தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

யாழ். பல்கலைக்கழக இசைத்துறைக்குள் நடப்பது என்ன? வெளியில் தெரிந்தவைகளும் தெரியாதவைகளும்!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இசைத்துறைக்குள் நடைபெற்றுவரும் குழப்பங்கள் தொடர்பான செய்திகள் அண்மைக்காலமாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதில் முந்திக்கொண்டு செய்தியை வழங்கும் போக்கிலான சில தகவல்களே வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவற்றிலும் வெளியிடப்பட்ட செய்திகள் முழுமை பெறாமலும் தொடர்ந்து அவ் விவகாரம் தொடர்பான தகவல்கள்; தராமல் இடைநடுவில் கைவிடப்பட்டவையாகின. இசைத்துறைக்குள் குழப்பம் ஒன்று உள்ளது என்பதை மட்டும் காட்டிவிட்டு அனைத்தும் அடங்கிவிட்டன.
இன்றைய அவசர உலகில் நாம் எதனையும் முழுமையாகத் தெரிந்து கொள்ள முற்படுவதில்லை. நுனிப்புல் மேய்வது போல் மேலோட்டமாகவே தெரிந்து கொள்கின்றோம்.
இறுதியில் அவற்றின் அடிப்படையிலேயே முடிவுகளையும் எடுத்து விடுகின்றோம். இதனால் அதுதான் காரணம் அல்லது அதுதான் இறுதி முடிவு என்ற தீர்மானத்திற்கு வந்துவிடுகின்றோம்.
அவ்வாறானதொரு தன்னிசைவான நிலைப்பாட்டை முந்திவரும் செய்திகள் உருவாக்கிவிடுகின்றன. இதனால் ஒரு பக்கப் பார்வை மட்டும் மேலோங்கி, நடுநிலை தவறிப்போகின்றது.
இசைத்துறைக் குழப்பத்திற்கு காரணம் என்ன?
யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் 1964 ஆம் ஆண்டு இராமநாதன் அக்கடமி என்ற பெயரில் கவின்கலைக் கழகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வந்துள்ளது. இதனை ஆரம்பத்தில் இந்தியாவின் பிரபல இசைமேதை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நிர்வகித்து வந்துள்ளார். அதன் பின்னர் அவரின் மகன் மகாராஜபுரம் சந்தானம் என்பவர் நிர்வகித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து பல இசைமேதைகள் இங்கு வருகை தந்து கவின்கலைப் பாடங்களைக் கற்பித்துள்ளனர். அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கவின்கலைப் பயிற்சிகளை வழங்குவதில் புகழ்பெற்ற அக்கடமியாக இது விளங்கியுள்ளது.
ஆரம்பத்தில் தனியார் நிறுவனமாக இயங்கி வந்த அக்கடமியை 1974 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கை அரசாங்கம் பொறுப்பெற்றுக்கொண்டது. 1975 இல் அரசாங்க்தின் கீழ் கல்வி இலாகவாக இது இயங்கி வந்துள்ளது.
இக்காலப்பகுதியிலும் இந்த அக்கடமியில் இருந்து வாய்ப்பாட்டு, நடனம், வயலின், மிருதங்கம் போன்ற கலைகளைப் பயின்று பலர் புகழ்பெற்று விளங்கினர். பின்னர் 1978 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இராமநாதன் அக்கடமி இணைத்துக் கொள்ளப்பட்டது.
1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதிருந்த துணைவேந்தர் சு. பாலசுந்தரம்பிள்ளையினால் இங்கு கற்பிக்கப்படும் கலைப்பாடங்கள் பட்டதாரிக் கற்கைக்குத் தரமுயர்த்தப்பட்டன.
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதன் பின்னர் இசைத்துறை, நடனத்துறை, சித்;திரமும் வடிவமைப்பும் என முன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதிகமான மாணவர்களை உள்வாங்கிக்கொண்டு இங்கு பட்டதாரிக் கற்கைநெறி ஆரம்பமானது.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் ஆளுகையின் கீழ் இயங்கி வருகின்ற போதும் இங்கு கற்பிக்கப்படும் துறைகளுக்கு தனித்தனியாக தலைமைப் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி நடனத்துறைக்கு தலைவராக திருமதி அருட்செல்வி கிருஸ்ணராஜாவும் இசைத்துறைக்கு தலைவராக கலாநிதி ந.வி.மு. நவரத்தினமும் சித்திரமும் வடிவமைப்புக்குத் தலைவராக கலாநிதி சனாத்தனனும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இசைத்துறைத் தலைவர் கலாநிதி ந.வி.மு. நவரத்தினம் கடந்த 2012 ஆம் ஆண்டு 20 மாதகால விடுமுறையில் சென்றுள்ளதால் அப்பதவிக்கு தற்காலிகமாக ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
விடுமுறைக்குப் பின்னர் இவர் தலைவர் பதவிக்கு வரும்போது 3 வருடகாலப் பகுதியான இதில் இவரால் 2 வருடங்களும் 8 மாதங்கள் வரையே இருக்கமுடியும். காரணம் அவர் அரச பதவி ஒன்றில் இருப்பதற்கான வயதெல்லையை இக்காலப் பகுதியில் கடக்கின்றார். இதனால் இப்பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கலாநிதி ந.வி.மு. நவரத்தினத்திற்குப் பின்னர் இப்பதவிக்கு வரக்கூடிய அனைத்து தகுதிகளுடனும் இருப்பவர் தற்போது முதுநிலை விரிவுரையாளராகவுள்ள கலாநிதி தர்சனன். அதற்கமைய அவருக்கு அப்பதவியை வழங்குவதற்காக முதல் 3 மாதங்கள் பல்கலைக்கழகத்தினால் தகுதிகாண் கால பதவி வழங்கப்பட்டது.
இதன்போதே கலாநிதி தர்சனன் மீது குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்டன. இதன் பின்னர் மீண்டும் 3 மாதங்களுக்கு தகுதி காண் கால பதவி வழங்கப்பட்டது. இதன் பதவிக்காலமும் கடந்த மாதம் 25 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. தற்போது இசைத்துறைக்குத் தற்காலிகத் தலைவராகவும் இணைப்பாளராகவும் கலைப்பீடாதிபதி இருந்து வருகின்றார்.
தர்சனன் மீதான குற்றச்சாட்டுகள்
இசைத்துறையின் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவரான கலாநிதி தர்சனன் மீது தற்போது ஒரு தரப்பினரால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு கலாநிதி தர்சனன் இசைத்துறைக்குத் தலைவராக வருவதை அவர்கள் எதிர்த்து வருகின்றனர்.
கலாநிதி தர்சனன் தலைவராக வந்தால் எதிர்காலத்தில் இசைத்துறையினரும்; மாணவர்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்குவார்கள். இத்தகைய பாலியல் குற்றச்சாட்டு உடையவர் தலைமைப் பதவிக்குத் தகுதியற்றவர் என அவர்கள் வாதாடி வருகின்றனர்.
இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போரால் அதனை சரியான ஆதாரங்களுடன் நிருபிக்கமுடியவில்லை. எழுந்தமானமாகவே இந்தக் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றார்கள் என தர்சனன் தெரிவிக்கின்றார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு விரிவுரையாளர் தர்சனன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தன்னிடம் கல்வி கற்கும் மாணவிகளுடன் தர்சனன் ஆபாசமாக உரையாடுகின்றார். அவர்களை தனியாக வருமாறு அழைக்கின்றார் என்ற குற்றச்சாட்டுகள்.
இதற்கான ஒலி ஆதாரமும் இருப்பதாக குற்றம்சாட்டும் பகுதியினரால் கூறப்பட்டது. பின்னர் அதனை அவர்கள் இறுவெட்டிலும் வெளியிட்டு மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் விநியோகித்திருந்தனர்.
இதன் ஒரு பிரதியை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் அவர்கள் அனுப்பி வைத்ததுடன் அதன் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தது. அதற்கமைய பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒலி வடிவ ஆதாரம் பொய்யான குற்றச்சாட்டு எனத் தீர்ப்பாகக் கூறப்பட்டது.
இவை அனைத்தும் 2011 ஆண்டிலேயே நிறைவடைந்துவிட்டன. ஆனாhல் அத்தீப்பை குற்றச்சாட்டை முன்வைத்த தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. பக்கச்சார்பான தீர்ப்பு எனக் கூறிவந்துள்ளனர்.
கலாநிதி தர்சனன் மீது அடுத்த குற்றச்சாட்டாக சுமத்தப்பட்டிருப்பது பல்கலைக்கழக சட்டத்திற்குப் புறம்பானதாக பாடநேர அட்டவணையைத் தயாரித்தமை. பல்கலைக்கழகத்தின் பௌதீக வளத்திற்கு ஏற்ப இவரால் பாடநேர அட்டவணை சரியாக வடிவமைக்கப்படவில்லை என்பதே கலைப் பீடாதிபதியினால் இவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு.
இதனை மிக விரிவாக பார்க்க வேண்டும். அதற்கு முதல் கலாநிதி தர்சனன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாகப் பார்ப்போம்.
ஒலி வடிவ குற்றச்சாட்டில் இருப்பது என்ன?
விரிவுரையாளர் கலாநிதி தர்சனன் மாணவிகளுடன் ஆபாசமாக உரையாடி வருகின்றார். அவர்களை தனியாக அழைக்கின்றார். இரவுவேளைகளில் மாணவிகளுடன் தொலைபேசிய+டாக ஆபாசமாகப் பேசி வருகின்றார். அதற்கான ஆதாரமாக மாணவி ஒருவருடனான அவரின் தொலைபேசி உரையாடல் ஒலி வடிவில் இருப்பதாக குற்றச்சாட்டுபவர்களால் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
விரைவில் அதனை வெளியிடப் போவதாகவும் தெரிவிக்கப்பட்ட போதும் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. ஆனால் மாணவ,மாணவிகள் மத்தியில் வெளியிடப்பட்டது. அதனை பல்கலைக்கழக மாணவிகள் பலர் கேட்டுள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமானதாக் கூறப்படும் அந்த ஒலி வடிவத்தை இக்கட்டுரை எழுதுவதற்காக கேட்க வேண்டி ஏற்பட்டது. இதில் தர்சனனுடன் உரையாடுவதாகக் கூறப்படும் பெண் குரல் தான் ஒரு பல்கலைக்கழக மாணவி இல்லை என்பதை உரையாடலின் போதே கூறுகின்றார்.
அவர் மூன்றாவதாக ஒருவரைக் குறிப்பிட்டு அவரிடமிருந்துதான் தர்சனனின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றதாகக் கூறுகின்றார். அந்தமூன்றாவது நபரை அவரேதான் மாணவி எனவும் கூறுகின்றார். இந்த உரையாடல் பல்கலைக்கழக மாணவிக்கும் விரிவுரையாளர் தர்சனனுக்கும் இடையில் நடைபெறவில்லை என்பது உறுதிபடத் தெரிகின்றது.
இந்த ஆதாரம் தர்சனன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுக்குப் பொருத்தமான ஆதாரம் இல்லை என்பது புலனாகின்றது. இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக 2011 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய விசாரணைகளின் போதே இது போலியான ஆதாரம் என நிராகரித்து விட்டது.
இந்த ஒலி ஆதாரத்தைக் கேட்டவர்களால் இதனை ஒரு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வைத்துக்கொண்டு இசைத்துறை தலைமைப் பதவிக்கு தர்சனன் தகுதியற்றவர் என்ற முடிவை எடுக்க முடியாது. ஏனெனில் இதில் உரையாடும் பெண் தான் பல்கலைக்கழக மாணவி இல்லை என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றார்.
மாணவிகளுடன் தர்சனன் முறைகேடாக நடந்து கொள்கின்றார் என்ற முடிவை இந்த ஒலி வடிவத்தை வைத்துக்கொண்டு தீர்மானித்து விடவும் முடியாது. இவ் ஒலி வடிவக்குற்றச்சாட்டானது ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயத்தில் தேவையில்லாமல் தலை போட்டதனைக் காட்டுகின்றது.
அத்துடன் இதனை ஒரு பொது விடயத்துடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது ஓர் விசமத்தனமான செயற்பாடாகும். சரியாக நிரூபிக்க முடியாத இந்த ஆதாரம் அவரின் பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம். இது ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயத்தில் எட்டிப் பார்க்கும் செயலுக்கு ஒப்பானதாகும்.
இருப்பினும் சமுகத்தில் எல்லோராலும் அறியப்படுபவர்களாக இருப்பவர்கள் தங்களின் வாழ்க்கையை ஒரு முன்மாதிரிய வாழக்கையாக வாழத்தளைப்பட வேண்டும். அதிலும் ஆசான்களாக இருப்பவர்கள் மாணவ சமூகத்திற்கு சிறந்த மாதிரிகளாக இருக்க வேண்டும்.
தங்களின் தனிப்பட்ட வாழ்கை முலமும் மாணவர்ளுக்கு ஆசிரியர்கள் நற்பண்புகளைப் போதிக்க வேண்டும். கலாநிதி தர்சனனும் இந்த விடயங்களை கவனத்தில் எடுத்து பொது இடங்களில் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அடிப்படைக் காரணம் ஈகோ
இன்று இசைத்துறைத் தலைவரைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது ஈகோதான்.
 இளம் வயது விரிவுரையாளர்களால் நிறைந்திருக்கும் இசைத்துறைக்குள் கற்பிப்போரிடம் பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து போட்டித் தன்மை காணப்படுகின்றது. இதனால் இத்துறையினுள் பொறாமை மேலோங்கிக் காணப்படுகின்றது.
பொதுவாக நிர்வாக மட்டங்களில் இயலாமையினரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இவ்வாறாகத்தான் வெளிப்படும். இளம் வயதினராகவுள்ள இசைத்துறை விரிவுரையாளர்கள் தங்களுக்குப் பின்னால் ஒரு கூட்டத்தை வைத்திருக்கத்தான் விரும்புகின்றார்கள். அவர்களை வைத்துக்கொண்டு ஒருவர் மீது மற்றவர் வசைபாடுவதில் காலத்தைச் செலவழித்து வருகின்றனர்.
மாணவர்களும் தமது பரீட்சைப் புள்ளிகளுக்காக அவர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாகின்றன. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் விரிவுரையாளர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களுக்கு எதிராகக் கொடி பிடிக்கவும் பதாதைகளை எழுதி ஒட்டவும் தூண்டிவிடுகின்றனர்.
விரிவுரையாளர்களுக்கிடையிலான ஈகோ யுத்தத்தில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் பகடைக்காய்களாக மாற்றப்படுகின்றனர். இது கல்விச் சமுகத்தில் ஆரோக்கியமற்றதொரு செயற்பாடாகும்.
இசைத்துறை மாணவர்களின் விருப்பமும் திண்டாட்டமும்
இசைத்துறை மாணவர்கள் தமது அலகிற்கு ஒரு தலைமை வரவேண்டும் என விரும்புகின்றார்கள். அதற்கு தகுதியானவர் கலாநிதி தர்சனன் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டை அனைவரும் கூறி வருவதால் என்ன நடக்கும் என்பது தெரியாமல் திண்டாடி வருகின்றார்கள்.
மாணவர்கள் மத்தியில் இந்த விடயங்களில் ஒரு தெளிவின்மையை உண்டாக்கி அவர்களும் குழப்பமுடையவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பாடங்களில் கவனம் செலுத்துவதா அல்லது தமது கற்றல் செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுவதற்கு ஏற்றால்போல் ஒரு நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டு வருவதற்காக கொடி பிடிப்பதா என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இசைத்துறைக்குள் எழுத்திருக்கும் இந்தப் பிரச்சினை ஒட்டுமொத்தத்தில் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில்தான் நேரடியான பாதிப்பை உண்டாக்கி வருகின்றது. இப்பிரச்சினை காரணமாக தற்போது நடைபெற வேண்டிய இசைத்துறையினருக்கான பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கப்படுகின்றது. குறிப்பாக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் போது இதன் தாக்கம் வெளிப்படவுள்ளது.
எனவே இசைத்துறை மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இழுபறி நிலையில் இருந்துவரும் இசைத்துறைத் தலைவர் யார் என்ற பிரச்சினைக்கு யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் சரியானதொரு தீர்வைக் காணவேண்டும்.
‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புளுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி’ என்னும் பாரதியார் பாடலை இசைத்துறையைச் சார்ந்தவர்களும் மாணவர்களும் கேட்டிருப்பார்கள்.
யாழ்.மாவட்டத்திற்கு மட்டுமன்றி வடமாகாணத்திற்கும் உயர் கல்விக் கூடமாக விளங்குவது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். அதனுள் சிறந்த கல்விமான்களையும் மேதைகளையும் உள்வாங்கிக்கொள்வதே அதற்கும் பெருமை சேர்க்கும். திறன்படைத்தோர்களை வெளியில் வைத்து பார்ப்பது பல்கலைக்கழகத்திற்கு இழுக்கானதொன்றாகும்.
மேற்சொல்லப்பட்ட பாடல் வரிகள் யாழ். பல்கலைக்கழகத்திடம் இந்த நேரத்தில் கேட்கப்படும் ஒரு கேள்வியாகவே உள்ளது.
எனவே முடிவுகளை சரியாக எடுக்க வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழகத்திடம் உள்ளது.
(தொடரும்) 

Geen opmerkingen:

Een reactie posten