தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 juni 2013

அவதூறு செய்தி வெளியிட்டமைக்கு மன்னிப்புக் கோருமாறு பத்திரிகை நிறுவனத்துக்கு யாழ். நீதிமன்றம் ஆலோசனை

எமது மக்களின் தியாகங்களிற்கு மாகாணசபை தீர்வாகுமா? - கிளிநொச்சியில் மாவை. சேனாதிராசா
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 11:57.14 AM GMT ]
தோற்கடிக்கப்பட்ட சமூகம் என்ற பேரினவாதிகளின் கூற்றினை ஜனநாயக முறையில் நாம் வென்று காட்டுவதற்காகக் கிடைத்த இத் தருணத்தை உரிய முறையில் கட்டமைத்து அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் இத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா அவர்கள் தெரிவித்தார். 
சமகால அரசியல் பற்றிய கருத்தமர்வு ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு தனது கருத்துரையின வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா அவர்கள் உரையாற்றுகையில், 
எண்ணற்ற தியாகங்கள், எத்தனையோ உயிர்ப்பலிகள் இந்த மண்ணிற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
எந்த நிலத்தில் வாழ வேண்டுமென்று இத்தனை தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டதோ அந்த மண் எங்கள் மக்களிடத்தில் இல்லை.
ஜனநாயகத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்தோரல் எம் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுவிட்டது.
எமது மக்கள் பாரம்பரியமாக உரிமை கொண்டாடிய காணிகள் இப்பொழுது அரசாலும் இராணுவத்தாலும் அவை சார்ந்தோராலும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.
தகுதியற்ற முறையில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டு அக்குடும்பங்கள் தமிழ் தேசியத்திலிருந்து திட்டமிடப்பட்டு அந்நியப்படுத்தப்பட்டு வருகின்றன.
புனர்வாழ்வென்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய போராளிகள் வரப் போகும் தேர்தலை முன்னிட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இப்படிப் பல எதிர்பார்ப்புகளை அனைத்துத் தரப்பினருக்கும் விதைத்திருக்கும் மாகாணசபைத் தேர்தல் இத்தனை காலமும் எம் மக்கள் மேற்கொண்ட தியாகங்களிற்கு முடிவாகுமா என்றால் நிச்சயமாக இல்லை.
மாகாண சபையினை வெற்றி கொண்ட பின் எந்த நிலத்தில் நாம் வாழப் போகிறோம்? தேர்தலுக்கான போராட்டத்தை விட எங்கள் நிலமீட்பும் வாழ்வுரிமைக்கான போராட்டமுமே மிக முக்கியமானது.
இது பற்றி நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகள் என்ற வகையில் மாகாணசபை எமது மக்களிற்கான தீர்வு என நாம் ஒரு போதும் கூறவில்லை.
13ம் திருத்தம் பற்றி எந்த ஒரு இடத்திலும் நாம் பிரஸ்தாபிக்கவில்லை.
சொல்லப்போனால் இலங்கை அரசாங்கம் தான் 13ம் திருத்தம் பற்றியும் அதற்கு மேலாகவும் போய் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்க அரசு தயாராக இருப்பதாக தமிழரையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றி வந்திருக்கிறது.
இம் மாகாண சபை எதனையும் தமிழர்க்கு வழங்காத போதிலும் எமது மக்கள் எமக்கு வழங்கும் ஆணையினை சர்வதேசத்துக்கு உணர்த்த வேண்டிய தேவை எமக்குள்ளது.
தோற்கடிக்கப்பட்ட சமூகம் என்ற பேரினவாதிகளின் கூற்றினை ஜனநாயக முறையில் நாம் வென்று காட்டுவதற்காகக் கிடைத்த இத் தருணத்தை உரிய முறையில் கட்டமைத்து அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் இத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இக்கருத்தமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வீ.கே சிவஞானம், கரைச்சிப் பிரதேச சபை உப தவிசாளர் வ. நகுலேஸ்வரன், பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், அமைப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.


அவதூறு செய்தி வெளியிட்டமைக்கு மன்னிப்புக் கோருமாறு பத்திரிகை நிறுவனத்துக்கு யாழ். நீதிமன்றம் ஆலோசனை
[ சனிக்கிழமை, 29 யூன் 2013, 10:57.32 AM GMT ]
அவதூறு கிளப்பும் செய்தியை வெளியிட்டமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பகிரங்க மன்னிப்புக் கோருமாறு யாழ். பத்திரிகை ஒன்றின் உரிமையாளருக்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
உதயன் பத்திரிகையில் தமக்கு எதிராக வெளியிடப்பட்ட செய்திகளினால் தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக மானநஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேற்று யாழ். மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது எதிராளியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கணேசராசாவை விளித்து உங்களின் கட்சிக்காரர்கள் இவ்வழக்குகளை சமாதானமாக தீர்த்துக் கொள்ளக் கூடிய வகையில் வழக்காளியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இந்நீதிமன்றத்திலும் தங்களுடைய பத்திரிகையிலும் மன்னிப்புக் கோரும் முறையில் வழக்கறிஞரான நீங்கள் உங்களுடைய கட்சிக்காரர்களை தூண்ட வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.
அதேபோன்று எதிராளிகள்  அமைச்சரிடம் மன்னிப்புக் கோரும் பட்சத்தில் இவ் வழக்குகளை சமாதானமாக முடிவுக்கு கொண்டு வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் ஊக்குவிக்குமாறு அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிக்கும் மாவட்ட நீதிபதி ஆலோசனை வழங்கினார்.
இவ்வழக்குகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.அப்துல் நஜீம்முடன் சட்டத்தரணி தேவராஜன் ரெங்கன், சட்டத்தரணி செலஸ்ரின் ஸ்ரனிஸ்லோஸ் அனுசரணையுடன் ஆஜரானார்கள்.
இவ்வழக்கின் மேலதிக விசாரணை செப்ரெம்பர் மாதம் 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த மற்றுமொரு மானநஷ்டஈடு கோரும் வழக்கு நேற்று அழைக்கப்பட்ட வேளையில் எதிராளி சார்பாக முறையான பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் அவ்வழக்கை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு நியமிக்குமாறு வழக்காளி சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.அப்துல் நஜீம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்து சட்டத்தரணி கணேசராசா ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
இரு தரப்பினரதும் வாதப் பிரதிவாதங்களை கவனத்திற் கொண்டு இது தொடர்பாக மாவட்ட நீதிபதி குறித்த வழக்கை யூலை 9 ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Geen opmerkingen:

Een reactie posten