தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 februari 2015

ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி என்ற நிலை தொடரக்கூடாது!

சிறு எதிர்ப்புமின்றி இந்தியா செல்லும் இலங்கைத் தலைவர் என்ற பெருமையை பெறுகிறார் ஜனாதிபதி மைத்திரிபால
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 11:39.40 PM GMT ]
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களது அரசியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழக ஊடகங்களிலும் பாரியதொரு மாற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது.
இதுவரை காலமும் இலங்கைத் தமிழருக்காக எனக் குரல் கொடுத்து தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்த தமிழக அரசியல் கள நிலவரத்தில் தற்போது அமைதியானதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
முன்னரைப் போன்று இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள், அமைச்சர்கள், விசேட பிரதிநிதிகள், அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் எனப் பல தரப்பினரும் தமிழகத்திற்கு அல்லது அந்நாட்டின் ஏதேனும் ஒரு பகுதிக்கு வருகை தரும் போது ஆயிரம் பேரை ஒன்று திரட்டி விமான நிலையத்திலும், அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் கறுப்புக் கொடிகளைக் காட்டி ஆர்ப்பாட்டம் செய்வதை தமிழக அரசியல் தலைவர்கள் தற்போது முற்றாக நிறுத்தியுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் இடம்பெறும் சிறு சிறு விடயங்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுவதையும், பத்திரிகைகளுக்கு அறிக்கை மற்றும் கவிதை எழுதுவதையும் அத்தலைவர்கள் நிறுத்தியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை தமிழக மக்களும், அரசியல் தலைவர்களும், அங்குள்ள ஊடகவியலாளர்களும் நம்பிக்கையுடன் வரவேற்றுள்ளதை அவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடியதன் மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
குறிப்பாக இதுவரை காலமும் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து வந்த தமிழகத் தலைவர்களான கலைஞர் கருணாநிதி, வை. கோபாலசுவாமி, தொல் திருமாவளவன், பழ. நெடுமாறன், திரைப்பட நடிகர் சீமான் ஆகியோர் இப்போது அமைதியாக இருந்து வருகின்றனர்.
இவர்களில் சிலரைச் சந்தித்துரையாடிய போது புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துத் தாம் அமைதியைக் கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்தனர்.
அதேபோன்று தமிழகத்திலுள்ள ஊடகங்களும் முன்னரைப் போலில்லாது இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக நம்பிக்கை தரும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
2006 ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியா செல்லும் இலங்கை அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் அமைச்சர்கள், விசேட பிரதிநிதிகள், அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள் எனப் பல தரப்பினரும் எதிர்ப்புகளின் மத்தியிலேயே தமது இந்திய விஜயத்தைத் தொடர வேண்டிய நிலை காணப்பட்டது.
இந்நிலை 2015 ம் ஆண்டு ஜனவரி பத்தாம் திகதிக்குப் பின்னர் இல்லாமற் போயுள்ளதை அவதானிக்க முடிந்தது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் கடந்த வாரம் சென்னை வந்தபோது அவரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அன்புடன் வரவேற்றுள்ளனர்.
அவர் எவ்விதமான பாதுகாப்புமின்றி மக்களுடன் மக்களாக விமான நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்றார். இதேபோன்றதொரு நிலைமையை கடந்த ஒரு மாத காலமாகக் காணமுடிகிறது.
சென்னையிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கடந்த நான்காம் திகதி இடம்பெற்ற எமது நாட்டின் சுதந்திர தின விழாவில் பல இந்தியப் பிரஜைகளும் கலந்து கொண்டிருந்தமை அங்கு மாற்றம் ஒன்று உருவாகியுள்ளமையை உணர்த்தியது.
அத்துடன் முன்னைய காலங்களைப் போலன்றி இவ்வருடம் தூதரகத்தில் பாதுகாப்புக் குறித்த எவ்விதமான பயமுமின்றி சுதந்திர தின விழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் கலந்து கொண்டார்.
இதேவேளை எதிர்வரும் 16ம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் எவ்விதமான சிறு எதிர்ப்பும் இன்றி இந்தியாவிற்குச் செல்லும் இலங்கைத் தலைவர் எனும் பெருமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலோ அல்லது இந்திய நாட்டின் எந்தவொரு பகுதியிலுமோ எவ்விதமான சிறு எதிர்ப்பும் இடம்பெறாத நிலையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkw7.html

யாழ்ப்பாணத்திற்கும் மோடி செல்வார்
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 11:48.59 PM GMT ]
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவிருப்பதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், இந்தியாவுக்கான விஜயத்தின் பின்னரே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.
இந்திய முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி 1987 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றமை இதுவே முதல்தடவையாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkxy.html
காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு காலம் நீடிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 01:33.21 AM GMT ]
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 15 வரை இந்த காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதன் காலமுடிவு 2015 பெப்ரவரி 15 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஆணைக்குழு, தமது வழமையான விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று ஆணைக்குழுவின் செயலாளர் S.W.குணதாஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலத்தில் இருந்தே தமது பணிகளை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் ஆட்சியின் கீழ் பராமரிக்கப்பட்ட 2100 கோவைகளை காணவில்லை: நிதியமைச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 01:38.13 AM GMT ]
நிதியமைச்சின் சுமார் 2100 கோவைகள் காணாமல் போயுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த கோவைகளில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கேள்விகளுக்குரிய கணக்கு வழக்குகள் இருந்திருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையி;ல் நிதியமைச்சின் அதிகாரிகளே சம்பவத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைக்கும் சட்டம் நீடிப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 01:54.31 AM GMT ]
கொலை மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை குற்றச்சாட்டுகள் இன்றி 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைக்கும் சட்டத்தை புதிய அரசாங்கம் 2 வருடங்களுக்கு நீடித்துள்ளது
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, இந்த நீடிப்புக்கு அனுமதியை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே இந்த சட்டத்தை முன்னாள் அரசாங்கம் அறிமுகப்படுத்தியபோது அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
2013 பெப்ரவரி 6ஆம் திகதியன்று இந்தச் சட்டத்துக்கு சபாநாயகர் அனுமதியை வழங்கினார்.
இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்க முடியும் என்பதுடன், சட்டமா அதிபரால் மேல்நீதிமன்றங்களில் நேரடியாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யமுடியும்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdkx3.html

அமைச்சரவை அனுமதியின்றி கோடிக்கணக்கான தரகுப்பணத்தை வழங்கிய ஜனாதிபதி செயலகம்! விசாரணைகள் ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 02:07.52 AM GMT ]
அமெரிக்காவில் இலங்கையை பிரசித்தப்படுத்தும் திட்டத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமலேயே, இடையாளர்களாக செயற்பட்டவர்களுக்கு ஜனாதிபதி செயலகம் தரகு பணத்தை செலுத்தியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பி;க்கப்பட்டுள்ளன.
இலங்கையை அமெரிக்காவில் பிரசித்தப்படுத்துவதற்காக இடையாளராக இருந்த இமாட் சுப்ரி என்பவருக்கு மாத்திரம் இவ்வாறு 1.39 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுப்ரி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நெருங்கிய அதிகாரியாவார். இவரை பாகிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் சலிம் மந்தாவிவல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தநிலையில் சுப்ரிக்கு மொத்தமாக 4.5 மில்லியன் டொலர்கள் கொடுப்பனவாக செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவே சுப்ரியுடன் தொடர்புகளை பேணிவந்தார்.
இந்தநிலையில் அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமலேயே ஜனாதிபதி செயலகம் நேரடியாக மத்திய வங்கிக்கு விடுத்த பணிப்புரையின் பேரில் சுப்ரிக்கான தரகுப்பணம் வழங்கப்பட்டுள்ளது.
இதனைதவிர, அமரிக்காவின் டபில்யூ குழுவுக்கு 2 மில்லியன் டொலர்களும் நெல்சன் முல்லின்ஸ் ரிப்லி மற்றும் ஸ்கர்போரோ நிறுவனத்துக்கு 4.15 மில்லியன் டொலர்களையும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி செயலகம் நேரடியாக வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdkx4.html

மோசடியில் ஈடுபட்ட சஜின்வாஸ் மீதான விசாரணைகள் தாமதம் - ஆணைக்குழு மீது குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 02:39.43 AM GMT ]
சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணையை தாமதிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறுகிய காலத்துக்குள் அதிகளவான சம்பாதியத்தை பெற்ற முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் வசந்த சமரசிங்க இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
முறைப்பாட்டை செய்து இரண்டு வாரங்களாகியும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
துபாயில் உள்ள ரின்கோ சர்வதேச நிறுவனத்தில் சாதாரண எழுதுவினைஞராக தொழில் புரிந்த சஜின்வாஸ் குணவர்த்தன, கடன்களை மீளச்செலுத்தவில்லை. அத்துடன் தனியார்துறையில் விமானி பயிற்சிகளை பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்கள் பலருக்கு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எனினும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வாஸ் மறுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdkx5.html

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும்: ஜே.வி.பி.
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 03:15.01 AM GMT ]
புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை வெகு விரைவில் தீர்மானிக்க நேரிடும் என கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவுமே ஜே.வி.பி ஆதரவளிக்கும் என மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை ஏற்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் தற்போதைய அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்ப காலம் தாழ்த்தப் போவதில்லை என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdkx6.html

குற்றவாளியான ரஞ்சனி ஜயகொடி தொடர்ந்தும் பதவியில் உள்ளார்: ஊடகங்கள் குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 07:18.34 AM GMT ]
விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சனி ஜயகொடி குற்றவாளியென நிரூபணமாகியதன் பின்னரே தான் பதவி விலகுவதாக தெரிவித்தும் இராஜினாமா செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரஞ்சனிக்கு எதிராக விளையாட்டு மேம்பாட்டு துறை தலைமை கணக்காளரினால் புகாரொன்று முன்வைக்கப்பட்டது. குறித்த புகாரின் உண்மைத்தன்மைகளை விசாரித்த போதே அவர் குற்றவாளியென நிரூபணமாகியுள்ளது.
இதனை தொடர்ந்தே அவர் தனது பதவியை இராஜினாமா செய்து கொள்வதாக தெரிவித்தார். எனினும் அவர் இதுவரை இராஜினாமா செய்யவில்லை என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி என்ற நிலை தொடரக்கூடாது!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 07:19.15 AM GMT ]
புதிய ஆட்சி, மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு புதிய ஆட்சியாளர்களை சார்ந்ததாகும்.
மாறாக, ஏமாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அது முன்னைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்த செய்வதுடன் மக்கள் மனதில் மாற்றத்தையும் ஏற்படுத்த வழிவகுப்பதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக, தமிழ் பேசும் மக்கள் புதிய அரசின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் அநாவசிய நெருக்கடிகள் நீங்கி நல்லாட்சி பிறக்கும் என்ற ஒரே எதிர்ப்பார்ப்பே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.
வடக்கு, கிழக்கு மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் எதனையும் விசேடமாக எதிர்பார்க்கவில்லை. மறுக்கப்பட்ட தமிழர் உரிமைகள், அபகரிக்கப்பட்ட தமது காணிகள், கொள்ளையடிக்கப்பட்ட தமது சொத்துக்கள் என்பவை மீளக்கிடைத்தால் போதும் என்ற ஒரே எதிர்பார்ப்பிலேயே அவர்கள் காணப்படுகின்றனர்.
அது மாத்திரமன்றி, காலாகாலமாக எதுவித விசாரணையுமின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது உறவுகள் விடுதலை செய்யப்பட வேண்டும். மற்றும் காணாமல் போன தங்கள் உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்ற ஒரே ஏக்கமே அவர்களை ஆக்கிரமித்துள்ளது.
புதிய அரசு தமது 100 நாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு திட்டங்களை முன்னிலைப்படுத்திய நிலையில் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த எதிர்பார்ப்புடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தன்னாலான நல்லெண்ண சமிக்ஞைகளை அவ்வப்போது காட்டி வருவதுடன், அரசின் நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான குந்தகத்தையும் ஏற்படுத்தாத வகையில் செயற்பட்டும் வருகின்றது.
குறிப்பாக, கடந்த மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக இலங்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் தமிழரசுக் கட்சி பங்கேற்காதிருந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இது கட்சிக்குள்ளும் வெளியிலும் சில விமர்சனங்களை முன்வைத்திருந்த போதிலும், காலத்துக்குகந்த செயற்பாடு என கூறவும் தவறவில்லை. தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை மேற்கொண்டு எந்தப் பயனையும் காணமுடியாத நிலையில் இணக்க அரசியலை மேற்கொண்டேனும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதனிடையே, புதிய அரசு தனது நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் வகையில் வட மாகாண சபைக்கு சிவில் அதிகாரி ஒருவரை ஆளுநராக நியமித்திருந்ததுடன், சர்ச்சைக்குரிய பிரதம செயலாளரையும் இடம் மாற்றியிருந்தது.
இதனை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வரவேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பின்னணியில் வடமாகாண சபை எதிர்வரும் காலத்தில் நெருக்கடிகள் அற்ற வகையில் தனது செயற்பாட்டை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த நான்காம் திகதி ஆற்றிய சுதந்திரதின உரையும் பலராலும் பாராட்டப்பட்டதாகும். அவர் தனது ஆழ் மனதிலிருந்து கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார் எனப் பரவலாக விமர்சிக்கப்பட்டது.
ஜனாதிபதி தனதுரையில் 30 வருட கால யுத்தம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படும் போதிலும் வடக்கு, தெற்கு மக்களின் இதயங்களை இணைப்பதற்கான இயலுமை இல்லாமல் போய்விட்டது.
எனவே, வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் இணைத்து தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மனிதாபிமானமிக்கவர்களின் தேசமாக இலங்கையைக் கட்டியெழுப்பி முன்னோக்கி பயணிக்க வேண்டிய தருணம் இதுவென அவர் தெரிவித்திருந்தார்.
வழமைக்கு மாறாக பாரிய இராணுவ தளபாடங்கள், போர்முரசு கொட்டும் ஆலவட்டங்கள், பாரிய படை பட்டாளங்கள் இன்றி எளிமையான முறையில் கடந்த சுதந்திர தின விழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை பெரும்பான்மை சிங்கள மக்களுடன் சேர்ந்து தமிழ்ப் பேசும் மக்களும் கொண்டாடினார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.
உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அத்திபாரமாக இது அமைந்திருந்தது எனக் கூறலாம். பெரும்பான்மை கடும் போக்காளர்களுக்கும் அவர்கள் சார்ந்த அரசியல்வாதிகளுக்கும் இது கசப்பான விடயமாக இருந்த போதிலும், ஜனநாயகத்தை விரும்பும் பெரும்பான்மை மக்கள் இதனை ஆதரிக்கவே செய்தனர்.
அந்த வகையில், எந்தவொரு விடயமும் வெறுமனே வார்த்தைகளோடு அடங்கி விடாமல் அதனை செயலில் மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும். அதுவே நல்லாட்சிக்கான உறுதியான அத்திபாரமாக அமையும் என்றும் நம்பலாம்.
இதேவேளை, பல்வேறு சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து பரிந்துரை செயற்வதற்காகவும் நல்லிணக்கத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட ஜனாதிபதி செயலணி, தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கடந்த காலத்தில் யுத்தத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், கஷ்டங்கள் தொடர்பிலும் பல்வேறு பரிந்துரைகளை முன்வைக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், இவை காலதாமதமானாலோ அன்றேல் இழுத்தடிக்கப்படுமானாலோ மக்களின் நம்பிக்கை புஸ்வாணமாகிவிடும் என்பதே யதார்த்தமாகும். புதிய அரசின் ஒருசில நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ஒருவித கிலேசத்தை ஏற்படுத்தி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக ஓமந்தை சோதனைச் சாவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டிருந்த சோதனை நடவடிக்கைகளையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், நிம்மதிப் பெருமூச்சும் விட்டனர். எனினும் துரதிஷ்டவசமாக கடந்த புதன்கிழமை முதல் மீண்டும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்ற திடீர் உத்தரவே இதற்கு காரணமெனவும் கூறப்படுகின்றது. இது தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியை தோற்றுவித்துள்ளதுடன் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடுமோ என்ற அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்தவிதமான போக்குகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகி வரும் நல்லெண்ணத்தை சிதறடித்துவிடும் ஒன்றாக மாறிவிடும் என்பதையும் ஆட்சியாளர்கள் மறந்துபோகக் கூடாது.
இதுவரை காலம் மாறி மாறிப் பதவிக்கு வந்த அரசுகள் தமிழ் பேசும் மக்களை ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற நிலையில் நடத்தி வந்தன. அந்த நிலைமை இந்த ஆட்சியில் ஏற்படக்கூடாது என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் உருவாவது அவசியமாகும்.
அதற்கு அரசியலுக்கு அப்பால் மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்குத் தீர்வை முன்வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு புதிய ஆட்சியாளர்களைச் சார்ந்ததாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjp6.html

Geen opmerkingen:

Een reactie posten