த.தே.கூட்டமைப்பிற்கும் த.தே.ம. முன்னணிக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:15.39 PM GMT ]
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் கடந்த 11ம் திகதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும், சிவில் சமுகத்திற்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் விளக்கமளிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
நேற்று காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த கருத்துக்கள்.
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, அங்கு மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான செயல்நுட்ப உதவிகளை (Technical support) வழங்க கொமன்வெல்த் செயலகம் முன்வந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 11ம் திகதி மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் மன்னாரில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. முதல் சந்திப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுள் அங்கம் பெறும் கட்சிகளுக்கிடையில் நடைபெற்றிருந்தது.
அந்தச் சந்திப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அங்கு பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் எமக்கு எதுவும் தெரியாது.
இந்நிலையில் காலை 11மணி தொடக்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சிவில் சமுகத்திற்குமிடையில் மாலை 6.30மணிவரையில் இடம் பெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பின்போது 3 முக்கியமான விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.
அதில் முதலாவது விடயம் த.தே.கூ மற்றும் த.தே.ம.மு இரு கட்சிகளுக்கும் சிவில் சமுகத்திற்குமிடையில் ஒருங்கிணைந்த பொது வேலைத்திட்டத்தை உருவாக்குவது, தொடர்பில் பேசப்பட்டது. அந்த இணைக்கப்பாட்டிற்கு வருகின்றபோது தமிழ்த் தேசிய மக்கள் அவை ஒன்றை அமைக்கின்ற நோக்கில் அந்த பொது வேலைத்திட்டம் அமையலாமா என்ற என்றும் பேசப்பட்டது.
இரண்டாவது விடயம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது பற்றியும் அதற்காக கட்சிகளுக்கிடையிலும் சிவில் சமுகத்திற்கிடையிலும் ஏற்படுத் துவது தொடர்பில் பேசப்பட்டது.
மூன்றாவது விடயம் விரைவில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஒரு பொது இணக்கப்பாடு காணப்படவேண்டும் என்றும் பேசப்பட்டது. இவற்றினடிப்படையில் நாம் மிக தெளிவாக ஒரு விடயத்தை கூறியிருந்தோம்.
அது என்னவென்றால் கட்சிகளுக்கிடையிலும், சிவில் சமுகத்திற்கிடையிலும் ஏற்படுத்தப்படும் பொது வேலைத்திட்டம், நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பிற்கு முற்றுப்புள்ளியிடும் வகையிலும், இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலும் அமையவேண்டும் என குறிப்பிட்டிருந்தோம்.
அதற்கு மிக முக்கியமான தேவை கொள்கை ரீதியிலான உடன்பாடு. குறிப்பாக ஒரு பொது வேலைத்திட்டத்திற்கு நாம் உடன்பட்டு மக்களை திரட்டி போராட்டங்களை நடத்துகின்ற போது அந்த மக்கள் போராட்டங்களுக்காக தியாகங்களை, இழப்புக்களை சந்திப்பார்கள். எனவே அவர்களுக்கு நாம் கொடுக்கும் இறுதி தீர்வு பிழையானதாக அமைய முடியாது.
அளப்பரிய தியாகங்களையும், இழப்புக்களையும் சந்தித்து போராட்டங்களை நட த்துகின்ற மக்களுக்கு 13வது திருத்தச்சட்டத்தை தீர்வாக காண்பிக்க முடியாது. எனவே பொது வேலைத்திட்டம் என்பதற்கும் அரசியல் தீர்வு என்பதற்குமிடையில் வேறுபாடுகள் எவையுமில்லை. இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதை நாம் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கின்றோம்.
எனவே அரசியல் தீர்வு தொடர்பாக இணக்கப்பாடு ஏற்படும் நிலையிருந்தால் மட்டுமே நாம் பொதுவேலைத்திட்டத்திற்கு இணங்க முடியும் என நாம் தெளிவாக கூறிவிட்டோம். ஆனால் பொது வேலைத்திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடிய தமிழ்த் தேசிய மக்கள் அவை என்பதை நாங்கள் வரவேற்றிருக்கின்றோம்.
இதேபோன்று சிங்கள தேசத்தின் அரசியல் பலத்திற்கு மாற்றீடாக தமிழ்த் தேசம் ஒரு அரசியல் பலத்தை கட்டியெழுப்பாமல் சிங்கள தேசம் எம்மை திரும்பி கூட பார்க்கப் போவதில்லை. அந்த அரசியல் பலத்தை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் அவையினை நாங்கள் உருவாக்கலாம் என நாம் நம்புகின்றோம்.
மேலும் உருவாக்கப்படும் மக்கள் அவை வெறுமனே அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையாமல், தமிழ் தேசத்தையே பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைய வேண்டும்.
தமிழ் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படாமல் இறுதித்தீர்வு எட்டப்படுவது தொடர்பில் எமக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் ஒரு வாக்குவாதம் இடம்பெற்றது. அந்த இடத்தில் எங்களுடைய நிலைப்பாடுகளை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது. அல்லது பொருத்தமாக கருதாது என்ற நிலைப்பாட்டை சிலர் வெளிப்படுத்தினார்கள்.
அந்த இடத்தில் நாம் தெளிவாக கூறியிருக்கின்றோம். நாங்கள் தனிநாடு குறித்துப் பேசவில்லைல. அது குறித்துப் பேசவும் முடியாது. ஆனால் தனிநாட்டுக்கு மாற்றீடான தீர்வாக தமிழ் தேசத்தின் அங்கீகரம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கின்ற தீர்வாக அது அமைய முடியும். இதேபோல் சிங்கள தேசத்தின் அங்கீகாரமும் பெறப்பட்டு இரு தேசங்களின் கூட்டாகவே இறுதியான தீர்வு அமைய முடியும்.
இந்த தீர்வுக்கும் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. 13வது திருத்தம் சுயநிர்ணய உரிமையினை நிராகரிக்கின்ற பாதை. இந்த இடத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தலையிட்டு நாங்கள் குறிப்பிடும் விடயத்திற்கும் தாங்கள் குறிப்பிடும் விடயத்திற்கும் பாரிய வேறுபாடுகள் எவையும் இல்லை என குறிப்பிட்டார். ஆனால் அது உண்மையல்ல. இரண்டிற்குமிடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. அந்த விடயத்தை நாங்கள் குறிப்பிட்டிருக்கின்றோம்.
இந்த நிலையில்தான் பொது வேலைத்திட்டத்திற்கு அமைய 4 பேர் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் பணி இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக.அந்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி புவிதரன் மற்றும் சட்டத்தரணி கு. குருபரன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இந்த குழு விரைவில் கூடி ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காகவும், இறுதித் தீர்வு என்ன? அதற்கான பாதை எது என்பது தொடர்பில் ஆராயவுள்ளோம். மாகாணசபை குறித்துப் பேசுகின்றபோது கடுமையான வாக்குவாதம் இடம்பெற்று இணக்கப்பாடு காணப்படாத நிலையில் முடிவுற்றது. என்றார்.
கொமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னதாக இலங்கையில் மனித உரிமை வேலைத்திட்டம்!
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:40.35 PM GMT ]
மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றி தேசிய மட்டத்திலான விசாரணை நடத்துவது பற்றி கொமன்வெல்த் செயலகத்தின் ஊடாக பல நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் டாக்டர் பிரதீபா மஹாநாம தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த் செயலாளர் கமலேஷ் ஷர்மா குழுவினருடன் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், அடுத்த 6 மாத காலத்துக்குள் இந்த செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்பொருட்டு, வட அயர்லாந்து, கென்யா, உகண்டா, சியேராலியோன் உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் இலங்கை வந்து நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய தேசிய விசாரணை நடைமுறை தொடர்பில் பயிற்சிகளை வழங்குவார்கள் என்றும் டாக்டர் மஹாநாம கூறினார்.
இலங்கையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினருக்கு மனித உரிமைகள் பற்றி தெளிவூட்டும் வேலைகளும் பல வாரங்களாக நடந்துள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் கூறினார்.
கொமன்வெல்த் மாநாடு நடக்கவுள்ள இலங்கையின் மீதே அனைத்து தரப்பினரின் கவனமும் குவிந்துள்ளதாகவும், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் குற்றஞ்சாட்டுவோர் இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் பார்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொமன்வெல்த் செயலாளரும் செயலக அதிகாரிகளும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலைப் போலல்லாது, இலங்கையுடன் ஒத்துழைத்துச் செயற்படுகிறது என்றும் பிரதீபா மஹாநாம கூறினார்.
இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கவில்லை என்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் தேங்கிக் கிடப்பதாகவும் சர்வதேச மட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன.
ஆனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்களையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மறுக்கிறது.
இலங்கையில் இறுதிக்கட்ட போர்க்காலத்தில் நடந்த பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யும் சுயாதீனமான விசாரணைகளை இலங்கை நடத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவது காமன்வெல்த் விழுமியங்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனை என்றும் கனடா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten