தென்னிலங்கையின் முன்னணி இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மீண்டும் பிளவுபட்டு, புதுக்கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி. கட்சியானது 1965ம் ஆண்டு மறைந்த ரோஹண விஜேவீரவினால் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் இக்கட்சியின் அங்கத்தவர்களைக் கொண்டு 1971 மற்றும் 1988ம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆயுதக் கிளர்ச்சிகளின் முடிவில் 1989ம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ரோஹண விஜேவீர, கடுமையான தாக்குதலின் பின் அரைஉயிரோடு தீயில் இட்டு எரிக்கப்பட்டார்.
அவரது மறைவின் பின் ஜனநாயக அரசியலில் குதித்த ஜே.வி.பி. கட்சி, ஒருகட்டத்தில் தென்னிலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக உருவெடுத்திருந்தது.
இந்நிலையில் அக்கட்சியில் இருந்த ஒரு சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.
பின்னர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விமல் வீரவன்ச, ஜே.வி.பி. யிலிருந்து விலகி ஜே.என். பி என்றொரு தனிக்கட்சியை ஆரம்பித்த போது கட்சி இரண்டாக பிளவுபட்டது.
அதன் பின்னர் அண்மைக்காலத்தில் முற்போக்கு சோஷலிச முன்னணி என்ற பெயரில் ஜே.வி.பி. யில் இருந்த ஒரே தமிழ்த்தலைவர் குமார் மாத்தயாவினால் இன்னொரு கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போதும் கட்சி அங்கத்தவர்கள் மத்தியில் கணிசமான பிளவு ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில் கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீரவின் மைத்துனர் டாக்டர் சுபாஷ் சந்திரா பெர்ணான்டோவினால் விடுதலையின் பாதை (விமுக்தி மாவத) எனும் பெயரில் புதுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் ஆரம்பகால சின்னமான அரிவாள் மற்றும் சுத்தியல் என்பன புதிய கட்சியின் சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக சிறுபான்மையினரின் பிரச்சினைகள் மற்றும் நாட்டின் பிரச்சினைகளில் ஜே.வி.பி.யினர் அரசுக்கெதிரான தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக அரச மேல்மட்டத்தின் ஆதரவுடன் அக்கட்சியினை பலவீனப்படுத்தும் வகையில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான அனுசரணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten