13வது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும் ஒருபோதும் எற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் எல்லையில் நிருமாணிக்கப்பட்ட ரெஜி கலாசார மண்டப திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சமகால அரசியலில் மிகவும் பேசப்படுகின்ற ஓர் முக்கிய அம்சமாக 13வது திருத்தச் சட்டம் திகழ்கிறது. அதாவது 13வது திருத்த சட்டத்தினை முற்றாக அகற்றுதல் அல்லது அதனுடைய முக்கிய சரத்துக்களை நீக்குதல் என்கின்ற பிரச்சினை பல விமர்சனங்களைக் கொண்டமைந்திருக்கின்றன.
இது தொடர்பில் பல அரசியல்வாதிகளும் பல தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இவ்வாறான கருத்தானது உண்மையில் பல்லின மக்களைக் கொண்ட இலங்கை தேசத்தின் சமூக நல்லிணக்கத்தோடு கூடிய அபிவிருத்திற்கு தடையாக அமைவதோடு ஆரோக்கியமற்றதாகவும் காணப்படுகிறது.
எமது மக்களின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்துகின்ற எந்த செயற்பாட்டையும் நாம் ஏற்க மாட்டோம். மாறாக இந்த சமாதான காலத்தில் எமது மக்களின் அரசியல் அதிகாரங்களையும் அவர்களது அரசியல் அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க நாம் இதனோடு ஒருமித்த கருத்துடையவர்களுடன் இணைந்து செயலாற்ற என்றும் தயாராகவே உள்ளோம் என்றார்.
தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கவே த. தே. கூட்டமைப்பு குரல் கொடுத்து வருகிறது: த.கலையரசன்
தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுத்து வருகின்றதே தவிர அரசாங்கத்தின் சலுகைகளுக்கோ சுகபோகத்திற்கோ சோரம் போகாத கட்சியாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகிறது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
வேப்பையடி உதயா விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மின்னொளியிலான கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டியும் அண்மையில் வேப்பையடி கலைமகள் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் கல்முனை மாணவர் மீட்பு பேரவையின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஸ் வேப்பையடி கலைமகள் வித்தியாலய அதிபர் எஸ்.பாலசிங்கன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நிகழ்வானது எமக்குப் பெருமைதரும் விடயமாகும் விளையாட்டு மட்டுமல்ல கல்வியிலே சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவப்படுத்துவதன் மூலம் நல்ல கல்விமான்களையும் ஆரோக்கியமான சமுதாயத்தினையும் தோற்றுவிக்கமுடியும் அந்தவகையில் உதயா விளையாட்டுக்கழகம் பெரும் பங்காற்றி வருகிறது இதனை யாரும் மறக்கமுடியாது.
கல்லோயாத் திட்டம் உருவான போது இந்தப்பிரதேசம் பலஅபிவிருத்திகளுடன் விளங்கியது மட்டுமல்ல பல திணைக்களங்களும் இங்கே இயங்கிவந்தநிலையில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்று அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட நிலையில் காட்சியளிப்பது வேதனையாக உள்ளது.
குறிப்பாக அன்னமலை 02 இல் உள்ள வேப்பையடி வைத்தியசாலை பல வளப்பற்றாக்குறையுடன் இயங்கிவருவதுடன் இந்த வைத்தியசாலை தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் மாகாண சபையில் முறையிட்ட போது அமைச்சர்கள் பொறுப்பற்ற விதத்தில் பேசிக்கொண்டு இருந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது.
அதே வேவளை கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தமட்டில் வேப்பையடி வைத்தியசாலைக்குத்தான் நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என நினைக்கின்றேன் அதேவேளை வேப்பையடி வைத்தியசாலையின் புறக்கணிப்பானது இனரீதியான புறக்கணிப்பாகவே மக்கள் கருதுகின்றனர் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten