கனடாவில் இடம்பெறவுள்ள ஒரு சட்டமாற்றம் பலரது எதிர்பார்ப்பையும் மீறி அதீத உரிமைகளைப் பாதுகாப்புத் தரப்பிற்கு கொடுப்பதாக ஒரு கண்டனத்தைப் பெற்றாலும், அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
கனடியப் பாராளுமன்றத்தில் ஆளும்கட்சியும் பிரதான கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியும் ஆதரவு தெரிவித்து விட்டன.
ஒரு உறுப்பினரைப் பாராளுமன்றத்தில் கொண்டுள்ள பசுமைக் கட்சி மாத்திரமே பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.இவ்வாறு கடந்த சனிக்கிழமை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.

அநாமதேயப் பெயர்களில் மின்னஞ்சல் மூலம், சமூக வலைத் தளங்களில் பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக்களை பரப்புபவர்கள் மாத்திரமல்ல, சட்டரீதியாக தாங்கள் நேர்மையாகச் செயற்படுகிறோம் என்று கருதும் பொதுமக்களது கருத்துக்களில்கூட உள்நுழையும் அதிகாரத்தை இந்தச் சட்ட மேலாக்கம் பாதுகாப்புத் துறைக்கு வழங்கியுள்ளது.
C51 என்ற இந்த சட்டவரைவு ஏற்கனவே 2001ம் ஆண்டில் இருந்து நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கான மேலதிக சேர்ப்பாகும்.
இந்தச் சட்டத்தின் கீழே கனடாவில் இரண்டு தமிழ் அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டு அந்தத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கிறது.
டிசம்பர் 2014ல் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகாரத் துணையமைச்சர், பல்கலாச்சார அமைச்சர் ஆகியோர் தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புக்கள் குறித்த காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
எனவே தமிழ் மக்களில் பெரும்பாலோனோர் இந்த சட்ட மேலாக்கம் தமிழர்களையும் பாதிக்கும் என்ற அச்சவுணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே இந்த விடயத்தில் சட்ட நுணுக்கங்களைக் கூற தமிழ்ச் சட்டத்தரணிகளும், தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களும் முன்வர வேண்டும்.
இந்தச் சட்ட இணைப்புப் பற்றிய கிரகித்தலை அல்லது அனுமாணத்தை அது இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள சாராம்சங்களின் அடிப்படையில் பகிர்வதாகத் தெரிவித்த சுரேஸ் தர்மா வேறு, பல விடயங்களை இந்தவார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.