தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 juni 2013

திருமலை கற்பகப் பிள்ளையார் ஆலய சிலையுடைப்பு! மத சுதந்திரம் மீதான திட்டமிட்ட தாக்குதல்!- ஜனார்த்தனன்

கிளி. இந்துக் கல்லூரியில் தரம் 07 மாணவியை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியதில் பாதிப்பு!
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 01:40.18 AM GMT ]
கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் தரம் 07 ல் கல்வி கற்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் கடுமையாக பொல்லு ஒன்றினால் தாக்கியதனால் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த 12 வயது மாணவி வைத்தியசாலையில் சிகிசை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவியவருவதாவது
கடந்த வெள்ளிக்கிழமை (07-06-2013)  அன்று கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த நல்லதம்பி பிறையரசி என்ற தரம் 07 ல் கல்வி மாணவி பாடசாலைக்கு சென்று கல்விச் செயற்பாடுகளில் ஈடுப்பட்டிருந்த வேளை சித்திரம் கற்பிக்கும் ஆசிரியர் வகப்புக்குள் பிரவேசித்த போது அங்கு வகுப்பறையில் மாணவர்களின் மேசைகளில் எழுதப்பட்டிருந்த தொடர் இலக்கத்தில் இலக்கம் ஒன்று அழிக்கப்பட்டிருந்தது.
இதனை அவதானித்த குறித்த சித்திரபாட ஆசிரியர் மாணவர்களிடம் யார் அழித்தது என வினாவியுள்ளார். மாணவர்கள் கூற மறுத்ததனை தொடர்ந்து மேற்படி குறித்த மாணவி உள்ளிட்ட ஆறு மாணவர்களை மொத்தமான தடி ஒன்றினால் முழங்காலுக்கு கீழே கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.
இதன் போது குறித்த மாணவியின் காலின் பின்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் நடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த மாணவியை உருத்திரபுரம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் அங்கு சிகிசைக்கு அனுமதித்து பின்னர் அன்று மாலை ஐந்து மணியளவில் செல்வாநகரிலுள்ள மாணவியின் வீட்டிற்கு சக மாணவியுடன் அனுப்பி வைத்துள்ளார்.
வீடு சென்றடைந்த மாணவி நடக்க முடியாது துன்பப்பட்ட நிலையில் பெற்றோர்கள் காரணத்தை விசாரித்த போது மாணவி தனக்கு நடந்ததை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த தரம் 07 ல் கல்வி கற்கும் மாணவி தாக்கப்பட்ட அன்றுமுதல் மூன்று நாட்களாக நடக்க முடியாது பெரும் சிரமப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.
காலின் எலும்புகள் பாதிக்கப்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தில் மேலதிக சிகிச்சைக்கு மாணவியை உட்படுத்த பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.
மேலும் இந்து கல்லூரியில் கல்வி கற்கும் செல்வாநகரைச் சேர்ந்த மாணவன் ஒருவனும் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டு காது கேட்காது இருப்பதாகவும் சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியரின் இந்த மோசமான நிலையினை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு ஏனைய பெற்றோர்களும் கடும் விசனமடைந்துள்ளனர்.
 மாணவர்களை ஆசிரியர்கள் இவ்வாறு மோசமாக கண்மூடித்தனமாக தண்டிப்பதனை நிறுத்த வேண்டும் எனவும், மேற்படி சிறுமியை தாக்கிய ஆசிரியருக்கு ஏதிராக கல்வித் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேணடும் எனவும் பெற்றோர்கள் கோருகின்றனர்.
எல்லா பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட சுற்று நிரூபம் ஒன்றின் படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தடியினால் அடிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
இருப்பினும் இவ்வாறான ஆசிரியர்கள் தண்டனை என்ற பெயரில் கண்மூடித்தனமாக மாணவர்களை தண்டிப்பது சிறுவர் துஸ்பிரயோகமே என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

திருமலை கற்பகப் பிள்ளையார் ஆலய சிலையுடைப்பு! மத சுதந்திரம் மீதான திட்டமிட்ட தாக்குதல்!- ஜனார்த்தனன்
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 02:14.02 AM GMT ]
திருகோணமலை கற்பக பிள்ளையார் ஆலயத்தின் கோபுர புனருத்தாபனம் இடம்பெற்று வருகின்ற நிலையில் சிலைகள் சில திட்டமிட்ட முறையில் உடைக்கப்பட்டிருப்பதானது தமிழ் பேசும் மக்களின் மத சுதந்திரத்தின் மீது விடுக்கப்படும் மேலுமொரு அச்சுறுத்தலாகும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ. ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.
சிலைகள் திட்டமிட்ட முறையில் உடைக்கப்பட்ட ஆலயத்திற்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்து அவர் விடுத்துள்ளஅறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
திருகோணமலை மாவட்டத்தின் நகரமையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் கோபுரமானது புனருத்தாபனப் பணிகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்ற வேளையில் கோபுரத்தில் காணப்பட்ட பதின்மூன்று சிலைகள் நாசகாரசக்திகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளன.
இம்மாதிரியான மதங்களுக்கு எதிரான வன்முறைகள் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலங்களில் அரங்கேறி வருகின்றன. மிகவும வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய அதேவேளை இத்தகைய செயல்கள் யாரால் எந்தநோக்கத்திற்காக செய்யப்படுகின்றன என்பதை இன்னமும் பொலிஸார் கண்டறியவில்லை என்பது கண்டனத்திற்குரியது.
குறித்த மாகாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் நேரடியாக இவ்வாலயத்தைச் சென்று பார்வையிட்ட வேளையில் பொலிஸார் ஆலய வளாகத்திற்கு வருகை தந்து புகைப்படங்களை எடுத்துச் சென்றதாக. அறிகின்றேன். எனினும் இத்தகைய ஆரம்ப கட்ட விசாரணைகள் எந்தளவு தூரம் சரியாக மேற்கொள்ளப்படும் என்பதை நிச்சயிக்க முடியாதுள்ளது.
கடந்த கால சம்பவங்களைப் போலவே இவ் வன்முறையும் பூசிமெழுகப்பட்டு விடாது தொடர்ந்து விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். பாரபட்சமின்றி குற்றவாளிகள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும்.
திருக்கோணேச்சரநாதர் கோவில் கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு பிரசித்தமான ஆலயங்கள் காணப்படுகின்றன. நகர மையத்தில் கடற்காட்சி வீதியை அண்மித்த ஆலயத்துக்கே இந்நிலைமையெனில் ஏனைய ஆலயங்களின் பாதுகாப்பு என்பதும் பெரும் கேள்விக்குரியதாகவே உள்ளது.
இந்துமத ஆலயங்கள் மட்டுமல்ல எந்த மத வழிபாட்டுத்தலங்களாயினும் அவை புனிதமாக மதிக்கப்பட வேண்டியவை – போற்றப்பட வேண்டியவை– பாதுகாக்கப்பட வேண்டிவை. திருகோணமலை மாவட்டத்தில் பல மதங்களைச் சார்ந்த மக்களும் சமாதானமாக பன்னெடுங் காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கற்பகப் பிள்ளையார் ஆலயத்தின் சிலையுடைப்புச் சம்பவமானது இனரீதியான முறுகல்களுக்கு வழிகோலுவதாக அமையலாம். நாடாளாவிய ரீதியில் பௌத்த மதஞ் சாரா வழிபாட்டுத் தலங்களுக்கெதிராக பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கான காரணங்கள் இனவாத மற்றும் மதவாத அடிப்படைகளாக இருக்கின்ற போதும் இன்னமும் தகுந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. விசாரணைகளின் உண்மைத்தன்மையினையும் யாரும் புரிந்த பாடில்லை.
இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்களின் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் பன்மைத்துவ காலாசாரங்களையடையது நமது நாடு என்று மட்டும் சொல்லிக் கொண்டு குறித்த மதங்களுக்கெதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது விசனத்திற்குரியது.
நமது நாட்டுப் பிரசைகளின் கலாசாரங்களைப் பேணவேண்டிய கடப்பாட்டினை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் விடுவது இனமுரண்பாடுகளை மேலும் அதிகரிக்கும் விடயமேயாகும்.
​ஒரு மக்கள் குழுமத்தை அநாதையாக்கி விடுவதற்கு அவர்களை அழிப்பதை விட அவர்களின் பாரம்பரிய விழுதுகளை வேரற்றதாக்கி விடுவது சிறந்த வழியென உணர்ந்த இனந்தெரியாத கும்பலால் இத்தகைய சிலையுடைப்புச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை சகலரும் அறிவர்.
அதுமட்டுமன்றி மட்டக்களப்பில் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் புத்தர் சிலைகளும் தாமாகவே முளைத்துக் கொள்கின்றன. சிலைகளை உடைப்பதும் சிலைகளைப் படைப்பதும் நவீன இன மோதலுக்கான வியூகங்களாகி விட்டன. ஆனால் சிலைகளைப் படைப்பதொன்றும் திருகோணமலை நகருக்கு புதியதல்ல.
​கற்பகப் பிள்ளையார் ஆலயமானது அவ்வாலயத்தைச் சூழவாழும் மக்களின் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்டதாகும். தற்போது நடந்து வருகின்ற புனருத்தாரணப் பணிகளும் சாதாரணமான மக்களின் வியர்வையைப் பணமாக்கி செய்யப்பட்டு வருகின்ற வேளையில் இம்மாதிரியான செயல்கள் அவர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளன.
ஆகவே நல்ல உள்ளங்கள் இவ்வாலய திருப்பணிக்கு உதவ முன்வர வேண்டும் என்பது என் அன்புக் கோரிக்கையாகும். இத்தகைய செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமலிருப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனின் தற்போது நடைபெற்ற சம்பவத்தின் சூத்திரதாரிகள் கட்டாயமாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்கு பொலிஸார் தகுந்த வண்ணம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Geen opmerkingen:

Een reactie posten