செம்மணி கூட்டுப் படுகொலைகளின் சூத்திரதாரியொருவர் நாட்டை விட்டுத் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் அப்பாவிப் பொதுமக்கள் 600க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்து புதைக்கப்பட்டிருந்தனர்.
அதன் பின் 1996ம் ஆண்டில் நடைபெற்ற கிருஷாந்தி குமாரஸ்வாமி படுகொலைச் சம்பவத்தை அடுத்து இந்தப் படுகொலை பற்றிய தகவல்களும் வெளியாகத் தொடங்கின.
இதனையடுத்து இச்சம்பவங்களில் தொடர்புடைய இராணுவம் மற்றும் கடற்படையினர் மீது அன்றைய சந்திரிக்கா அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படை வீரர் ஒருவர் தற்போது அமெரிக்காவுக்குத் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
இந்த நபர் கடந்த 24ந் திகதி அமெரிக்கா தூதரகத்தில் நடைபெற்ற வீசா நேர்முகத் தேர்வுக்கு சமுகமளித்துள்ளார்.
இதற்கு முன்னதாக இவர் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நீதிமன்றத்தினால் முடக்கிவைக்கப்பட்டது.
அவ்வாறான நிலையில் தற்போது இந்த சந்தேக நபர் பிறிதாக கடவுச்சீட்டு ஒன்றைப் பெற்றுக்கொண்டே அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு புதிய கடவுச்சீட்டு பெறுவது நடைமுறைச் சிக்கலான விடயம் என்ற போதும், அரசின் ஆசீர்வாதம் காரணமாக இவர் புதிய கடவுச்சீட்டைப் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களை சிங்களப் பத்திரிகையான ஜனரல பத்திரிகை வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten