தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 juni 2013

நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கிறோம்!- உ.வாசுகி விளக்கம்!

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு கைதானவர்கள் சரீரப் பிணையில் விடுதலை!
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 01:10.36 AM GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 23 பேரில் 21பேர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டபோது இராணுவத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று முன்தினம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்ட 21 பேரை இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி றயாழ் அனுமதியளித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் வென்னப்புவ பகுதியை சேர்ந்த இருவர் தொடர்பிலான வேறு வழக்கு வென்னப்புவ பகுதியில் இருப்பதன் காரணமாக இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் சட்ட விரோதமான முறையில் வெளிநாடு அனுப்புவதற்கான முகவர்களாக செயற்பட்டவர்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள்.14 பேர் தமிழர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கிறோம்!- உ.வாசுகி விளக்கம்
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 12:44.14 AM GMT ] [ விகடன் ]
மார்க்சிஸ்ட்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் என்ற கேள்வியோடு கட்டுரையாளர், தொடரை முடித்திருக்கிறார். எங்களால் தயக்கமின்றி உறுதியாகச் சொல்ல முடியும், ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டோர் யாராக இருந்தாலும், என்ன மொழி பேசினாலும், யாரால் பாதிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டோர் பக்கம் மட்டுமே நின்றிருக்கிறோம் என்று.
அது எங்கள் அரசியல் மட்டுமல்ல, தத்துவார்த்த நிலைப்பாடு, மார்க்சியத்தின் அடிப்​படைகூட.
இலங்கைத் தேசிய இனப் பிரச்சினையில் ஒடுக்கப்​பட்டோர், உரிமை மறுக்கப்பட்டோர், அகதிகளாய் வாழ்வோர் தமிழ் மக்களே. எனவே, உறுதியாக அவர்கள் பக்கம் நிற்கிறோம்.
அதனால்தான் கடுமையான விமர்சனங்கள் வந்தபோதும் அரசியல் லாபங்களுக்கு அப்பால் அந்த மக்களின் வாழ்வுக்கு எது தேவையோ, அதை வலியுறுத்திக் குரல் கொடுக்கிறோம். இயக்கங்கள் நடத்துகிறோம். எவர் வரினும் நில்லோம் அஞ்சோம்.
அதே சமயம் தமிழர்களால் மற்றொரு மொழி பேசுவோர் பாதிக்கப்பட்டால், அப்போது தமிழர் என்கிற காரணத்​திற்காக அதை ஆதரிக்க மாட்டோம். பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ஆதரவாகவே நிற்போம்.
இலங்கை அரசாங்கத்தின் காட்டு​மிராண்​டித்தனங்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறோம். வலுவாகக் கண்டித்திருக்கிறோம். இலங்கையில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கடந்த காலத்திலும் இப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். விவாதிக்கிறார்கள். எங்கள் நிலைப்பாட்டை அங்கீகரிக்கிறார்கள்.
தமிழகத்தில் இருக்கும் விடுதலைப் புலிகளின் கண்மூடித்தனமான ஆதரவாளர்கள் சிலரைப் போல் அன்றி, தங்கள் தவறுகளை விமர்சனத்தோடு பார்க்கிறார்கள்.
ஆனால், தமிழகத்தில் எப்போதும்போல் உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளே அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றில் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் மீதான உண்மையான அக்கறையைவிட குறுகிய அரசியல் நோக்கங்களே தூக்கலாகத் தெரிகின்றன.
இலங்கையில் தமிழ் மக்களின் துயரமும் இன்னலும் வேதனையும் சொல்லி மாளாது. அவர்களுக்காகப் போராட்டங்கள் நடத்துவதும், ஆதரவு தருவதும், குரல் கொடுப்பதும் அவசியம்.
அதேபோல் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் இருக்கிறார்கள். 30 ஆண்டுகாலமாக அகதிகளாகப் பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஐ.நா. மன்றத்தின் அகதிகள் குறித்த உடன்படிக்கையின் பிரிவுகளின் படி, இவர்கள் நடத்தப்படவில்லை. இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தால் வெறியூட்ட முடியாது, உணர்ச்சிபூர்வ அரசியலுக்கும், வாக்கு வங்கி அரசியலுக்கும் உதவாது என்பதற்காக, பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இவர்கள் குறித்துப் பேசுவது இல்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களுக்காகக் குரல் எழுப்பிவருகிறது. மீனவர்கள் பிரச்சினையில், இரு நாட்டு மீனவர்களும் பேசுவதும், அந்த அடிப்படையில் இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வருவதும் தமிழக மீனவர்களின் உயிரையும் உடமையையும் பாதுகாக்கும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. பல்வேறு மீனவர் அமைப்புகளின் கோரிக்கையும் அதுவே.
இந்தியா, இலங்கையின் மீது பொருளா​தாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள்... தமிழ்நாட்டு முதலாளி​களுக்குச் சொந்தமாக இலங்கையில் இருக்கும் தொழில்களைப் பற்றியோ, சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்​படும் பொருட்களைப் பற்றியோ மௌனம் சாதிக்கிறார்கள்.
ஆனால், இந்திய அரசாங்கம் இவற்றையெல்லாம் செய்ய வேண்டுமென்று உரத்துப் பேசுவார்கள். அப்படிச் சொன்னால் தானே இந்திய அரசாங்கம் தமிழரை மதிப்பது இல்லை என்ற அரசியல் செய்ய முடியும்? அதே சமயம் மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகள், இந்திய மக்களை, தமிழக மக்கள் உட்பட, தாறுமாறாகத் தாக்குகின்றன.
வாழ்வுரிமையைப் பறிக்கின்றன. தமிழகப் பெண்களும், குழந்தைகளும் கொடூரமாகப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தீண்டாமை கொடுமைகள் தலித் மக்களைக் கீழே தள்ளி மிதிக்கின்றன.
இவையெல்லாம் தமிழ்நாடு, தமிழர் பிரச்சினைகள் இல்லையா? ஆனால் தமிழர் நலன் காக்கவே பிறந்து வந்ததாகத் தோற்றம் கொடுப்பவர்கள் மத்தியில், இவை குறித்தெல்லாம், ஒரு திட்டமிட்ட மௌனமே நிலவுகிறது என்பதைக் கட்டுரையாளர் கவனிக்கிறாரா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை அரசியல் ஆதாயத்துக்கு அப்பாற்பட்டு, அந்த மக்களின் சம உரிமைகள், கண்ணியமான வாழ் நிலைமை என்ற நோக்கில் இருந்து அணுகுகிறது.
அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அரசியல் தீர்வு, மீள்குடியமர்த்துதல், போர் குற்றம் இழைத்தோருக்கு தண்டனை என்று எந்தக் கோரிக்கைகள் அந்த மக்களை வாழ்விக்குமோ, அவற்றிற்காகக் குரல் கொடுக்கிறோம்.
அது தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல. உலகில் எந்த இனம் ஒடுக்கப்பட்டாலும் அந்த இனத்துக்கான ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் வழங்கியே வந்திருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் யாவரும் எங்கள் தோழர்கள். ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுவோர் யாராயினும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது எங்கள் கொள்கை.
இந்த அடிப்படையில் இனிவரும் காலங்​களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் நீக்க தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டில் இருந்து போராட்டங்களைத் தொடரும்.

Geen opmerkingen:

Een reactie posten