தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை: மனோ கணேசன்!

தமிழக மீனவர்கள் எல்லை மீறக்கூடாது: எமிலியாம்பிள்ளை
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 05:50.09 AM GMT ]
இலங்கை கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் தலைவர் சு.எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
யாழ் கடற்றொழிலாளர் சங்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவரின் இழுவைப்படகுகளினால் இலங்கை மீனவர்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் ஆட்சி இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொடுக்கப்படும் என நம்பினோம் எனினும் அது பொய்யாகிவிட்டது.
இந்திய மீனவர்களின் எல்லை மீறும் நடவடிக்கைகளை தடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீன்பிடித்துறை அமைச்சர் துலிப் வெதாரச்சி, யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், கடற்றொழில் நீரியல்துறை பிரதிப் பணிப்பாளர் எஸ்.ரமேஸ்கண்ணன் ஆகியோரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
எனினும் குறித்த மகஜருக்கு இதுவரை பதில் கிடைக்காத நிலையில் இதற்கு விரைவில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 6ம் திகதி இந்திய, இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கிடையில் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதற்கான அழைப்பு இலங்கை மீனவர்களுக்கு கிடைக்கவில்லை என சு.எமிலியாம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr0G.html
 
 
சீனாவுக்கு போட்டியாக மாலைத்தீவில் துறைமுக நகரை அமைக்கும் அமெரிக்கா
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 06:05.18 AM GMT ]
ஹம்பாந்தோட்டையில் சீனாவின் நிதி உதவியின்  மூலம் அமைக்கப்படும் துறைமுக நகரத்திற்கு போட்டியாக, மாலைதீவில் பாரிய துறைமுக நகரம் ஒன்றை அமைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
தெற்காசிய நாடுகளின் இராணுவ மற்றும் பொருளாதார சக்திகளை சீனா மூலம் பெற்றுக்கொள்ளும் சவாலாகவே இவ்வாறான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
 
சவுதியில் மரணதண்டனை விதித்த இலங்கையருக்கு மன்னிப்பு வழங்கவும்: ஜனாதிபதி கோரல்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 06:13.45 AM GMT ]
சவுதியரேபியாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பவுள்ளார்.
யெமன் நாட்டு பிரஜையொருவரை தாக்கி அவர் மரணத்துக்கு காரணமாகவிருந்ததோடு கொள்ளையிலும் ஈடுப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணதண்டனையை சவூதியரேபிய நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாளை மறுதினம் சவூதியரேபியாவுக்கு புறப்பட்டு செல்லவுள்ளார்.
இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குறித்த கடிதத்தை சவூதி அரசரை நேரடியாக சந்தித்து வழங்கவுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


நுகேகொடை கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை: மனோ கணேசன்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 06:35.02 AM GMT ]
முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் முன்னின்று நுகேகொடை அங்காடிக்கு எதிரே நடத்திய கூட்டம், இனவாதத்தை தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்த நினைக்கும் ஒரு மிகப்பழைய முயற்சியாகும்.
இந்த கூட்டத்தை கண்டு தமிழ் பேசும் மக்கள் பதட்டமடைய தேவையில்லை. இந்த நாட்டை மீண்டும் வரலாற்றை நோக்கி திருப்பி அழைத்து போகும் இந்த முயற்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பையும், சுதந்திர கட்சியையும் பிளவு படுத்துவதிலேயே போய் முடியும்.
தங்களை தாங்களே பிளவுபடுத்திக்கொண்டு பலவீனப்படும் வேலையை இவர்களே செய்துகொள்கிறார்கள். இது இந்த நாட்டில் வாழும் ஜனநாயக சக்திகளுக்கு சாதகமானது. எனவே முடிந்து போன காட்டாட்சி மீண்டும் தலையெடுத்து விடுமோ என்று நுகேகொடை கூட்டம் குறித்து தமிழ், முஸ்லிம் மக்கள் பதட்டமடைய தேவையில்லை.
இது 1950ம் ஆண்டுகால கட்டம் இல்லை. இன்று காலமும், உலகமும் மாறிவிட்டன இனவாதம் பேசும் இவர்களை இவர்களே அழித்துக்கொள்வார்கள். எமக்கு முன்னே இன்று இரண்டு கடமைகள் உள்ளன. முதலாவது, இந்த இனவாதிகளை தூண்டிவிடும் கருத்துகளை கூறுவதை தவிர்ப்பது ஆகும். அடுத்தது, எமது சொந்த அரசியல் பலத்தை ஜனநாயகரீதியாக பலப்படுத்திகொள்வது ஆகும்.
இவற்றை மனதில் கொண்டு நாம் காரியமாற்றுவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஜனநாயக இளைஞர் இணையை கலந்துரையாடலில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் இடம்பெற்று உழைத்த எனக்கு இன்றைய நிலவரம் பற்றி மக்களுக்கு எடுத்து கூறும் கடமை இருக்கிறதாக நம்புகிறேன்.
நுகேகொடையில் மஹிந்தவாதிகள் நடத்திய கூட்டம் நடைபெற்ற இடம் என் இல்லத்துக்கு மிக சமீபமானதாகும். உண்மையில் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரும், நடைபெற்ற வேளையிலும் அந்த பகுதியை நெருங்க அனுமதிக்கப்பட்ட தூரத்தில், அடையாளம் தெரியாத முறையில் நான் வாகனத்தில் உலா வந்து, பிரதான உரைகளை நேரடியாக கேட்டேன்.
அங்கே வந்த கூட்டம் மிகப்பெரிய கூட்டம் அல்ல. ஊடக படங்களை கண்டு மிரண்டு விட வேண்டாம். நிழல் படங்களில் ஒரு ஆயிரம் பேர் பத்து ஆயிரமாகதான் தெரிவார்கள். இது இயல்பானது. பெரும்பாலான மகிந்தவாதிகள் அங்கு வந்தனர். அத்துடன் கணிசமானோர், ஒரு பரபரப்பு ஆவலுடன், என்ன நடக்கின்றது என்பதை காணவும் வந்தனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் வேடிக்கை பார்க்க கணிசமானோர் வருவது ஆச்சரியமானது அல்ல.
எது எப்படி இருந்தாலும் இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றின் உள்விவகாரம். இந்த கூட்டமைப்பில் அல்லது இந்த கட்சியில் ஒரு பிளவு ஏற்பட போவதை இது காட்டுகிறது. அது இந்த நாட்டின் முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு சாதகமானது. கடந்த ஆட்சியின் போது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கிய பலர் இன்று இந்த இனவாத கூட்டில் இருப்பதை கண்டு நான் ஆச்சரியப்படவில்லை.
ஆனால், கடந்த காலங்களில் காலத்துக்கு காலம் எமக்காக குரல் எழுப்பிய வாசுதேவ நாணயக்கார அங்கே இருப்பதை கண்டு மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். அவருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கரங்கோர்க்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனும் கரங்கோர்க்க முடியும்.
அதையும் அவர் செய்யவில்லை. இன்று வாசுதேவ நாணயக்கார ஆடை அணிந்துக்கொண்டுதான் அரசியல் செய்கிறாரா என கேட்க விரும்புகிறேன். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் தனது கட்சியில் பலமடைந்தால், அது பிரதான தளத்தில் இருக்கின்ற இருவருக்கு அரசியல் ரீதியாக மிக பாதகமானது ஆகும். அவர்கள், இன்றைய எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் ஆகும்.
இது இவர்களுக்கு மிக கண்டிப்பாக தெரியும். எனவே இவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அரசியரீதியாக எதிர்கொள்வார்கள். எனவே மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்தி தமது இனவாத அரசியலை முன்னெடுக்க எண்ணும் நபர்களை இந்த இருவரிடமும் ஒப்படைப்போம்.
வெறும் வாயை மெல்லும் இனவாத வாய்க்கு அவலை அள்ளித்தந்து விடாமல் நாம் நமது வேலைகளை பார்ப்போம். எமது கட்சிகளையும், எமது கட்சிகளின் கூட்டமைப்பு செயற்பாடுகளையும் நாம் திட்டமிட்டு ஜனநாயகரீதியாக பலப்படுத்துவோம். யார் வந்தாலும், யார் போனாலும் எமக்கு நாமே துணை என்பதை உணருவோம்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr0J.html

Geen opmerkingen:

Een reactie posten