தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 juni 2013

இந்திய அரசின் வீட்டுத்திட்டம் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கா? வீடில்லாதவர்களுக்கா?: மனிதஉரிமை ஆர்வலர் ஆதங்கம்!

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்: கண்டியில் ஆச்சரியம்
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 10:36.39 AM GMT ]
கண்டியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை இன்று பிரசவித்துள்ளார்.
கண்டி மடவள பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கர்ப்பிணித் தாய் ஒருவரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.
குறித்த தாய்க்கு இதுவே முதல் பிரசவம் எனவும் இப் பிரசவத்தில் நான்கு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று குழந்தைகள் கண்டி மருத்துவமனையில் உள்ளதாகவும், நிறை பற்றாக்குறை காரணமாக ஒரு குழந்தை பேராதனை மருத்துவமனைக்கும்  மற்றுமொரு குழந்தை பண்டாரவளை மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டிருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசின் வீட்டுத்திட்டம் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கா? வீடில்லாதவர்களுக்கா?: மனிதஉரிமை ஆர்வலர் ஆதங்கம்
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 11:07.54 AM GMT ]
முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் சிறப்பு அமர்வு குழுவின் தலைவர் ரவிகரன் தலைமையில் முல்லைத்தீவு நகர் அமைதி இல்லத்தில் நடைபெற்றது.
பிரஜைகள் குழுவின் செயல் திறன், இலக்குகள், நடப்பாண்டு மற்றும் இனிவரும் ஆண்டுகளுக்கான வேலைத்திட்டங்கள், நிகழ்காலத்தில் பிரஜைகள் குழு தனது பணியில் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகள், சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அமர்வில் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக்களின் காப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர் கலந்துகொண்டு ஆழமான பல கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
அமர்வில் முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்கள், குழுவின் பிரதேச இணைப்பாளர்கள், அங்கத்தவர்கள், மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த கிராமிய, மாதர் அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள், கமக்கார, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், சமுக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு, தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலன் சார்ந்தும், நிலம் சார்ந்தும், தொழில் வளம் மற்றும் தொழிலுரிமை சார்ந்தும், மனித உரிமைகள் தொடர்பிலும் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கருத்துகளை பதிவு செய்தனர்.
அமர்வில் கருத்துரை வழங்கிய சண் மாஸ்டர்,
வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள் தெரிவின்போது புள்ளியிடும் திட்டம் கவனத்தில் கொள்ளப்படுவதாகவும், இந்த புள்ளியிடும் திட்டத்தில் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை மிகப்பிரதானமானதெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தில் பலர், குடும்ப அங்கத்தவர்களை கொத்துக்கொத்தாக இழந்து தனித்துப்போய் கையறுநிலையில் இருக்கிறார்கள். யுத்தம் தந்த கைம்பெண்கள் ஏராளம். அபலைப்பெண்கள் ஏராளம்.
யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், இந்த புள்ளியிடும் நடவடிக்கையால் வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு, தறப்பாள் கொட்டகைக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டுத்திட்டம் கிடைத்தவர்கள் வீட்டுத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாமையால் கடன்காரர்களாகவும், வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்கள் மனநோயாளிகளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
குடும்ப அங்கத்தவர்களை இழந்து தனிமரமாக வீதியில் நிற்பவர்களிடம் அங்கத்தவர்களை காட்டு வீடு தருகிறோம் என்றால், அவர்கள் கொல்லப்பட்ட தமது அங்கத்தவர்களுக்கு உயிர் கொடுத்து கூட்டிவரவா முடியும்?
எனவே தனிநபர், இருவர், இரண்டுக்கு மேற்பட்டோர் எனும் அங்கத்தவர் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் பரிந்துரை செய்ய வேண்டும். அதிலும் இறுதி யுத்தத்தை சந்தித்தவர்களுக்கு அவசியம் வீடுகள் வழங்கப்பட வேண்டும். அங்கத்தவர் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டுதான் வீட்டுத்திட்டம் வழங்கப்படுமென்றால், முள்ளிவாய்க்காலில் பேரவலத்தைச் சந்தித்த பெரும்பாலான தமிழ் மக்களுக்கு வீடே கிடைக்காமல் போய்விடும் ஆபத்தும் உள்ளது.
எனவே இந்திய அரசானது தான் வழங்கும் வீட்டுத்திட்டம் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கா? அல்லது வீடில்லாதவர்களுக்கா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். வீடில்லாதவர்களுக்குத்தான் வீட்டுத்திட்டம் என்றால் கொழும்பிலும், டெல்லியிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடில்லாமல் இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும் என்றார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த குழுவின் தலைவர் ரவிகரன், தமிழர்களின் பூர்வீக நிலமான மணலாறு பிரதேசத்திலிருந்து அபகரிக்கப்பட்ட 2590 ஏக்கர் விவசாய விளைநிலங்களை (நெற்செய்கை காணிகள்) மீட்டுத்தருமாறு கடந்த வாரம் மணலாறு பிரதேச செயலருக்கு மகஜர் கையளித்திருந்தோம்.
பிரதேச செயலர் குறுகிய காலத்துக்குள் இதற்குரிய தீர்வினை முன்வைக்காது விட்டால், முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமையில், கரைத்துறைப்பற்று பிரதேச எல்லைக்கிராமங்களில் வாழும் நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் இணைந்து தொடர்ச்சியான ஜனநாயக போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம்.
மாவட்டத்தின் அரச திணைக்களங்களில் நீண்டகாலமாக எவ்வித கொடுப்பனவுமின்றி தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய சுகாதார, ஆசிரியத்தொண்டர்கள் மற்றும் ஏனைய தொண்டர் ஊழியர்களின் சேவைக்கால அர்ப்பணிப்பை, சேவைக்கால மூப்பை கவனத்தில் கொள்ளாது முறையற்ற விதத்தில் அண்மையில் ஆளணி உள்ளீர்ப்புகளும், நியமனம் வழங்கல்களும் இடம்பெற்றுள்ளன.சட்டத்திற்கு முரணான வகையில் இந்த நடவடிக்கைகளை அமைச்சர் ஒருவர் செய்து கொண்டிருக்கின்றார்.
இந்த தொண்டர் ஊழியர்களினுடைய சுயகௌரவம் மற்றும் குடும்ப பொருளாதார நிலைமைகளில் இந்த அரசு தனது கோரக்கரங்களை வைத்துள்ளது. கல்வித்தகைமைகளை கவனத்தில் கொள்ளாது அரச ஆதரவு பட்டாளங்களுக்கு மட்டும் அரச வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குடும்ப வறுமை மற்றும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் கற்று சித்தியடைந்துவிட்டு எதிர்காலம் பற்றிய கனவுகளோடு இருந்த, இந்த மாவட்டத்தினுடைய பல ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு வன்மையாக கண்டிப்பதோடு, இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகள் இனியும் தொடரக்கூடாது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten