[ விகடன் ]
பிரிவினைவாதத்துக்கு இடம் கொடாமல், அதேசமயம் வர்க்கம், இனம், சாதியம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் விதத்திலேயே கட்சியின் அணுகுமுறை உருவாக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்தியாவின் பல பகுதிகளில் பிரிவினைவாதிகளின் கடுமையான விமர்சனத்துக்கும் நேரடியான தாக்குதல்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி ஆளாகி இருக்கிறது.
அசாமின் பிரிவினைவாதிகள் அசாமைப் பிரிக்கவில்லை என்றால், இந்தியா 26 துண்டுகளாக சிதறிப்போகும் என்று சொன்னபோது, என் உடல் 26 துண்டுகளாக்கப்பட்டாலும் இந்தியாவில் ஒரு துண்டு நிலம்கூட பிரிவினைவாதிகள் கையில் போவதை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னவர் நிரஞ்சன் தாலுக்தார் என்ற மார்க்சிஸ்ட்.
அதன் காரணமாகப் பிரிவினைவாதிகள் அவரது உடலை 26 துண்டுகளாக வெட்டிப் போட்டனர். காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராடுகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் யூசுப் தாரிகமி, பலமுறை தீவிரவாதிகளின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு உள்ளானவர்.
பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடியதற்காக குர்ணாம் சிங் உத்பல் உள்ளிட்ட பல பேரைக் களப்பலியாகத் தந்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராடுகிற இடங்களில் எல்லாம் மார்க்சிஸ்ட்கள் அந்தக் குறிப்பிட்ட இன மக்களுக்கு எதிராக இருப்பதாக அவதூறு செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆள்வோரும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
தமிழர், தமிழ்நாடு என்று வந்தால் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராமுகமாக இருப்பதாகச் சொல்வது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மொழிவாரி மாநிலங்களுக்காகக் குரல் கொடுத்ததில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கம்யூனிஸ்ட்கள் முன்நின்றனர்.
கம்யூனிஸ்ட்களின் இந்தப் பங்கை அங்கீகரித்துத்தான், தமிழ்நாடு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனார் தனது உடலைக் கம்யூனிஸ்ட்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று விரும்பினார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆந்திராவும் தமிழ்நாடும் சென்னைக்காகப் போட்டியிட்டன. எல்லாத் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் தாங்கள் இருக்கும் பகுதியில் சென்னை இருக்க வேண்டும் என்ற இரட்டை நிலைப்பாடு எடுத்தனர்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவரான தோழர் பி.சுந்தரய்யா, 'சென்னை, தமிழர்களுக்குச் சொந்தமானது. அது, தமிழ்நாட்டுடன்தான் இருக்க வேண்டும்’ என்று ஆந்திராவில் இருந்து குரல் கொடுத்தார்.
தற்போதைய தெலங்கானா பிரச்சினையில் ஆந்திராவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அவரவர் வாழ்கின்ற பகுதிக்குத் தகுந்தாற்போல் தனி தெலங்கானா என்றோ, ஒன்றுபட்ட ஆந்திரா என்றோ, பிளவுபட்டு நிற்கின்றனர். இரண்டு பகுதிகளிலும் இருக்கிற மார்க்சிஸ்ட்கள் மாத்திரமே ஒன்றுபட்ட ஆந்திரா என்பதை உரத்துச் சொல்கின்றனர்.
தமிழகத்தின் கருத்துச் சூழல் சமீப காலமாக ஆரோக்கியமற்றதாக ஆக்கப்பட்டுக்கொண்டிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களை, கருத்துக்களின் தகுதிப்பாட்டில் இருந்து விமர்சிப்பது இல்லை.
மாறாக அவை எல்லாம் ஓர் இனத்துக்கு, சாதிக்கு, மதத்துக்கு விரோதமானவை என்றும் அந்த கோரிக்கையை வைக்கிறவர்கள் துரோகிகள் என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள்.
விவாதங்களில் இருந்தும், விவரங்களில் இருந்தும்தான் உண்மைகளைத் தேட முடியும். தான் சொன்னதற்கு வேறுபட்ட கருத்துச் சொன்னால், சொன்னவர் துரோகி என்ற பிம்பத்தை உருவாக்குவது பாசிஸப் போக்கு. மிக அபாயகரமானது.
அடுத்ததாக, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இங்கு நடந்த மாணவர் போராட்டம் பற்றித் தோழர் தமிழ்ச் செல்வன் குறிப்பிட்டதை, ''லயோலா நிர்வாகம் என்றால், கிறிஸ்தவர்களாம். கிறிஸ்தவப் பின்னணி என்றால், அமெரிக்காவாம். அமெரிக்காவின் தூண்டுதலால் இந்தப் போராட்டம் நடந்ததாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூளைக்குத்தான், இப்படி உள்நோக்கம் எல்லாம் கற்பிக்க முடியும்!'' என்று இல்லாத நோக்கமும், சொல்லாத வார்த்தைகளும் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது கற்பிக்கப்படுகிறது.
இது அபாண்டம். முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்றோ, கிறிஸ்தவர்கள் என்றாலே அமெரிக்கா என்றோ ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சி சிந்தித்தது கிடையாது.
இந்தியாவின் மதவழி சிறுபான்மை மக்களை அவ்வாறு கொச்சைப்படுத்துவதைக் கண்டிக்கிற இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சி. சிறுபான்மை மக்களின் நியாயமான உரிமைகளுக்காகக் கட்சி போராடுகிறது.
அதனால்தான் கட்சி உறுப்பினர்களாகவும், சில மாநிலங்களில் கட்சியின் தளமாகவும் சிறுபான்மை மக்கள் இருக்கிறார்கள். அதேபோல், மார்க்சிஸ்ட் கட்சி அமெரிக்க மக்களுக்கு எதிரானது அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு மட்டுமே எதிரானது.
இன்று இடதுசாரிப் பாதையில் திரும்பியிருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் ஏறத்தாழ அனைவருமே கிறிஸ்தவர்கள்தான்.
அதற்காக அவர்களெல்லாம் அமெரிக்கப் பின்னணிகொண்டவர்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒதுக்கிவைக்கவில்லையே? சொல்லப்போனால், அந்த அரசுகள் கடுமையாக அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையைத்தான் எடுக்கின்றன.
சாதி மதத்துக்கு அப்பால் நின்று, மனிதகுலத்தின் மிக உயர்ந்த பண்புகளான சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடித்து வர்க்கச் சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்குவதே கம்யூனிஸத்தின் இலட்சியம்.
Geen opmerkingen:
Een reactie posten