தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

மகிந்தரின் மகன் என்பதாலா யோஷித்தவிற்கு சலுகைகள் வழங்கப்பட்டன: நலிந்த கேள்வி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஸ வௌிநாடு சென்றுள்ளார். கொழும்பு நீதிமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் ஊடகவியலாளர்கள் இது குறித்து வினவினர்.
கேள்வி: உங்களது சகோதரர் வெளிநாடு சென்றுள்ளதாக ஒரு பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பதில்: இல்லை. விடுமுறைக்கு அனுமதிபெற்று பாதுகாப்பு அமைச்சின் தனிப்பட்ட காரணத்திற்காக வெளிநாடு சென்றுள்ளார். தப்பிச்செல்லவில்லை. மீண்டும் இலங்கைக்கு வருவார்.
கேள்வி: உங்களுக்கு துன்புறுத்தல் அல்லது பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா?
பதில்: இல்லை, அரசியல் மட்டத்தில் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. காலத்திற்கேற்ப முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நாம் எதிர்நோக்குகின்றோம்.
இதேவேளை, விசாரணையொன்று இடம்பெறும் வேளையில் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஸவிற்கு விடுமுறை அனுமதித்தமை பாரிய குற்றம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. 13 விடயங்களை அடிப்படையாக வைத்து யோஷித்த ராஜபக்ஸவிற்கு எதிராக தான் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளரிடம் ஒப்படைத்துள்ள இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய கடற்படையின் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும் விசாரணைகளுக்காக இதுவரை யோஷித்த ராஜபக்ஸ அழைக்கப்படவில்லையென நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
கடற்படை அதிகாரியொருவருக்கு வழங்கப்படாத சலுகைகள் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டமை, அவர் முன்னாள் ஜனாதிபதியின் மகன் என்பதனாலா, என நலிந்த ஜயதிஸ்ஸ பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten