வடமாகாணத் தேர்தல் ஜனநாயக விழுமியங்களோடு நடைபெற மாட்டாது: சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் உதவி வழங்கும் நிகழ்வில் சி.சிறீதரன் எம்.பி
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 08:58.13 AM GMT ]
1956ம் ஆண்டு தென்பகுதியிலிருந்து சிங்கள வன்முறைகளால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் கிராமத்தில் குடியேறி அக்கிராமத்தில் உழைத்து முன்னேறிய மக்கள் 2009 இல் இலங்கையரசு மேற்கொண்ட யுத்தத்தில் தங்கள் உடைமைகள் முழுவதையும் இழந்து மீள்குடியேறி வாழ்கின்றனர்.
இந் நிலையில் இப்பகுதி மாணவர்களின் கல்வி, விளையாட்டு மேம்பாட்டுக்காக சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கற்றல் உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் தமது கருத்துரையினை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்,
தமிழர்களுக்குப் பொன் முட்டை இடப் போவதாக, அவர்கள் எல்லாம் கிடைத்து வாழப் போகிறார்கள் என்ற கனவை உருவாக்கி அவர்களை எதுவும் அற்றவர்களாக்க முனையும் வடமாகாண சபைத் தேர்தல் ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றி நேர்மையாக நடக்கப் போவதில்லை.
இப்பொழுதே அரச பணியாளர்களிலிருந்து இராணுவத்தினர் வரை தமிழர்களின் வாக்கைச் சிதைக்கும் கைங்ககரியத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்களிக்கத் தகுதியுடையோரின் விபரங்கள் சீருடை தரித்தோராலும் சிவிலில் நிற்கும் சீருடையினராலும் சேகரிக்கப்படுகிறது.
அரச நியமனங்கள் என்ற பெயரில் இறைமையுள்ள இனம் சிதைக்கப்படுகிறது. தமிழ்த் தேசியம் பேச முடியாத அளவுக்கு உலக வல்லரசு, பிராந்திய வல்லரசுகள் கூட இலங்கையுடன் சேர்ந்து தமிழரை நட்டாற்றில் விடும் செயலில் இறங்கியுள்ளனர்.
தேர்தல் நேர்மையாக ஜனநாயகப்படி நடக்காது. உலகக் கண்காணிப்பும் கவனமும் எப்படி அமையும் எனக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந் நிகழ்வு கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் செ.புஸ்பராசா தலைமையில் தர்மபுரம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை , தர்மபுரம் மூத்தோர் சங்கத் தலைவர், செயலாளர், பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அதிகாரப் பகிர்வு என்பது வெளிநாட்டு சிந்தனை எனச் சொல்லி சிங்கள மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்: மனோ கணேசன்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 09:35.52 AM GMT ]
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
1956லும், 1965லும் இந்நாட்டு சிங்கள பிரதமர்கள், தமிழ் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் அதிகாரப் பரவலாக்கல் கொள்கையை மிகதெளிவாக ஏற்று கொண்டு இருந்தன. அந்த சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் மீது எந்தவித அமெரிக்க, மேற்குலக அழுத்தங்களும் இருக்கவில்லை.
எனவே அதிகாரப் பகிர்வு என்பது இறக்குமதி செய்யப்பட்ட மேற்குலக வெளிநாட்டு சிந்தனை என்பது வெட்கங்கெட்ட பச்சை பொய். இந்த உண்மையை நாம் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றோம்.
இந்த கடினமான காரியத்தை புரிந்துகொண்ட இந்நாட்டில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மலைநாடு ஆகிய அனைத்து பிரதேசங்களிலும் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும், வெளிநாட்டு புலம்பெயர்ந்த தமிழர்களும் எமக்கு உதவிட வேண்டும்.அதிகாரப்பகிர்வு என்பது மேற்குலக வெளிநாட்டு இறக்குமதி என்கிறார்கள். அதை இல்லை என்று நாம் நிரூபித்தால், இந்தியா தமிழர்களின் சார்பாக செயல்படுகிறது என்கிறார்கள்.
அதனால்தான் 13ம் திருத்தம் தொடர்பாக இந்திய தலைவர்கள் அழுத்தம் தருகிறார்கள் என்கிறார்கள். இந்தியா எங்கே தமிழர் சார்பாக செயல்படுகிறது? யுத்தத்தை நடத்தியதே இந்தியாதான் என்று யுத்தம் முடிந்ததும் ஜனாதிபதியே சொன்னார். அது மட்டும் அல்ல, கடைசி நேரத்தில் சில மேற்குலக நாடுகள் செய்த சில முயற்சிகளையும் தடுத்து நிறுத்தி உதவி செய்ததும் இந்தியா என அரசாங்கம் சொன்னது.
இன்று, ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை வலுவிழக்க செய்ததும் இந்தியா என அரசு அமைச்சர்கள் சொன்னார்கள். இதெல்லாம் என்ன, தமிழர் சார்பான செயல்பாடுகளா? உண்மையில் இந்த இனவாதிகள், இந்த 13ம் திருத்தத்தை கூட ஏற்றுகொள்ள மறுப்பதற்கு வேறு இரண்டு காரணங்கள்தான் உள்ளன. தேர்தல் நடந்தால் வடக்கு மாகாணசபை, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சென்று விடும்.
தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் தமிழர்களின் கட்சியான கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதை, இந்த இனவாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இது முதல் காரணம். அடுத்தது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு வெளியே எந்த ஒரு எதிர்க்கட்சியும், இந்நாட்டில் எந்த ஒரு மாகாண சபையையோ, மாநகர சபையையோ, பிரதேச சபையையோ கைப்பற்றி விடக்கூடாது என்பது இவர்களது சித்தாந்தம்.
இந்த இவர்களது இனவாதம் காரணமாகவும், கட்சி அரசியல்வாதம் காரணமாகவும் இவர்கள் 13ம் திருத்தத்துக்கு எதிராக இல்லாத கட்டுகதைகளையெல்லாம் பேசுகிறார்கள். இதை விடுத்து இந்த அரசு ஒன்றை செய்ய வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக தயா மாஸ்டரை முதலைமைச்சர் வேட்பாளராக போட்டு வடக்கு தேர்தலில் வெற்றி பெற்று காட்ட வேண்டும். அது முடியாது என்பதால்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும் செய்கிறார்கள்.
13ம் திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்கு உள்ளே மூன்று பிரிவினர் உள்ளார்கள் என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அரசுக்கு உள்ளே 13ம் திருத்தம் அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்பவர்களும் உள்ளார்கள். 13ல் இருந்து காணி, பொலிஸ் அதிகாரங்களை அகற்றிவிட்டு அமுல் செய்ய வேண்டும் என சொல்பவர்களும் உள்ளார்கள்.
13ஐ ஒட்டு மொத்தமாக குழி தோண்டி புதைத்துவிட வேண்டும் என சொல்பவர்களும் உள்ளார்கள். இந்த மூன்றாவது பிரிவினர்தான், இன்று காட்டு கூச்சல் போடும், விமல் வீரவன்ச கட்சி, ஹெல உறுமய, பொதுபல சேனா, சிகல ராவய, ராவண பல சேனா, தேசப்பற்று தேசிய இயக்கம் ஆகியோர் ஆகும். இவர்களுடன் பேசி பயன் இல்லை. இவர்கள் 13ம் திருத்தத்தை முழுமையாக குழி தோண்டி புதைக்க நினைக்கிறார்கள்.
எந்த வித அதிகாரங்களும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள கத்தோலிக்கர்களுக்கும்கூட பகிர்ந்து வழங்கப்படக்கூடாது என்பதுவே இவர்கள் கொள்கை. இவர்களுக்கு எதிரானதே எமது போராட்டம் எனத் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten