தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 februari 2015

உள்ளூர் விசாரணையை ஏற்றுக் கொள்வது தமிழினத்திற்கு செய்யும் துரோகம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சுவர் இடிந்து விழுந்து பெண் குழந்தை பலி: யாழில் பரிதாபம்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 12:51.49 PM GMT ]
யாழில் விடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இன்று மதியம் சுண்ணாகம் கந்தரோடையில் உள்ள நலன்புரி முகாமில் உள்ள வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததினாலேயே இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு வயதுடைய  ரமேஸ் பிரியங்கா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது சுவர் இடிந்து விழுந்துள்ளதினாலேயே குழந்தை இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகிந்த பிரதமர் வேட்பாளர்: தீர்மானம் நிறைவேற்றிய பியமக தொகுதி சுதந்திரக் கட்சியின் மத்திய அதிகார சபை
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 11:35.00 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என சில தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என அந்த கட்சியின் பியமக தொகுதி மத்திய அதிகார சபை இன்று ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த இந்த கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்தனர்.

மேல் மாகாண முதலமைச்சரின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல்!
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 11:36.25 AM GMT ]
வத்தளை மாபாகே பிரதேசத்தில் ஒருவரை தாக்கி இடையூறுகளை ஏற்படுத்தி சம்பவம் தொடர்பாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வத்தளை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகரான சிந்தக பெரேராவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை தற்காலிக பணிநீக்கம் செய்யுமாறு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளருக்கு பொலிஸ் மா அதிபர் பரிந்துரைத்துள்ளதாக பொலிஸ ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெல்லாவெளியில் பொலிஸ் நிலையத்தினை அகற்றி பொதுமக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 12:05.12 PM GMT ]
மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர், பாலமுனை கிராமத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தினை அகற்றி, அக்காணிகளை உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் அரசாங்க அதிபருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயகலகப் பிரிவில் உள்ள பாலமுனை கிராமத்தில் 1990ம் ஆண்டு எற்பட்ட யுத்தம் காரணமாக பாலமுனை கிராமத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்து, பலாத்காரமாக அண்ணளவாக 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அவர்களின் அனுமதியின்றி எழுப்பப்பட்டு, அந்த இடத்தில் இராணுவம் நிரந்தரமாக இராணுவமுகாம் அமைத்துக் கொண்டனர்.
இவ்விடத்தில் இலங்கை இராணுவமும்,விசேட அதிரடிப் படையினரும் காவல்துறைபிரிவும் இருந்ததென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கிராமத்தில் இருந்த 30 வீடுகளுக்கு மேல் பாதுகாப்பு அரண் அமைப்பதற்கா அகற்றப்பட்டு, முகாமாக மாற்றப்பட்டு பாதுகாப் புமண்மேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விடத்திலுள்ள சில வீடுகளை பாதுகாப்புபடையினர் பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
பாதுகாப்பு படையினரிடம் உரிய இடங்களைக் கேட்டுமீள ஒப்படைக்குமாறு கோரியபோது 2014ம் ஆண்டு வெல்லாவெளியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டபின் இவ்வீடுகள் தங்களிடம் ஒப்படைக்கப்படும் எனபலராலும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் வெல்லாவெளியில் புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு பாலமுனையில் இருந்து வெல்லாவெளிக்கு பொலிசார் இடமாறிக் கொண்டிருப்பதால் இவர்களுக்கான சொந்த இடங்களை மீளக்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
1) சேதமாக்கப்பட்ட உடமைகளுக்கு நஷ்டஈடு வழங்குதல்.
2) நிரந்தர வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுத்தல்.
3) அப்பகுதியில் வாவியோரம் இருந்த வெள்ளதடுப்புச் சுவரை (மண் அணைக்கட்டு) கட்டித்தருதல்.
4) குடிநீர், கிணறு சேதமாக்கப்பட்டுள்ளதால் வீடுகள் அமைக்கப்படும் போது குடிநீர் கிணறுகள் அமைத்துக் கொடுத்தல்.
5) சுற்றுவேலி, வீதி, மின்சாரவசதி, போன்றவைகள் அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
6) பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள மண் மேடுகளை அகற்றுதல்.
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக பாலமுனை கிராமத்தில் அம்மக்களைச் சந்தித்து இப்பிரச்சினை விரைவாக தீர்த்து வைக்கப்பட வேண்டுமென இம் மக்கள் என்னிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
இம்மக்கள் பலதரப்பட்ட துன்பதுயரங்களோடு வாழ்ந்து வருவதாலும்,வசிப்பதற்கு இடமின்றி இருப்பதால் மிகவிரைவாக இவர்களுக்கான மீள்குடியேற்ற வேலைகளை துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசஅதிபரிடம் முன்வைத்தபோது பிரதேச செயலாளர் ஊடாக அறிக்கை சமர்பிக்கு மாறு பணித்திருந்தார்.
எனவே மிக விரைவாக இதை தூரிதப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் விசாரணையை ஏற்றுக் கொள்வது தமிழினத்திற்கு செய்யும் துரோகம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 01:15.32 PM GMT ]
ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ள காலப்பகுதியில், சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்கு வந்து வடக்கு, கிழக்கில் சாட்சியங்களாக இருக்கின்ற தமிழ் மக்களிடம் நேரடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி கோரியுள்ளது.
உள்ளூர் விசாரணை அறிக்கையை சிலர் ஏற்றுக் கொள்வதென்பது தமிழினத்திற்கு செய்கின்ற மாபெரும் துரோகம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதற்கு ஆதரவாகச் செயற்படுபவர்களை தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ். பிரதான வீதியின் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் மக்கள் முன்ணனியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற ஊடகவியியலாளர்கள் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபையில் தமிழர் தாயகத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழினத்தின் கருத்தாக இது இருக்கின்றது. ஆனால் இங்கு இராணுவம் குற்றம் இழைக்கவில்லை என்றும் இனப்படுகொலை என்ற ஏதும் நடக்கவே இல்லை என அரசாங்கம் மறுத்து வந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் வெளியிடப்படவிருந்த இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையை பிற்போட வேண்டுமென ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் கோரியதன் அடிப்படையில், மேற்குலக நாடுகளின் விருப்பத்திற்கமைய ஆட்சி மாற்றமும் ஏற்பட்டதையடுத்து மேற்படி விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு நடைபெற்றதும் இனப்படுகொலை தான் என்பதனை திடமாகக் கூறியுள்ள நிலையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசும் அதனை மறுதலித்து இங்கு ஒன்றுமே நடைபெறவில்லை எனக் கூறி நியாயப்படுத்துவதற்குவதற்கு முயற்சித்து வருகிறது.
இவ் அறிக்கையினை பிற்போடுவதற்கு உதவியாக இருந்த சர்வதேசம் இதற்கும் உதவ வேண்டும்.  ஆயினும் இந்த அறிக்கை பிற்போடப்பட்டாலும் அக்காலப்பகுதியில் மூன்று பிரதான விடயங்களைக் குறிப்பிடுகின்றோம்.
இதில் முதலாவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று தொடர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக ரோம் சாசனப்படி சர்வதேச நீதிமன்றத்தினூடாக இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது இன அழிப்பென்பது சர்வதேச சட்ட ரீதியில் மன்னிப்பு வழங்க முடியாத குற்றமாகும். தூயகத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதனை வடக்கு மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இறுதியாக பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் ஐ.நா விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்கி விடக் கூடாது. ராஜபக்ச அரசின் காலத்திலும் எவ்வாறு நாம் சார்ந்த கட்சி உள்ளக விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அதே போல் தற்போதுள்ள அரசின் காலத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
தமிழ் மக்களைப் பொறுத்;த வரையில் அரசியலில் உள்ள முக்கியத்துவத்தை விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இங்கு ஓர் ஆட்சி மாற்றத்தையே விரும்பினார்களே தவிர தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையில்லை.
யுத்த வெற்றியில் தமக்கே அதிக பங்கு உண்டு எனக் கூறி வருகின்ற தற்போதைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையிலான புதிய அரசின் உள்ளக விசாரணையை எவ்வாறு நீதியானதென ஏற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு உடந்தையாக இருக்கும் தமிழ் அரசியல் தலைமைகளை இனத் துரோகிகளாகக் அடையாளப்படுத்துவதற்கும் தயங்கமாட்டோம்.
எனவே மக்கள் போராட்டத்தின் மூலமாகவே இவற்றையெல்லாம் வெற்றி கொண்டு தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும் அநீதிகளுக்கும் நிலைத்து நிற்கக் கூடியதாக நீதி நியாயம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு தயாரில்லாத மேற்குலக நாடுகள் தமது தேவைகளுக்கு ஏற்பவே செயற்படுவதனை இந்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளதன் ஊடாகவே விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே தமிழினத்திற்கு நிலைத்து நிற்கக் கூடிய நீதியான தீர்ப்புக் கிடைத்தால் மட்டுமே சரியான நேரிய பாதையில் செல்ல முடியும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno6E.html

Geen opmerkingen:

Een reactie posten