தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

இந்தியாவில் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகும் பசில் ராஜபக்ச !!

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின்போது நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்ளப் போவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் தலையீட்டுடன் தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் அலகாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை ஒழிப்பதில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக தற்போதைக்கு இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவிப்பதை ஆளும்கட்சி முக்கியஸ்தர்கள் தவிர்த்துக் கொண்ட போதிலும், இரகசியமான முறையில் தமது நோக்கத்தை அடைந்து கொள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனைக் கண்டிக்கும் வகையிலும், தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் செயற்பாடுகள் தொடர்பில் உறுதிமொழியொன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அதற்கு முன்னதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, வரும் 4ந் திகதி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் இவரது இந்திய விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பசில் தனது இந்திய விஜயத்தின்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் ஆகியோரையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே அமைச்சர் பசிலின் இந்திய விஜயத்தின்போது அவருடன் கடுமையான முறையில் நடந்து கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாண சபை முறையை ஒழிப்பதற்குப் பதிலாக, அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் பாதுகாப்பு தொடர்பில் பகிரங்க உறுதிமொழியொன்றை பசில் ராஜபக்சவிடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் இந்திய அரச தரப்பு எதிர்பார்த்துள்ளது.
மேலும் இந்திய அரசை விமர்சிக்கும் வகையிலான அமைச்சர்கள் சிலரின் செயற்பாடுகள் குறித்தும் இந்தியத் தரப்பின் கவலை கடுமையான முறையில் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten