தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 juni 2013

7வருடங்களாக தடுத்து வைத்துள்ள சந்தேகநபர்! விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரதம நீதியரசர் உத்தரவு

தென்னாபிரிக்க பிரதியமைச்சர் - சோமவன்ச அமரசிங்க சந்திப்பு - மூங்கிலால் பாதுகாப்பு கடவை!- பிரதேச மக்கள் எதிர்ப்பு
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 11:46.11 AM GMT ]
இலங்கை சென்றுள்ள தென்னாபிரிக்காவின் சர்வதேச விவகார ஒத்துழைப்புக்கான பிரதியமைச்சர் இப்ராஹிம்-இப்ராஹிம், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவை சந்தித்துள்ளார்.
இதன்போது தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயங்கள் பற்றி பேசப்பட்டது.
இலங்கை போன்ற சிறிய நாட்டில் தேசிய இனப்பிரச்சினை ஒன்று தோன்றுவதற்கான காரணங்களை தலைவர் சோமவன்ச அமரசிங்க, தென்னாபிரிக்க அமைச்சரிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.
இதனிடையே, தென்னாபிரிக்க பிரதியமைச்சர் முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து தமிழர் பிரச்சினை குறித்து கேட்டறிந்து கொண்டார்.
இலங்கை தேசிய பிரச்சினைக்கு தென்னாபிரிக்காவின் அனுபவங்கள் எவ்வாறு உதவும் என்ற வகையில் அந்த சந்திப்பில் ஆராயப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளர்
தெரிவித்திருந்தார்.
பின்னர் ஆளும் கட்சி தரப்பினரை சந்தித்த நிலையில், பிரதியமைச்சர் இப்ராஹிம் தமது பயணத்தை முடித்துக்கொண்டார்.
மூங்கிலால் பாதுகாப்பு கடவை!-  பிரதேச மக்கள் எதிர்ப்பு
அளுத்க பஸ் டிப்போ வீதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற கோர விபத்தை அடுத்து அங்கு தற்காலிகமாக மூங்கில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புகையிரத திணைக்களத்தினால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குறித்த பாதுகாப்பு வேலி தொடர்பில் பிரதேச வாசிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
6 உயிர்களை பலிகொண்ட அனர்த்தம் இடம்பெற்ற பின்னர் பிரதேச மக்கள் பாதுகாப்பு வேலியொன்றை அமைக்குமாறு கோரியிருந்தனர்.
எனினும், முழுமையான வேலியாக அன்றி தற்காலிக மூங்கில் வேலி அமைக்கப்பட்டமை தமக்கு மீண்டும் இழைக்கப்பட்ட அநீதி என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காரணமாக பலவுயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
இதேவேளை, விபத்துக்குள்ளான வாகனத்தை செலுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்லப்பட்ட அனுமதிக்கப்பட்டுள்ளார்.

7வருடங்களாக தடுத்து வைத்துள்ள சந்தேகநபர்! விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பிரதம நீதியரசர் உத்தரவு
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 11:58.01 AM GMT ]
வழக்கு விசாரணை எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயார் செய்யுமாறு இலங்கையின் சட்ட மா அதிபருக்கு இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். 
ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு சுமார் 7 வருடங்களுக்கும் மேலாக விசாரணைகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போதே பிரதம நீதியரசர்  அடங்கலான 3 நீதிபதிகள் குழு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அந்த மனுதாரரின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி தனது வாதத்தில் இவ்வாறு வருடக் கணக்கில் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்படுவது இலங்கை அரசியலமைப்பை மீறும் செயல் என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இவ்வாறு விசாரணைகள் இன்றி வருடக்கணக்கில் ஆட்களை தடுத்து வைப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தல் அல்லது விடுதலை செய்தல் குறித்து சட்ட மா அதிபர் துரித முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதனடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்வதற்கான அல்லது விடுதலை செய்வதற்கான ஒரு துரித திட்டத்தை தயாரிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
இதன் முதற்கட்டமாக போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பல காலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் பட்டியலை அடுத்த மாதம் 9ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
அதனைப் பரீசீலித்து தான் அவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்வதா அல்லது அவர்களை விடுதலை செய்வதா என்பது குறித்து முடிவு எடுக்கவுள்ளதாகவும் மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten