| அதிபர் தேர்தலில் குமார் பொன்னம்பலத்தை ஆதரிக்காமல் கொப்பேகடுவவையை வெற்றி பெறச் செய்த வடக்கு கிழக்கு மக்களின் இதயத்தைத் தனக்கு நன்றாகத் தெரியும் என்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று காலை நடைபெற்ற போர் வெற்றிவிழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தாய்நாட்டை மீட்டெடுத்த வெற்றிவிழாவை நான்காவது ஆண்டாகவும் கொண்டாடுவதையிட்டு பெருமை கொள்கிறேன். சிறிலங்காவின் வரலாற்றில், நாடு ஒன்றிணைக்கப்பட்ட முக்கியமான சந்தர்ப்பம் இது. தாய்நாட்டை மீட்டெடுப்பதற்காக இலட்சக்கணக்கானோர் பலியானார்கள், உடல் உறுப்புகளை இழந்தனர். இரத்தம் மற்றும் வியர்வையை பூமிக்கு அர்ப்பணித்தனர். அவ்வாறான தனித்துவம்மிக்க சிறிலங்காப் படையினரை சிலர் அனைத்துலக தூக்குமேடைக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஒரு காலத்தில் காலிமுகத்திடல் மூடப்பட்டிருந்தது. மத்திய வங்கிக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு அருகில் இருக்கும் அதிபர் மாளிகைக்கும் குண்டு லொறி அனுப்பப்பட்டது. அவற்றுக்கு அருகிலுள்ள விடுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அனுராதபுரம் மகாபோதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காத்தான்குடியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாத்தறையில் முஸ்லிம்களின் பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் மகிந்த விஜேசேகர இன்னும் குணமடையாமல் இருக்கிறார். நாட்டில் பல இடங்கள் மற்றும் சந்திகள், புலிகள் நடத்திய தாக்குல்களைக் கொண்டு அடையாளப்படுத்தப்படும் நிலை காணப்பட்டது. அந்த இடங்களை கடந்து செல்லும் போது இந்த இடத்தில் தான் அதிபர் பிறேமதாச கொல்லப்பட்டார். இந்தச் சந்தியில் தான் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க கொல்லப்பட்டார் என்று அடையாளப்படுத்துகின்றனர். நாட்டில் எங்கும், எந்த இடத்துக்கும் சென்று, எதனையும் செய்யும் வகையில் புலிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட காலமொன்றும் இருந்தது. இதயத்தில் மரண பயமிருந்த நாடாகவும் இந்த நாடு இருந்தது. மக்களை மீட்டெடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை. சமாதானத்திற்காக அழைத்து வந்தவரை கொலை செய்தனர். மக்கள் தாக்கப்பட்டபோது ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தில் இருந்த அதிபர், மக்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார். புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவிய அதிபர் புலிகளினாலேயே கொல்லப்பட்டார். சமாதானத்திற்கு அழைத்து வந்த இந்தியப் பிரதமரையும் புலிகள் இந்தியாவில் வைத்தே கொலை செய்தனர். புலிகளுடன் மோதவேண்டாம் அவர்கள் கேட்பதைக் கொடுக்குமாறு அனைத்துலகம் எம்மிடம் அடிக்கொரு தடவை ஆலோசனை கூறியது. எனினும், நாம் எமது இளைஞர்களின் பலம் மற்றும் வீரத்தில் நம்பிக்கை கொண்டோம்;. பயத்தை ஒழித்து நம்பிக்கை ஊட்டினோம். அவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றி சிறுபிள்ளைகளின் இதயங்களுக்கே நன்றாக புரிகின்றது. புரிந்துணர்வு உடன்பாடு மூலமாக நாட்டை பிரித்து கொடுக்கவும் முயற்சித்தனர். அவ்வாறானவர்களே குளங்களை கட்டிய மன்னனான மகாசேனனின் பெயரை புயலுக்கு சூட்டுமாறு 2003ம் ஆண்டு பரிந்துரை செய்தனர். வடமாகாணத்தை பொறுத்தவரையில் 12 கட்சிகள் தமது அரசியல் செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுக்கின்றன. பயந்து கொண்டு கொழும்பிலிருந்து அன்று அரசியல் செய்தவர்கள் இன்று எந்த அச்சமும் இன்றி அரசியல் செய்கின்றனர். வடக்கு கலாசாரத்தை நாசப்படுத்துவதற்கு பிரபாகரனும் புலம்பெயர்ந்தவர்களும் முயற்சித்தனர். மனித கேடயங்களாக தடுத்து வைக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்த போது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. புலம்பெயர்ந்தவர்களும் முன்வரவில்லை அவர்களுக்கு இராணுவமும் அரசாங்கமுமே உணவு கொடுத்தது. தூக்குமேடை வரை செல்ல வேண்டியவர்களுக்கு நாம் மன்னிப்புக் கொடுத்தோம். பலர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர். வேறு நாடுகளில் இவ்வாறான நடைமுறை இல்லை. சிவில் பாதுகாப்புப் படையில் 4000 தமிழர்களை இணைத்துள்ளோம். முப்படைகளிலும் இணைவதற்கு தமிழர்கள் வரிசைகளில் நிற்கின்றனர். படைகளில் தமிழர்கள் இணைவதை தெற்கில் உள்ளவர்கள் எதிர்க்கவில்லை, வடக்கில் உள்ள சிலரும் புலம்பெயர்ந்தவர்களுமே எதிர்த்தனர். அதனால் தான் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா மனிதஉரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதற்கு எதிராக கிளிநொச்சியில் மக்கள் அணி திரண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை நான் நன்கு அறிவேன். அதிபர் தேர்தலில் குமார் பொன்னம்பலத்தை தோல்வியடையச் செய்து கொப்பேகடுவையை வெற்றி பெறச் செய்தவர்கள் அவர்கள். காலத்திற்கு காலம் ஊடகசுந்திரம் மற்றும் மனிதஉரிமை பிரச்சினைகள் தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் குரல் கொடுப்பர். அதற்கெல்லாம் நான்கு மாதங்களுக்கு ஒருதடவை நாங்கள் பதிலளித்து கொண்டிருக்கிறோம். ஒன்றிணைக்கப்பட்ட நாட்டின் ஒரு அங்குலத்தையேனும் பறிப்பதற்கோ அல்லது, பிரிப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். http://lankaroad.com/index.php?subaction=showfull&id=1368864710&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 21 mei 2013
வடக்கு,கிழக்கு மக்களின் ‘பலவீனம்‘ தனக்குத் தெரியும் என்கிறார் மகிந்த
Abonneren op:
Reacties posten (Atom)

Geen opmerkingen:
Een reactie posten