தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

இலங்கையில் மைய இலக்கை நெருங்கி வரும் சீனா


உலகிலேயே கப்பல் வராத துறைமுகமும், விமானம் வராத விமானநிலையமும் இலங்கையில் மட்டும் தான் உள்ளன என்று அண்மையில் கிண்டலடித்திருந்தார் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா.
அவரது இந்தக் கிண்டலுக்குக் காரணம் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுகமும், மத்தல ராஜபக்ச விமான நிலையமும் பெரிதாகப் பயன்படுத்தப்படாததே.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2005ல் பதவிக்கு வந்த பின்னர், சீனாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட பாரிய திட்டங்கள், பொதுப்பயன்பாட்டுக்கு ஏற்றவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கேள்விக்கு சீன உதவியுடனான மூன்று முக்கிய திட்டங்கள் குறித்து எழுகின்ற சந்தேகங்கள் தான் காரணம்.
பெருமளவில் வருமானம் ஈட்டலாம் என்று கூறி அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு எதிர்பார்க்கப்பட்டது போன்று கப்பல்கள் வரவில்லை.
பயணிகள் போக்குவரத்து அதிகம் இருக்கும் என்ற நம்பிக்கையில் கட்டப்பட்ட மத்தல விமான நிலையம் ஒரு ஓய்வு நிலையமாக செயற்பட்டு வருவது.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் அடிக்கடி பழுதாகி பேசாமல் சீனாவிடமே ஒப்படைத்து விடலாமா? என்று அரசாங்கத்தைச் சிந்திக்க வைக்கின்றமை.
இந்த மூன்றுமே இலங்கையில் சீனாவின் முதலீட்டில் பெருந்தொகைப் பணத்தை கொட்டி உருவாக்கப்பட்ட திட்டங்கள்.
அம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுகத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் முடிந்து 2010 நவம்பரில் திறந்து வைக்கப்பட்டது.
85 வீதம் சீனா முதலீடு செய்த முதலாவது கட்டத்துக்கு செலவிடப்பட்ட நிதி 360 மில்லியன் டொலர்.
இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொள்கலன் முனையம் மற்றும் அது சார்ந்த வசதிகளுக்காக செலவிடப்படவுள்ள நிதி 750 மில்லியன் டொலர்.
சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதை அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இருந்து சுமார் 6 தொடக்கம் 10 கடல் மைல் தொலைவிலேயே உள்ளது.
இதன் வழியாக ஆண்டுக்கு சுமார் 36 ஆயிரம் கப்பல்களும் 4500 எண்ணெய் தாங்கிக் கப்பல்களும் பயணிக்கின்றன.
எனவே எரிபொருள் நிரப்புதல் மாலுமிகளை மாற்றுதல் உள்ளிட்ட வசதிகளுடன் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்தால் கோடி கோடியாகப் பணம் கொட்டும் என்று அரசாங்கம் கூறியது.
ஆனால் இந்தத் துறைமுகம் திறக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளூகப் போகின்ற நிலையில் இதனால் அடையப்பட்டுள்ள இலாபம் என்ன?
கிட்டத்தட்ட ஆண்டுக்கு 40 ஆயிரம் கப்பல்கள் பயணம் செய்யும் சர்வதேச கடற்பாதையில் அமைந்துள்ள இந்தத் துறைமுகத்தை அதன் வழியாகப் பயணிக்கும் கப்பல்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.
எவ்வளவோ சலுகைகள் வசதிகளை செய்து கொடுத்தும் இறக்குமதியாளர்கள் இந்தத் துறைமுகம் வழியாகப் பொருட்களை இறக்குவதில்லை.
எப்போதாவது ஒரு கப்பல் இங்கு வந்தாலே அது பெரிய அதிசயமாக பார்க்கப்படும் நிலை அங்கு தொடர்கிறது.
வேறுவழியின்றி அரசாங்கம் பாவித்த வாகனங்களை இந்தத் துறைமுகம் வழியாகவே இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் கொழும்புத் துறைமுகத்தில் இறக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தது.
இதனால் இந்தியாவில் இருந்தும், ஜப்பானில் இருந்தும் அவ்வப்போது மாகம்புர துறைமுகத்துக்கு சில கப்பல்கள் வருகின்றன.
மற்றப்படி இந்தத் துறைமுகத்தைத் தேடி வந்த கப்பல்கள் என்றால் மிகச் சொற்பமே.
வழக்கம் போலவே கடலுக்குள் துறைமுகத்தை அமைப்பதற்கு சாத்தியமில்லை என்பதால் நிலப்பரப்பைத் தோண்டி இந்தத் துறைமுகம் உருவாக்கப்பட்டது.
21ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட முதலாவது இத்தகைய செயற்கைத் துறைமுகம் என்ற பெயரை மட்டுமே இதனால் பெற முடிந்தது.
இந்தத் துறைமுகம் காற்று வாங்கிக் கொண்டிருக்க இந்தத் துறைமுகத்தின் முதற்கட்டத்துக்காக சீனாவிடம் பெறப்பட்ட கடன் பெருகிக் கொண்டிருக்கிறது.
இதுபோலவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையமும் பயணிகள் வருகையின்றி காய்ந்து கிடக்கிறது.
சீனாவின் நிதி மற்றும் கட்டுமான உதவிகளுடன் கிட்டத்தட்ட 210 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ள விமான  நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் முடிவடைந்து திறந்து வைக்கப்பட்டு இரண்டு மாதங்களாகின்றன.
இதனால் தெற்கிலுள்ள பெருமளவு மக்கள் பயனடைவார்கள் என்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
பல்வேறு வெளிநாட்டு: விமான நிறுவனங்களும் இந்த விமான நிலையம் ஊடாக சேவையை நடத்த ஆர்வம் காட்டி வருவதாக அரசாங்கம் கூறியது.
ஆனால் இந்த இரண்டு மாதங்களில் நிலைமை தலைகீழாகி விட்டது. வீம்புக்காக இலங்கை அரசின் விமான சேவை நிறுவனங்களான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சும், மிஹின் லங்காவும் தான் இதன் வழியாக சேவையை நடத்துகின்றன.
சார்ஜாவுக்கு வாரத்தில் இரண்டு முறை சேவை நடத்தி வந்த எயார் அரேபியா நிறுவனம் சொல்லாமல் கொள்ளாமல் தனது சேவையை நிறுத்திக் கொண்டு விட்டது.
அதற்குக் காரணம் மிகக் குறைந்தளவு பயணிகள் தான்.
விமான நிலையம் திறக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் கழித்து ஒரு செய்தி வெளியானது.
மத்தல விமான நிலையம் வழியாக பயணிகள் மட்டும் தான் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
அதனை அரசாங்கம் உறுதிப்படுத்தவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை.
ஏராளமான சலுகைகளைக் கொடுத்தும் மத்தல விமான நிலையத்தை பயணிகளோ, விமான நிறுவனங்களோ பயன்படுத்த முன்வரவில்லை.
எமிரேட்ஸ், எடிஹாட், கட்டார் எயார்வேய்ஸ், எயார் சைனா போன்ற பல நிறுவனங்கள் மத்தலவுக்கு சேவை நடத்த போட்டி போடுவதாக முன்னர் அரசாங்கம் கூறியது.
ஆனால் இந்த விமான நிலையத்தை அமைத்துக் கொடுத்த சீனாவின் விமான நிறுவனம் கூட இதுவரை மத்தலவைத் திரும்பிப் பார்க்கவில்லை.
இலங்கைக்கு அதிகளவில் வரும் சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்தே வருகின்ற நிலையில், எந்தவொரு இந்திய நிறுவனமும் மத்தலவுக்கு சேவையை நடத்த முன்வரவில்லை.
மிஹின் லங்கா அவ்வப்போது புத்தகாயாவுக்கும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாங்கொக், பெய்ஜிங், ரியாத், மாலே ஆகியவற்றுக்கு வாரத்தில் வெறும் எட்டு சேவைகளையும் மட்டுமே நடத்தி வருகின்றன.
இவைகூட கட்டுநாயக்க விமான நிலையம் வழியாகவே இயக்கப்படுகின்றன.
பெய்ஜிங்கிற்கான சேவை அம்பாந்தோட்டையில் உள்ள சீன கட்டுமானப் பணியாளர்களை மையப்படுத்தியே நடத்தப்படுகிறது.
கொமன்வெல்த் விளையாட்டுப்போட்டி மற்றும் உச்சி மாநாடு என்பவற்றை அடிப்படையாக வைத்து மத்தல விமான நிலையத்தை பிரபலப்படுத்தலாம் என்று அரசாங்கம் நினைத்திருந்தது.
ஆனால் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை கோல்ட கோஸ்ட் நகரம் பறித்துக் கொண்டதும் கொமன்வெல்த உச்சி மாநாடு கூட கொழும்புக்கு மாற்றப்பட்டதும் மத்தலவுக்கு பின்னடைவு தான்.
எரிபொருள் சேமிப்பு வசதி கூட செய்யப்படாமல் உலகில் உள்ள ஒரு விமான நிலையமாகவும் மத்தல விளங்குகிறது.
இது திறக்கப்பட்டு இப்போது தான் இரண்டு மாதங்களாகின்றன.
எனவே இதன் வெற்றி தோல்வியை உடனடியாக முழுமையாக மதிப்பிட முடியாவிட்டாலும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டளவுக்கு இது வெற்றிகரமான திட்டமாக இல்லை என்பதே உண்மை.
லக்விஜய மின் நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீனாவின் 1.35 பில்லியன் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் மற்றொரு பாரிய திட்டமாகும்.
900 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த மின் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் தான் முடிந்துள்ளன.
இங்கு மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகப் போகின்றன.
இந்தக் காலத்தில் உற்பத்திக் குறைபாடுகள், தீ விபத்து, கோளாறுகள் என்று அடிக்கடி மின் உற்பத்தி தடைப்படுவது வழக்கமாகி விட்டது.
இதன் காரணமாக இதன் நிர்வாகத்தை சீனாவிடமே ஒப்படைத்து விடப் போவதாகவும் செய்திகள் பரவின.
அரசாங்கம் அதனை மறுத்திருந்த போதிலும் அப்படியானதொரு திட்டம் அரசாங்கத்துக்கு இருப்பதாகவே தெரிகிறது.
நுரைச்சோலை அனல் மின் திட்டத்தை சீனாவிடமே ஒப்படைத்து விடும் முடிவை அரசாங்கம் எடுக்குமேயானால்' அது தான் சீனாவுக்கு கிடைக்கப் போகின்ற மிகப் பெரிய வெற்றியாக அமையும்.
இலங்கையில் சீனா மிகப் பெரிய திடங்களில் போட்டுள்ள முதலீடுகளுக்கெல்லாம் ஒரு அடிப்படை இலக்கு உள்ளது.
அது ஒன்றும் அரசியல் அல்லது பொருளாதார நலன் சார்ந்த விடயமல்ல. இராணுவ நலன் சார்ந்த விடயம்.
நுரைச்சோலை அனல் மின் நிலையம் உள்ளிட்ட திட்டங்களில் இதுவரை சீனா முதலீடுகளைச் செய்துள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது ஆனால் நிர்வாகத்தை ஏற்று நடத்தவில்லை.
நுரைச்சோலை சீனாவிடம் கையளிக்கப்பட்டால் அது சீனாவின் நிர்வாகத் தலையீடுகள் இலங்கையில் தலைதூக்குவதன் அடையாளமாக இருக்கும்.
அது ஒரு கட்டத்தில் மத்தலவுக்கும் மாகம்புரவுக்கும் கூடப் பரவலாம்.
அத்தகைய கட்டத்தில் சீனாவின் இராணுவ ரீதியான எதிர்பார்ப்பு முழுமையடையும்.
திட்டங்களின் சாத்தியமின்மை குறித்து விரிவாக ஆராயப்படாமல் அரசியல் ரீதியாக எடுக்கப்படும் முடிவுகள் எந்தளவுக்கு ஆபத்தானவை என்பதற்கு சீனாவின் முதலீட்டுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களே சாட்சியாக உள்ளன.
இந்தச் சீன முதலீடுகள் இலங்கையை கடனுக்குள் மட்டும் தான் மூழ்கச் செய்யப் போகிறதா? அல்லது அதற்கு அப்பாலும் அதன் விளைவுகள் தொடரப் போகின்றனவா? என்பன முக்கியமான கேள்விகளாக உள்ளன.
ஹரிகரன்

Geen opmerkingen:

Een reactie posten