[ valampurii.com ]
புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் என்ற செய்தி கிடைக்கும் வரை யுத்த நிறுத்தம் செய்யப்படுவதை இந்தியா விரும்பியிருக்க இல்லை.
இதன் காரணமாக தனது தூதுவர்களை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களின் நலன்களை பேணுவதுபோல ஒரு காட்டாப்பை இந்திய மத்திய அரசு செய்து கொண்டிருந்தது.
தமிழகத்து மக்களை சமாளிப்பதற்கும் தஙகளை மலையாக நம்பியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு தாங்கள் அபயம் அளிப்பது போலக் காட்டிக் கொள்ளவும் இத்தகையதொரு முயற்சி.
இதற்கு அப்பால் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் வரை, இந்தியாவுடனான நட்பை உறுதி செய்வது என்பதும் போர் வெற்றி முடிந்த கையோடு இந்தியாவின் தலையீட்டை தவிர்க்கும் வகையில் சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவது என்ற நினைப்பும் இலங்கை அரசிடம் இருந்தது.
ஆக, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது, ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை மழுங்கடிப்பது என்பதைத் தவிர, வேறு எந்த விடயத்திலும், இலங்கை-இந்திய உறவு ஒருமைத்தன்மை கொண்டதாக இருக்க இல்லை என்பது மறுதலிக்க முடியாத உண்மை.
இதற்கு பல ஆதாரங்களைச் சுட்டிக்காட்ட முடியும். வன்னிப் போர் நடைபெற்ற கையோடு இந்தியத் தூதுவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தனராயினும் அவ் விஜயத்தால் எந்தப் பயனும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை.
அதிலும் ஆகக் கூடிய வேதனை, முட்கம்பி வேலிக்குள் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்களை அடைத்து வைத்து அதிகூடிய மனித உரிமை மீறல் சம்பவம் நிகழ்ந்த போதிலும் அதனைக் கூட இந்தியா கண்டு கொள்ளாமல் இருந்தமையாகும்.
அப்படியானால் போருக்குப் பின்பாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வு காண்பதற்கு அழுத்தம் கொடுக்குமா என்றால் அதுவும் இல்லை.
தமிழ் மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுத்தால், அது எந்த வகையிலும் தமிழகம் தனிநாடு அமைப்பதற்குக் காலாகி விடும் என்ற நினைப்பு இந்திய மத்திய அரசிடம் இருக்கவே செய்தது.
இதன் காரணமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது பற்றி எதுவும் அலட்டிக் கொள்ளாமல், தமிழ் மக்களின் அடிப்படை வசதி, வீட்டுவசதி என்று பேசிக் கொண்டது. தானும் சில வீடுகளை கட்டித் தருவதாகவும் கூறிக் கொண்டது.
எனினும் இது பற்றி தெரிந்து கொள்ளாத இலங்கை அரசு எப்பாடுபட்டும் இந்தியா இனப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தும் என நினைத்து சீனாவுடன் உறவை பலப்படுத்தியது.
சீனாவுடனான உறவின் காரணமாக ஆத்திரம் உற்ற இந்தியா 13-வது திருத்தச் சட்டமூலத்தை கையில் எடுத்துக் கொண்டு செய் என்று நிர்ப்பந்தம் கொடுக்க முடிவு கட்டவிட்டது.
ஆக எல்லாம் அ(வன்) செயல் என்று கூறுவதை விட வேறு எதுவும் இல்லை.
Geen opmerkingen:
Een reactie posten