கஸ்டப் பிரதேச சேவையை பூர்த்தி செய்யாத காரணத்தினால் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை: எஸ்.சத்தியசீலன்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 06:48.26 AM GMT ]
பூநகரிக் கோட்டத்தில் கடமையாற்றும் வழக்குத் தாக்கல் செய்த மூன்று ஆசிரியர்களும், குறிக்கப்பட்ட நிபந்தனையாகிய ஐந்து வருட கஸ்டப் பிரதேச சேவையை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இடமாற்றம் வழங்கப்படவில்லை என வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்திசீலன் தெரிவித்தார்.
கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூநகரிக் கோட்டத்தில் கடமையாற்றும் மூன்று ஆசிரியர்கள் கடந்த வருடம் தமக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக கேட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் 2012 ஆம் ஆண்டு இடமாற்றத்திற்கு தகுதியுடையவர்களுக்கு சில நிபந்தனைகள் வழங்கப்பட்டன. அந்நிபந்தனைகளாக கஸ்டப் பிரதேசத்தில் ஐந்து வருடங்கள் சேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அல்லது வசதியான பிரதேசமாக இருந்தால் ஆறு வருடங்களை வன்னிப் பிரதேசத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இவை இரண்டையும் பூர்த்தி செய்யாத காரணத்தினால் வழக்குத்தாக்கல் செய்த மூன்று ஆசிரியர்களுக்கும் கடந்த வருடம் இடமாற்றம் வழங்கப்படவில்லை என செயலாளர் எஸ்.சத்திசீலன் மேலும் தெரிவித்தார்.
குறித்த ஆசிரியர்கள், வடமாகாண ஆளுநர், வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் வடமாகாண கல்விப் பணிப்பாளர், இடமாற்ற சபைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்றையதினம் வழக்குத்தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கச்சதீவு இலங்கைக்கே சொந்தம்! தமிழக அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை: டக்ளஸ் தேவானந்தா
[ சனிக்கிழமை, 11 மே 2013, 07:10.22 AM GMT ]
இலங்கை - இந்தியாவுக்கிடையே ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது. அதனைக் கோரும் உரிமை தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை மீட்பது தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1974ம் ஆண்டு இலங்கைக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்றின் மூலம் கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
கச்சத்தீவை மீட்டெடுப்பது தொடர்பில் அண்மையில் தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததோடு, திமுக தலைவர் கருணாநிதி உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
எனினும், ஜெயலலிதாவின் கோரிக்கையானது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதென டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளினதும் மீனவர்களது வாழ்வாதாரப் பிரச்சினையாக இதனைக் கருத வேண்டுமென அவர் டக்ளஸ் வலியுறுத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten