தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 juni 2013

இலங்கை இராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கு எதிர்ப்பு! போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த பொலிஸ் குவிப்பு

மாகாண சபை முறைமையை மாற்றக் கோரி பேரினவாத கட்சிகள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு!
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 05:28.38 AM GMT ]
அரசமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை சட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றில் அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய கடும் போக்குடைய சிங்கள தேசிய இனவாத அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன. 
பல சிங்கள பேரினவாத அமைப்புகள் கூட்டாக இணைந்து உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ள வழக்கில்,
1987- 88 காலப் பகுதியில் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கமைய மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது.
இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்பட்டிருந்த வேளையில், அதை ஒன்பது பேரடங்கிய நீதியரசர் குழாமொன்று ஆராய்ந்தது.
குறித்த வழக்கு தொடர்பிலான தீர்ப்பு தனித்தனியாகவே வழங்கப்பட்டது. ஐவர் அதற்கு சார்பாகவும் நால்வர் எதிராகவும் தீர்ப்பை வழங்கிருந்தனர்.
எனினும், இது விடயத்தில் உயர்நீதிமன்றின் ஒட்டுமொத்த வியாக்கியானம் என்னவென்பது இன்னும் தெரியாமல் உள்ளது.
அதேவேளை, ஜே. ஆர். ஜெயவர்த்தன அழுத்தங்களைப் பிரயோகித்து அன்று தனக்கிருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பயன்படுத்தியே இதை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியிருந்தார்.
இது விடயத்தில் இறைமைக்கு உரித்தான மக்களின் அபிப்பிராயம் கேட்டறியப்படவில்லை.
எனவே, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாகாண சபை முறைமையில் மாற்றத்தை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்க வேண்டும்'' என்று கோரப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
13வது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று அண்மைக்காலமாக கடும் போக்குடைய சிங்கள பேரினவாதக் கட்சிகள் கூறிவருகின்றன.
இதன் ஓர் அங்கமாகவே மாகாண சபை முறைக்கு எதிராக வழக்குத் தொடர அவை முடிவெடுத்துள்ளன.


இலங்கை இராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கு எதிர்ப்பு! போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த பொலிஸ் குவிப்பு
[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 05:39.57 AM GMT ]
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் இராணுவ முகாமில் இலங்கை இராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து இராணுவ கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று மாலை அங்கு சென்றனர்.
அவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென்று குன்னூர் ரயில் நிலையத்தில் புறப்பட்ட  ரயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து மற்றவர்கள் குன்னூர் மெயின்ரோட்டில் இருந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிஸார் கைது செய்தனர். மொத்தம் 220 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் இராணுவ முகாமுக்குள் நுழைவதை தடுக்க இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு முதலமைச்சர் ஜெயலிலதாவும் கண்டனம் தெரிவித்தார். அவர்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இன்றும் போராட்டக்காரர்கள் இராணுவ முகாமுக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
எனவே போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவதற்காக குன்னூர் சோதனைச் சாவடியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் வெலிங்டன் இராணுவ கல்லூரிக்கு செல்லும் சாலைகளிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குன்னூர் வெலிங்டன் இராணுவ கல்லூரி பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten