை வருடங்கள் சென்றாலும் தமிழ் தேசிய விடுதலைக்கான பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுடப்பட்டார்கள். அந்த இடத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதற்காக தமிழ் தேசியத்தை அழித்து விடவில்லை.
இன்னுமொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவது வெற்றி விழாவா? ஒரு நாட்டிற்கு எதிராக யுத்தம் செய்து அதில் வெற்றி பெற்று விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவாகும்.
அரசாங்கம் வெற்றி விழா கொண்டாடுவதானது இன்னும் மக்கள் அடிமைகளாக இருப்பதையே காட்டுகின்றது. முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த எமது உறவுகளுக்கு பிராத்தனை செய்யக் கூட முடியாத அடக்கு முறைக்குள் நாம் வாழந்து கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten