வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு வசதியாக வடமாகாண சபை உருவாக்கம் தொடர்பான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று கையொப்பமிடவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி வட-கிழக்கு மகாணங்கள் ரத்துச் செய்யப்பட்டு வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணம் தனி மாகாணமாக கடந்த 2008ம் ஆண்டு ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அங்கு இரண்டு தடவைகள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடக்கு மாகாண சபைக்கு முதன் முதலாக தேர்தல் நடத்தப்படவுள்ளதால், மாகாண சபையை உருவாக்கும் பிரகடனம் மற்றும் மாகாண சபைக்கான தேர்தலை நடத்தும் உத்தரவுகளில் ஜனாதிபதி கையொப்பமிட வேண்டும். அதற்கான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த இன்று கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வடமாகாண சபைத் தேர்தலை செப்டம்பர் மாத கடைசிப் பகுதியில் நடத்தவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளததாக அறியக் கிடைத்துள்ளது. எனினும தேர்தல் தொடர்பான திகதியை தானே தீர்மானிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம்- அலரிமாளிகையில் இன்று..
ஆளுங்கட்சியின் முக்கிய பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் அவசரமாக நடைபெறவுள்ளது.
அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று அறியக் கிடைத்துள்ளது.
இதற்கான அழைப்பு நேற்றிரவு முழுவதும் ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி வழியாக வழங்கப்பட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், அதற்கான எதிர் நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படலாம் என்று தெரிய வருகிறது.
கூட்டத்தின் முடிவில் 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான தீர்மானம் ஒன்றை மத்திய குழுவில் முன்மொழிவதற்கு ஜனாதிபதி தனக்கு நம்பகமான அமைச்சர் ஒருவரை ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதன் பின் மத்திய குழு உறுப்பினர்கள் அதனை வழிமொழிவார்கள் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றும் உரை சற்று காரசாரமாக இருக்கலாம் என்றும், ஒரு சில அமைச்சர்களை கடுமையாக எச்சரிக்கும் தொனியில் அவரது உரை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten