தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 mei 2013

கிளிநொச்சி அறிவகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு !


“கனவுகளுடன் வீழ்ந்து போனவர்களின் எண்ணங்கள் விரைவில் ஈடேற வேண்டுமென்ற உறுதியுடன்” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஆத்ம சாந்தி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
2009ம் ஆண்டு மே மாதம் மனித நேய நடவடிக்கை என்ற பெயரால் இலங்கை அரசாங்கத்தால் முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
முள்ளிவாய்க்காலில் இறந்துபோன ஆன்மாக்களின் ஈடேற்றம் வேண்டி இன்று காலை 8 மணிக்கு சைவ ஆராதனை நிகழ்வும் கிறிஸ்தவ ஆராதனை நிகழ்வும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அவர்களுடன், தமிழரசுக் கட்சிக்கான கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு. பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் நா.வை குகராசா, உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன், மா. சுகந்தன், ப. குமாரசிங்கம், சேதுபதி, இ.பொன்னம்பலநாதன், தவபாலன், சி.சிவச்செல்வன், வி.சுவிஸ்கரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன், மனித உரிமை செயற்பாட்டாளர் சத்தியானந்தன், அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தன், வர்த்தக சங்கத் தலைவர் தி.சிவமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முள்ளிவாய்கால்- கெலைக்களத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அனுட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 3.30மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் தலைமையில் முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவு நாள் அமைதியாக நடைபெற்றது.
இதன்போது பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தீபங்களை ஏற்றியும், மலர் சொரிந்தும் அஞ்சலிகளை செலுத்தினார்.
இதன் பின்னர் மாலை 5.30 மணியளவில் தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்ட து.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராசா மற்றும் சி.சிறீதரன், ஈ.சரவணபவன் ஆகியோரும் மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்திகளை ஏந்தி அனைவரும் அமைதியான முறையில் அகவணக்கத்துடன் நினைவு கூர்ந்தனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா,
முள்ளிவாய்கால் மண்ணில் எங்கள் மக்கள் எந்தவொரு நோக்கத்திற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தார்களோ, அந்த நோக்கத்தை அடையும்வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம் என உறுதிபூணுவதாக தெரிவித்ததுடன், தமிழினத்திற்காகவும், அதன் விடுதலைக்காகவும் போராடி மடிந்தவர்களின் நினைவிடங்களையும், துயிலுமில்லங்களையும் இடித்து மண்ணோடு மண்ணாக்கி அதில் இராணுவ முகாம்களையும், நினைவுத்தூபிகளையும் இராணுவம் கட்டலாம்.
ஆனால் அந்த ஒழுக்கம் மிக்க. நாகரீகம் மிக்க மனிதர்களின் நினைவுகளை எங்கள் மனங்களிலிருந்து ஒருபோதும் அகற்ற முடியாதென குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த இரு நிகழ்வுகளுக்காகவும் யாழ்.பிரதான வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி ஆகியவற்றில், இராணுவ புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்திருந்ததை காணமுடிந்தது.

Geen opmerkingen:

Een reactie posten