தமிழரசுக்கட்சி தனது முடிவில் இருந்து மாறவில்லை எனவே நான்கு கட்சிகளும் இணைந்து ஓர் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான குழுவினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நேற்று நடாத்திய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தொவித்தார்.
இதேவேளை, மேற்படி சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் இணக்கப்பாடு ஏற்படவில்லை என தெரிவித்திருந்ததுடன் தமிழரசுக்கட்சி தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படாது சந்திப்பு நிறைவடைந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
ITAK இரா. சம்பந்தன் கருத்து
இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் எம்.பியுமான இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவை ஏற்படுத்துவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் சில முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.
அவர்களது முயற்சிக்கு சகல அங்கத்துவ கட்சிகளும் பரிபூரணமாக ஒத்துழைப்பை கண்டு சமரசமாக ஓர் முடிவை காண முயற்சிக்க வேண்டும் என்ற முடிவே ஆயருடனான சந்திப்பில் போது எடுக்கப்பட்டுள்ளது.
சிவில் அமைப்புக்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் தற்போது தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற மிகவும் பாரதூரமான பிரச்சனைகள் இனப்படுகொலை தொடர்பான பிரச்சனைகள் சம்பந்தமாக மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக தமிழ சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழ் சிவில் சமூக அமைப்புகள் என்பவற்றையும் ஒற்றுமைப்படுத்தி இதனை எவ்விதமாக கையாள வேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டு அவை நிறைவேற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது என்றார்.
TULF வீ. ஆனந்தசங்கரி கருத்து
இந்த சந்திப்பு தொடர்பில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய விவாதம் பயனுள்ள விவாதமாக இல்லை. ஒவ்வொருவரும் தங்களினுடைய குறைகளை கூறிக்கொண்டிருந்தார்களே தவிர தமிழத்தேசியக்கூட்டமைப்பை பதிவதா? இல்லையா? என்ற நோக்கத்திற்காக கூடியிருந்த நோக்கம் நிறைவேறவில்லை.
தமிழ் தேசியக்கூட்டமைப்பை கைவிட முடியாது அது உலக அங்கீகாரம் பெற்றது என சம்பந்தர் சில காரணங்களை கூறியிருந்தார். அதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். எனினும் அது அவருடைய செல்வாக்கை கொண்டு அங்கீகாரம் பெறவில்லை. அது தமிழ் மக்களினுடைய பிரதிநிதித்துவத்துக்கு உற்சாகம் கொடுக்கப்படவேண்டும் என்பதற்காக அவ்வாறு சொல்லப்பட்டது. எனவே, 5 கட்சிகளை சேர்த்து பதிவு செய்திருக்கவேண்டும். அவ்வாறு பதிவு செய்யாதது பெரும் தவறு.
ஏனெனில் 5 கட்சிகளும் சேர்ந்து செயற்பட்டால் தான் எமது பிரச்சனைக்கு ஏதோ ஒரு வழி கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் அடிப்படையிலதான் நானும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். ஆனால் இங்கு நடந்ததெல்லாம் அதற்கு மாறாக விவாதிப்பதும் தமது கொள்கைகளை கூறுவதுமாக இருந்தார்களே தவிர முக்கியத்துவப்படுத்தி எதனையும் கலந்துரையாடவில்லை. முக்கியமான விடயங்களுக்கு தீர்வு எடுக்கப்படவுமில்லை என தெரிவித்தார்.
அடைக்கலநாதன் எம்.பி கருத்து
இந்த சந்திப்பு தொடர்பில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
பதிவு செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட முதல் அமர்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்படவேண்டும் என்ற ரீதியில் விவாதிக்கப்பட்டது. இதன்போது பங்கு தந்தையொருவர் இவ்வாறு பதிவதற்கு 5 கட்சிகளும் உடன்பாட்டுடன் உள்ளீர்களா? அல்லது நான்கு கட்சிகள் உடன்பாட்டுடன் உள்ளீர்களா? என கேட்டபோது அதற்கு எனது கருத்தாக தமிழீழ விடுதலை இயக்கம் நல்லெண்ண முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. அது தொடர்பான சந்திப்புக்களை நாம் தமிழரசுகட்சியுடன் மேற்கொண்டுள்ளோம். இந்தவகையில் தமிழரசுக்கட்சி சில விட்டுக்கொடுப்புகளுக்கு புரிந்துணர்வின் அடிப்படையில் வருவதாக தெரிவித்துள்ளனர்.
அந்த அடிப்படையில் உயர்மட்டக்குழு அமைக்கின்றபோது ஏனைய நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் கூடுதலான அங்கம் வகிப்பதற்கு இணக்கம் தெரிவித்துமுள்ளனர். இதேபோல் புரிந்துணர்வு அடிப்படையில் தேர்தல் திணைக்களத்தில் பதிந்து செயற்படுவதற்கும் தமிழரசுக்கட்சியினர் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் ஒரு வாரத்துள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கான பொறுப்பு சுமந்திரன் எம்.பி யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை ஏனைய கட்சிகளுடன் இணைந்து விவாதித்து செயற்படலாம் என எங்களுக்குள் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கு பின்னரே பதிவுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலும் பதிவு விடயம் தொடர்பில் கலந்துiiயாடவதற்கு போதுமான கால அவகாசம் இல்லாததாலும் பதிவு விடயம் தொடர்பான சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது என தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten