[ valampurii.com ]
மிகப் பகிரங்கமாக தேரர் கூறி உள்ள விடயம் இந்த நாட்டின் இன மத ஒற்றுமைக்கு பாதகமானது என்பது மறுதலிக்க முடியாத உண்மை.
நாட்டின் இன மத ஒற்றுமையை யார் சீர்குலைத்தாலும் அது பயங்கரவாதம் என்ற பட்டியலுக்குள்ளேயே அடக்கப்படவேண்டும்.
ஆனால், இலங்கையில் பெரும்பான்மை இனம் சார்ந்தவர்கள் எனைய இனங்கள் தொடர்பில் வன்மைத்தனமாக கூறும் கருத்துக்கள் குறித்து எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.
அதாவது பெரும்பான்மை இனத்திற்கு பாதகமானது என்றால் மட்டுமே அது பயங்கரவாதமாக கருதப்படுகின்றது.
மாறாக சிறுபான்மை இனங்கள் - அவர்கள் சார்ந்த மதங்கள் தொடர்பில் எத்தகைய விசமத்தனங்களை அள்ளி வீசினாலும் அது இந்த நாட்டின் தேசப்பற்றாக, மகாவம்சத்தை காக்கும் மதக் காப்பாகக் கருதப்படுகின்றது.
இதற்கு நல்ல உதாரணம், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஆவார்.
பல சந்தர்ப்பங்களில் இனவாதத்தையும் மத வாதத்தையும் கொட்டிக் குவிக்கும் தேரர் இந்த நாட்டின் சிறுபான்மை இனத்திற்கு எதிராக பெரும் பான்மை இனத்தினரை தூண்டுகின்றார்.
1983 யூலைக் கலவரம் போன்ற ஒன்றை ஏற்படுத்துவதோ அவரின் குறிக்கோளாக உள்ளது.
பெரும்பான்மை மக்கள் தேரர் போன்ற பேரினவாதிகளின் கபடத்தனங்களை அறிந்து வைத்திருப்பதன் காரணமாக இன வன்முறையில் ஈடுபடாமல் இருக்கிறார்களே தவிர, அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக அமைதி நிலை நீடித்ததாக எவரும் கற்பனை செய்துவிடக் கூடாது.
நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தார்கள் எனக் கூறி எத்தனையோ தமிழர்களை நான்காம் மாடிக்கு அழைத்து விசாரணை செய்த குற்றத் தடுப்பு பிரிவு, பொது பல சேனா அமைப்பின் தேரரை நான்காம் மாடிக்கு அழைக்காதது ஏன்?
இன ஒற்றுமையை சிறுபான்மையினர் மட்டுமே கட்டிக் காக்கவேண்டும் என்றா குற்றத் தடுப்பு பிரிவு கருதுகின்றது?
தேச ஒற்றுமை என்பது ஒரு தரப்பால் மட்டும் பாதுகாக்கப்படுவது அல்ல. மாறாக அது முழுஇனங்களாலும் காப்பாற்றப்பட வேண்டும்.
இலங்கை பெளத்த சிங்கள நாடு எனத் தேரர் கூறுவதற்குள் இருக்கக் கூடிய கருத்து, இலங்கை என்ற நாட்டில் வேறு இனங்களுக்கும் பிற மதங்களுக்கும் இடம் இல்லை என்பதாகும்.
பெளத்தத்திற்கும் சிங்களத்திற்கும் இந்த நாடு சொந்தம் என்றால் ஏனைய இனங்களையும் மதங்களையும் இந்த நாட்டில் வேரோடு அறுக்க வேண்டும் என்பது தானே பொருள்.
ஒரு பெளத்த துறவி இத்தனை தூரம் இனவாதத்தையும் மதவாதத்தையும் தன் நெஞ்சில் குவித்து வைத்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது இந்தத் துறவி எதைத்தான் துறந்தாரோ? என எண்ணத் தோன்றும்.
எதுவாயினும் கடந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தால் நலிந்து சிதைந்து போன இலங்கை மண்ணில் மீண்டும் போர் முரசம் கேட்பதை எந்த மக்களும் விரும்பமாட்டார்கள்.
அத்தகைய ஒரு விருப்பை வலுக்கட்டாயமாக திணிப்பதற்கும் எவரும் முயற்சிக்கக் கூடாது.
அத்தகைய முயற்சியை எவர் கொண்டிருந்தாலும் அவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கு நாசம் செய்கிறார்கள் என்ற பேரில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தமது சீவியத்திற்கான முதலீட்டுப் பொருளாக கொள்ளும் மிக மோசமான கலாசாரம் இந்த நாட்டில் மேன்மேலும் பெருக்கமடையும்.
ஆகையால், அவர் இவர் என்ற பாகுபாடு இன்றி எவர் இன மத ஒற்றுமையைக் குலைத்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இல்லையேல் நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாக மாறிவிடும்.
Geen opmerkingen:
Een reactie posten