தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 juni 2013

தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

இந்தியாவிடம் இருந்த கச்சதீவை, இலங்கையிடம் ஒப்படைத்து இன்றோடு 39 ஆண்டுகள்!
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 11:46.34 AM GMT ] [ விகடன் ]
இந்தியாவிடம் இருந்த கச்சதீவை, இலங்கையிடம் ஒப்படைத்து இன்றோடு 39 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதே நேரத்தில் தமிழக மீனவர்களின் 30 வருட கண்ணீருக்கு காரணமாக இருக்கும் கச்சதீவு மீண்டும் மீட்கப்படுமா? என கேள்வி எழுப்புகின்றனர்  தமிழக மீனவர்கள்.
1480ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் கடல் கொந்தளிப்பின் விளைவாக வங்கக்கடலில் உருவான 12 தீவுகளில் ஒன்று கச்சதீவு.
285 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவு, கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் கொண்டது.
இந்த தீவு இராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சேதுபதி மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தத் தீவில், முத்தெடுக்கும் உரிமையினை பலருக்கும் குத்தகைக்கு விட்டிருந்தனர்.
அவ்வாறு முத்தெடுக்கச் சென்ற இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த சீனிக்கருப்பன் படையாச்சி என்பவர் கச்சதீவில் அந்தோனியார் கோயில் ஒன்றை உருவாக்கினார்.
இந்த கோயிலில் 1905ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் திகதியன்று திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், இந்த விழாவில் பங்கேற்பதுடன், கச்சதீவு பகுதியில் மீன்பிடித்தும், வலைகளை உலர்த்தியும் வந்தனர்.
இந்நிலையில் 1947ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தால் கச்சதீவு இந்திய அரசின் வசம் வந்தது.
ஆனால் இலங்கையோ 1920ம் ஆண்டிலிருந்தே கச்சதீவு தங்களுக்குதான் சொந்தம் எனக் கூறி வந்தது.
அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க டெல்லி வந்திருந்த போது, இது குறித்து பிரதமர் இந்திரா காந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது தொடர்பாக உடன்பாடு காண்பது என அப்போது முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் 1974 ம் ஆண்டு ஜூன் 28 ம் நாள், கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பு டெல்லியிலும், கொழும்பிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திடும் முன், கச்சதீவை இலங்கைக்கு கொடுப்பது குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டிருந்தார்.
கச்சதீவு தமிழ்நாட்டுக்கு சொந்தம், அதனை இலங்கைக்கு கொடுக்க கூடாது என அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, பிரதமர் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
கச்சதீவை மத்திய அரசு இலங்கைக்கு தானம் செய்தது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தையும் கருணாநிதி கூட்டினார்.
அந்த கூட்டத்தில் கச்சதீவு பிரச்சினையில் மத்திய அரசு தனது நிலையை மறுபரிசீலனை செய்வதுடன், கச்சதீவின் மீது இந்திய அரசுக்கு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும் என தீர்மானம் போடப்பட்டது.
ஆனாலும் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.
இந்திய, இலங்கை அரசுகள் செய்து கொண்ட கச்சதீவு ஒப்பந்தத்தில், இந்திய மீனவர்களும், இறைவழிபாட்டு பயணிகளும் இதுவரை கச்சதீவை அனுபவித்ததை போல தொடர்ந்து வந்து போய் இருக்க உரிமை உடையவர்கள்.
இவ்வாறு வந்து போவதற்கு, இலங்கை அரசிடம் இருந்து எவ்வித பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியினையோ பெற வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இருநாட்டு படகுகள், கப்பல்கள் இதுவரை என்னென்ன உரிமைகளை இரு நாட்டு கடல் பகுதியிலும் அனுபவித்தனரோ, அதே உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்க உரிமை உண்டு எனவும் கூறப்பட்டிருந்தது.
இதன் பிறகு, 1976ம் ஆண்டில் இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே கச்சதீவு ஒப்பந்தம் தொடர்பாக கடிதங்கள் பரிமாறப்பட்டன.
பின்னர் அந்த கடிதங்களே ஒப்பந்தமாகவும் உருவாக்கப்பட்டன.
இதன்படி தமிழக மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையும் தாரை வார்க்கப்பட்டது.
இதன் பின்னரே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலை இலங்கை கடற்படையினர் தொடங்கினர்.
1983ம் ஆண்டு ஆகஸ்ட் 13ல் தொடங்கிய தாக்குதல் இன்று வரை 30 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல் கச்சதீவை திரும்பப் பெற வலியுறுத்தி 1974ல் போடப்பட்ட தீர்மானங்கள் கடந்த 39 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
கச்சதீவினை தானம் கொடுத்தது குறித்து அப்போது கருத்து தெரிவித்த இராமநாதபுரம் மன்னர் இராமநாத சேதுபதி, மத்திய அரசின் இந்த முடிவு துக்ககரமானது, கண்ணீர் விட்டு அழுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
அவர் கூறியது எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பது இன்று தெரிகிறது.
இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நம் மீனவர்கள், அன்று முதல் இன்று வரை கண்ணீர் விட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
தமிழக மீனவர்களின் 39 வருட கண்ணீரை துடைக்க, கச்சதீவை மீட்டெடுக்குமா நமது அரசுகள்?

தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 11:35.08 AM GMT ]
தமிழ்நாடு, அகதி முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர் அழகுராஜா (வயது 32).
இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் இவருக்கும், இவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் புதன்கிழமையன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த அழகுராஜா மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீயிட்டு கொண்டார்.
வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten