வெலிங்டனில் உள்ள இந்தியாவின் பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் இருந்து வெளியேறிய இரண்டு படை அதிகாரிகளும் கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்த அடுத்தடுத்த நாட்களில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி கொழும்பு வந்து சேர்ந்தார்.
இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படாத விடயங்கள் தான்.
பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் பயணம் முன்னரே இரண்டு நாடுகளினதும் இராணுவத் தலைமையகங்களால் திட்டமிடப்பட்டது.
ஆனால் வெலிங்டனில் இருந்து இலங்கைப் படை அதிகாரிகள் இருவரும் வெளியேறியது முன்னரே திட்டமிடப்பட்டதல்ல.
ஏனென்றால் அவர்கள் அங்கு ஒருவருடகாலப் பயிற்சி நெறிக்காக ஒரு மாதத்துக்கு முன்னரே அங்கு சென்றிருந்தனர்.
எனவே அவர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு இடைநடுவில் கொழும்பு திரும்புவர் என்று எவராலும் எதிர்பார்க்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் இலங்கைப் படை அதிகாரிகள் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியைத் தொடர்வதில் பிரச்சினைகள் இருக்கும் என்பதை பாதுகாப்பு அமைச்சோ, இராணுவத் தலைமையகமோ அறியாமல் இருந்திருக்காது.
ஏனென்றால் தாம்பரத்திலும், வெலிங்டனிலும் பயிற்சிக்காகச் சென்ற இலங்கைப் படை அதிகாரிகள் தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்புகளால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தன.
பல தசாப்தங்களாக இலங்கைப் படை அதிகாரிகள் மத்தியில், வெலிங்டன் ஒரு மதிப்பு மிக்கதும் கௌரவமானதுமான பயிற்சிக் கல்லூரியாக இருந்து வந்துள்ளது.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் கூட மேஜர் தர அதிகாரியாக இருந்த போது 1982 - 83 காலப்பகுதியில் அங்கு பயிற்சி பெற்றிருந்தார்.
இங்குள்ளது போன்ற அதிகாரிகளுக்கான பயிற்சி நெறி இந்தியாவில் வெறெங்கும் இல்லை.
ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் இலங்கைப் படை அதிகாரிகள் அங்கு தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கு இடமளிக்கவில்லை.
கடந்த மே மாதம் 27ம் திகதி தஞ்சாவூரில் இந்திய விமானப்படைத் தளத்தை திறந்து வைத்த போது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இனிமேல் தமிழ்நாட்டில் இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்திருந்தார்.
ஆனாலும் அதே தினம் மேஜர் சி.எஸ். ஹரிஷ்சந்திர, விங் கொமாண்டர் எம்.எஸ்.பண்டார தசநாயக்க ஆகியோர் வெலிங்டனில் பயிற்சிக்காகச் சேர்க்கப்பட்டனர்.
இதனால் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு மேலாக தமிழ்நாட்டுக்கும் புதுடில்லிக்கும் இடையிலும் கொழும்புக்கும் புதுடில்லிக்கும் இடையிலும் ஒரு இழுபறி யுத்தமே நடந்து கொண்டிருந்தது.
ஒரு பக்கத்தில் தமிழ்நாடு அரசும், பல்வேறு கட்சிகள், அமைப்புகளும், இவர்களை வெளியேற்றச் சொல்லி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தன.
அவர்களை சமாளித்துக் கொள்ள போராடிய மத்திய அரசு இரு இலங்கைப் படை அதிகாரிகளுக்கும் மாற்று இடமொன்றில் பயிற்சிக்காக சேர்ப்பதற்கான ஒழுங்குகள் குறித்து ஆராய்ந்தது.
முதலில் புனேயில் உள்ள இராணுவத் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் இடம் ஒதுக்க புதுடில்லி முன்வந்த போது இலங்கை அரசாங்கம் அதை நிராகரித்தது.
பின்னர் செகந்திராபாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு முகாமைத்துவக் கல்லூரியில் பயிற்சியைத் தொடர இந்திய அரசு ஏற்பாடு செய்த போது அதையும் கொழும்பு ஏற்கவில்லை.
வெலிங்டனில் உள்ளதைப் போன்ற பயிற்சி நெறி இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பதை அறிந்து வைத்திருந்த கொழும்பு அதற்கு மட்டுமே அவர்களை அனுமதிக்க முடியும் என்று விடாப்பிடியாக நின்றது.
இந்த இழுபறி யுத்தத்தின் முடிவில் வேறு வழியின்றி இரு அதிகாரிகளையும் கொழும்புக்கு திருப்பி அழைக்க முடிவு செய்தது பாதுகாப்பு அமைச்சு.
பயிற்சியை இடைநடுவில் நிறுத்திக் கொண்டு நாடு திரும்பிய இரு அதிகாரிகளையும் இதே பயிற்சிநெறியைக் கற்க வேறெங்காவது அனுப்பப் போவதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
இந்த விவகாரத்தினால் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டிருந்தாலும் அதனைத் தீர்மானிக்கின்ற நிலையில் அவரோ அவர் சார்ந்துள்ள இராணுவமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பில் அதிக நெருக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இது ஒரு பின்னடைவு என்று கோத்தபாய ராஜபக்சவே குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையில் அண்மைக் காலத்தில் அரசியல் ரீதியான இழுபறிகள் பல நீடித்து வருகின்றன.
இத்தகைய நிலையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரத்திலும் சற்று நெருடலான சூழல் ஒன்று உருவாக ஆரம்பித்துள்ளது.
ஆனாலும் பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயத்தில் இலங்கையால் இந்தியாவை அதிகம் பகைத்துக் கொள்ள முடியாது.
ஏனென்றால் ஆண்டுதோறும் 800ற்கும் அதிகமான இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளித்து வரும் நாடு அது.
சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற பல நாடுகள் பயிற்சி வசதிகளை இலங்கைப் படையினருக்கு அளித்தாலும் அது இந்தியா கொடுக்கும் அளவுக்கு மிகப் பெரியளவிலானது அல்ல.
அதேவேளை இந்தளவுக்கு இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி கொடுப்பதற்கும் காரணம் உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணைஅமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கடந்தவாரம் அதற்கு கொடுத்திருந்த விளக்கம் இது தான்.
இன்னொரு பாகிஸ்தானாக இலங்கை உருவாவதை இந்தியா விரும்பவில்லை. இந்தியா பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனாவிடம் போவார்கள்.
ஏற்கனவே பாகிஸ்தானில் இந்தியா பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் சூழலில் இலங்கையும் இன்னொரு பாகிஸ்தானாக உருவெடுப்பதை யாரும் விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது சீனா குறித்தும் பாகிஸ்தான் குறித்தும் இந்தியா எந்தளவுக்கு கவலை கொண்டிருக்கின்றது என்பதை விளக்குகிறது.
1980களில் இலங்னைப் படையினருக்குப் பயிற்சி அளித்துக் கொண்டே இந்தியா புலிகள் போன்ற இயக்கங்களுக்கும் பயிற்சி கொடுத்தது.
அப்போது ஜே.ஆர். அரசாங்கத்துக்குப் பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த ஜெனரல் ஷியா உல் ஹக் உதவ முன்வந்தார்.
இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்க அவர் பிரிகேடியர் தாரிக் மெஹ்முட் என்ற அதிகாரி தலைமையிலான குழுவை கொழும்புக்கு அனுப்பியிருந்தார்.
அனுராதபுரத்தில் உள்ள சாலியபுரவில் வைத்து அவர்கள் ஆயிரக்கணக்கான படையினருக்கு பயிற்சிகளை அளித்தனர்.
வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையின் போது கூட பிரிகேடியர் தாரிக் மெஹ்முட் பலாலிப் படைத்தளத்தில் நின்று இலங்கைப்படை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
பின்னர் இந்தியா இலங்கை உடன்பாடு ஏற்பட்ட போது திடீரென பாகிஸ்தானின் பயிற்சி உதவிகள் அனைத்தையும் ஜே.ஆர். நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனினும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதிக் காலகட்டத்தில் இருந்தே அதிகரித்து விட்டது.
இப்போது அது மேலும் வலுப்பெற்றுள்ளது.
அதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தான் இரண்டாவது தடவையாக கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் கயானி.
இரு படை அதிகாரிகள் வெலிங்டனில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சூழலில் கொழும்பு வந்த பாகிஸ்தான் இராணுவத்தளபதி அதை் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தவறியிருக்க மாட்டார்.
பெரும்பாலும் அந்த இரு அதிகாரிகளும் பாகிஸ்தானுக்கோ, அல்லது சீனாவுக்கோ தான் பயிற்சிக்காக அனுப்பப்படுவர் என்பதில் சந்தேகமில்லை.
பெரும்பாலும் அது பாகிஸ்தானாகவே இருக்கலாம்.
வெலிங்டன் பயிற்சிக் கல்லூரிக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு தொடர்பு உள்ளது.
இந்தியாவின் மிகப் பழமையான வெலிங்டன் பயிற்சிக் கல்லூரி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1905ம் ஆண்டில் மும்பைக்கு அருகில் உள்ள டியோலய் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் அது தற்போது பாகிஸ்தானில் உள்ள குவேட்டாவுக்கு மாற்றப்பட்டது.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது தான் அது குவேட்டாவில் இருந்து வெலிங்டனுக்கு மாற்றப்பட்டது.
வெலிங்டனில் இருந்து இலங்கைப்படை அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட சூழலில் பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் கொழும்பு வருகையை இந்தியா அதிகம் விரும்பியிருக்காது.
இந்தநிலையில் அடுத்த வாரம் கொழும்பு வரவுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுக்கு பலத்த சவால்கள் காத்திருக்கின்றன.
ஏனென்றால் அவருக்கு பாதுகாப்பு ரீதியான சவால் மட்டுமன்றி அரசியல் ரீதியான குறிப்பாக 13வது திருத்தம் சம்பந்தமான சிக்கல்களைக் கையாள வேண்டிய பொறுப்பும் உள்ளது.
சிவ்சங்கர் மேனனின் கொழும்பு பயணத்துக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான போதிலும் இது ஏற்கனவே இழுபறிக்குள்ளாகி வந்த ஒன்று என்பது பலருக்குத் தெரியாத விடயம்.
பாதுகாப்புச் செயலர் மட்டத்திலான பாதுகாப்பு ஒத்துழைப்புக் கருத்தரங்கு கடந்த மார்ச் மாதம் கொழும்பில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
ஆனால் அப்போது ஜெனிவா தீர்மான விவகாரத்தினால் ஏற்பட்ட இழுபறியால் சிவ்சங்கர் மேனனை கொழும்புக்கு அனுப்ப இந்தியா விரும்பவில்லை.
ஏப்ரலில் தான் ஒதுக்கித் தரும்படி புதுடில்லி கேட்டது.
அதற்கு புத்தாண்டு விடுமுறைக் காலம் என்பதால் கோத்தபாய ராஜபக்சவுக்கு நேரமில்லை என்று கொழும்பு இணங்கவில்லை.
மே மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது.
ஆனாலும் யூலையில் தான் அதற்கான நாள் பொருந்தி வந்தது.
இதையடுத்து அடுத்தவாரம் கொழும்பு வரும் சிவ்சங்கர் மேனன் முன்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் செல்வாக்கினுள் இலங்கை வீழ்ந்து விடாமல் தடுக்கின்ற பொறுப்பு மட்டுமன்றி இலங்கையைத் தட்டிக் கேட்க வேண்டிய சிக்கலும் இருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.
ஹரிகரன்
Geen opmerkingen:
Een reactie posten