தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

13வது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது!- டக்ளஸ்!

போதையில் பணியாற்றிய இரு பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி நீக்கம் - வயோதிபரின் உயிரைப் பறித்த மின்சாரக் கட்டணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 06:01.08 AM GMT ]
கலஹா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மது போதையில் கடமையாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வயோதிபரின் உயிரைப் பறித்த மின்சாரக் கட்டணம்
மின்சாரக் கட்டணத் தொகையைப் பார்த்தவுடன் அதிர்ச்சிக்குள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு தனது மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வந்த வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பத்தரமுல்ல, ரொபர்ட் குணவர்த்தன மாவத்தையைச் சேர்ந்த எஸ்.பி.ஜி. சமரதாஸ என்ற 61 வயது வயோதிபரொருவர் நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த முதியவர், இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த சென்றுள்ளார். தனது மின்சாரக் கட்டணம் இவ்வாறு திடீரென மிக அதிகளவில் அதிகரித்து இருப்பதற்கான காரணம் என்னவென வினவியுள்ளார்.
உடனே, அதற்கான காரணத்தை குறித்த அலுவலகத்தர் கூறியவுடன் அதிர்ச்சியும், மயக்கமும் கொண்டவராக அந்த வயோதிபர் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்திற்கு சென்று அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் மூர்ச்சையுற்றவராக சுயநினைவிழந்து கீழே விழுந்துள்ளார்.
இதேவேளை, துரிதமாக செயற்பட்ட மின்சார சபை ஊழியர்கள் அவரை அம்புலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த வயோதிபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உயிரிழப்பிற்கு மார்படைப்பே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக மின்சாரக் கட்டணங்கள் தமது வழமையான கட்டணத்தை விட மும்மடங்கு அதிகரித்திருப்பதாக வாடிக்கையாளர்கள் பெரும் கவலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

13வது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது!- டக்ளஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 05:36.04 AM GMT ]
அரசாங்கம் 13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது. என ஈ.பி.டி.பி பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தீர்வுகாணப்படவேண்டும் என்று நாம் நீண்ட காலமாக கூறி வருகின்றோம். எனவே எமது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
தமிழ் மக்கள் மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் நிலைமையை சந்திக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
எனவே ஒரு முட்டையிட்டதும் ஊரெல்லாம் கொக்கரிக்கும் கோழியைப் போல எம்மால் செயற்பட முடியாது. அவ்வப்போது ஏற்படும் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து அமைதியாகவே முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
13வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் வடமாகாண தேர்தல் தொடர்பாக கருத்து கேட்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது:-
வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும் அத்தேர்தலில் அரசாங்கத்துடன் சேர்ந்தா அல்லது தனித்தா போட்டியிடுவது என்பது தொடர்பாகவும் நாம் எமது கட்சியின் ஆதரவாளர்களுடனும் கட்சி மட்டத்திலும் ஆராய்ந்து வருகின்றோம்.
எமக்கென்று இரு கொள்கை இருக்கின்றது. அதேபோன்று அரசியல் பலமும் இருக்கின்றது. ஆகையால் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.
எனவே வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவித்தல் விடுக்கப்பட்டதும் நாம் வடமாகாண தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பது தொடர்பில் அறிவிப்போம்.
எமது மக்கள் கடந்த காலங்களில் சொல்லொண்ணா துயரங்களை சந்தித்தார்கள். அவர்களை மீண்டும் அந்த நிலைக்கு தள்ளிவிடுவதாக எமது செயற்பாடுகள் அமைந்துவிடக்கூடாது.
இன்று பலர் எமது மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள் ஆனால் நாம் அப்படியல்ல.
நாம் அமைதியான முறையில் எமது மக்களுக்கான சேவைகளை செய்து வருகின்றோம். அதனை மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆகையால் எமது மக்களுக்கு பாதிப்பு வராத வகையிலான வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten