[ புதன்கிழமை, 26 யூன் 2013, 10:42.42 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் புதிய பிரதமருக்காக நடந்த வாக்கெடுப்பில் கெவி்ன் ரூட்டிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்ததால் மீண்டும் பிரதமராக கெவின் ரூட் தெரிவு செய்யப்பட்டார். கில்லார்ட் பதவி விலகுவதாக அறிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரதமராக ஜூலியா கில்லார்ட் பதவி வகித்து வந்தார்.
இவர் கடந்த 2010-ம் ஆண்டு பிரதமராக இதே தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவரான கெவின் ரூட் பதவி விலகியதை அடுத்து, ஜூலியா கில்லார்ட் பிரதமராக பொறுப்பேற்றார்.
அவுஸ்திரேலியாவில் சமீப காலமாக தொழிலாளர் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கில்லார்ட் தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
இதையடுத்து பிரதமரை மாற்றுவதற்காக பாராளுமன்றத்தில் கூட்டம் நடந்தது. அங்கு நடந்த விவாதத்தில் 72 எம்.பி.க்களை கொண்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான டோனி அபோட் கூறுகையில்,
புதிய அரசு அமையுங்கள் இல்லையெனில் பொதுத்தேர்தலை அறிவியுங்கள் என்றார்.
இதையடுத்து மக்கள் பிரதிநித்துவ சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முன்னாள் பிரதமரான கெவின் ரூட்டிற்கு ஆதரவாக 57 வாக்குகளும், கில்லார்ட்டுக்கு ஆதரவாக 45 வாக்குகளும் கிடைத்தன.
அவுஸ்திரேலிய பாராளுமன்றில் மொத்தம் 150 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் தொழிலாளர் கட்சிக்கு (லேபர் கட்சி ) 71 எம்.பி.க்கள் தான் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 76 எம்.பி..க்கள் தேவை என்பதால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கில்லார்ட் பிரதமராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் புதிய பிரதமருக்காக நடந்த வாக்கெடுப்பில் கெவி்ன்ரூட்டிற்கு ஆதரவாக அதிகமான வாக்குகள் கிடைத்ததால் மீண்டும் பிரதமராக கெவின் ரூட் தேர்வு செய்யப்பட்டார். கில்லார்ட் பதவி விலகுவதாக அறிவித்தார்.
புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள கெவின் ரூட் (57) கூறுகையி்ல், அவுஸ்திரேலியாவில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தேர்தல் நடைபெறும் என்றார்.
தொலைபேசியில் காதல் வலைவீசி பெண்களை ஏமாற்றிய நபர் கைது: மட்டக்களப்பில் சம்பவம்
[ புதன்கிழமை, 26 யூன் 2013, 12:19.16 PM GMT ]
கைத்தொலைபேசி மூலம் பல பெண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை அபகரித்த இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து நுவரெலியாவைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கைத்தொலைபேசி ஊடாக பெண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, அவர்களுடன் பேசி காதலித்து திருமணம் செய்வதாக நடித்து பணம், நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவரிடம் ஏமாற்றப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுணதீவு நாவற்காட்டைச் சேர்ந்த தன்னை திருமணம் செய்துக்கொள்வதற்காக 40 ஆயிரம் ரூபா பணத்துடனும் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான நகையுடனும் குறித்த நபர் அழைத்து சென்றார்.
இருவரும் கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்தோம். கையிலிருந்த பணம் முழுவதும் செலவழிந்த நிலையில் கொண்டு சென்றிருந்த நகைகளில் ஒரு தங்க சங்கிலியை கொழும்பில் அடகுவைத்தார்.
அதற்கு பின்னர் நுவரெலியாவிற்கு என்னை அழைத்துச் சென்று சில நாட்கள் வைத்திருந்ததுடன் அங்கும் மற்றொரு தங்க சங்கிலியை அடகுவைத்தார்.
இந்நிலையில், திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக போதியளவு பணம் இன்மையினால் கையிலிருந்த இரண்டு காப்புகளை தருமாறு கேட்டார். அதனையும் கழற்றிகொடுத்தேன்.
வாங்கிச் சென்றவர் பல நாட்களாக திரும்பவேயில்லை அவருடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மட்டக்களப்புக்கு திரும்பினேன் என்று மட்டக்களப்புப் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வாவின் ஆலோசனையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகரவின் வழிகாட்டலில் தமிழ் பெண் பொலிஸார் ஒருவர் அடங்கலாக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
மட்டக்களப்பு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸ் ஒருவர் குறித்த இளைஞருடைய தொலைபேசி இலக்கத்திற்கு மிஸ் கோள் ஒன்றை விடுத்துள்ளார்.
மிஸ் கோளுக்கு தொடர்பினை ஏற்படுத்திய குறித்த நபர் காதல் மொழிகளை பேசி உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார்.
அந்த பெண்ணும் பஸ் நிலையத்திற்கு உரியநேரத்திற்கு சென்றுள்ளார். கைத்தொலைபேசியுடன் காதலியை வரவேற்பதற்காக ஓடோடிசென்ற இளைஞனை அங்கு சிவில் உடையில் ஏற்கனவே தயாராகவிருந்த பொலிஸார் கைதுசெய்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் அனுராதபுரத்தில் சிங்களப் பெண்ணொருவரையும் இவ்வாறு ஏமாற்றியமை தெரிய வந்துள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸார் மோசடி செய்யப்பட்ட நகைகள் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மீட்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten