அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள், 13ம் திருத்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு உடன்படவில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 13ம் திருத்தம் சட்டம் என்பது, நாட்டில் தொடர்ந்து பேணப்பட வேண்டிய விடயம்.
எனினும் இதனை அரசாங்கம் இல்லாது செய்ய முயற்சிக்கின்ற நடவடிக்கைக்கு அனைத்து தரப்பும் ஒத்து போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியிலேயே ஆதரவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த சந்திப்பில் கருத்துரைத்த முன்னாள் அனைத்து கட்சிகளின் குழுத் தலைவர் திஸ்ஸ வித்தாரன, 13ம் திருத்த சட்டத்தின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனி ராச்சியத்தை அடைந்துவிடும் அச்சமே, அதனை திருத்துவதற்கான முயற்சிகளுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தனி நாடு குறித்த அச்சம் இருந்தது. ஆனால் தற்போது அந்த சூழ்நிலை மாறிவிட்டது.
தமிழர்களின் தனித்து வாழ விரும்பவில்லை. அத்துடன் 13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கையில் தனி நாட்டினை உருவாக்கவும் முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச்சட்டம் கட்டாயமாக திருத்தப்படும்: அரசாங்கம்
13ம் திருத்தச் சட்டம் நீண்டகாலமாக திருத்தப்படாமல் இருப்பதாலேயே அதனை சீர்த்திருத்தத்துக்கு உட்படுத்த தற்போது ஜனாதிபதி முன்வந்திருப்பதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், 13ம் திருத்தச்சட்டம் அறிமுகமாக்கப்பட்ட தினத்தில் இருந்து நீண்ட காலமாக எந்த திருத்தத்துக்கும் உட்படுத்தப்படவில்லை.
இது ஆச்சரியமளிக்கின்ற விடயமாக இருக்கிறது.
எனவே இதனை தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் திருத்த வேண்டிய அவசியம் காணப்படுகிறது.
இந்த நிலையில் இது கட்டாயமாக திருத்தத்துக்கு உட்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten