தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 februari 2015

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையில் மாற்றமில்லை: பான் கீ மூன்

பொதுத் தேர்தலில் போட்டியிடும் ராஜித சேனாரத்னவின் புதல்வர்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 06:11.39 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக உள்ளதுடன் அவரது மகன் சத்துர சேனாரத்ன கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ராஜித சேனாரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அவர் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க தீர்மானித்துள்ளதுடன் புதல்வரை தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளார்.
சத்துர சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரின் தூய்மையான நாளை அமைப்பில் பதவி ஒன்றை வகித்து வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgu3.html

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவாரத்தினுள் மூன்றாவது நபர் டெங்கினால் மரணம்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 06:34.58 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவனொருவன் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
இவ்வாரத்தினுள் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்றாவது டெங்கு மரணம் இதுவாகும். கடந்த திங்கள் செவ்வாய்க்கிழமைகளில் காத்தான்குடியில் ஒரு சிறுமியும் 22 வயது இளைஞர் ஒருவரும் டெங்கு நோய்க்கு பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் பிறைந்துறைச்சேனை - பன்சலை குறுக்கு வீதியில் வசிக்கும் ஹயாத்து முஹம்மது றிஸ்பாத் ஆவார். குறித்த மாணவன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இராணுவத்தினருக்கு சந்திரிக்கா அன்பளிப்புச் செய்த சிங்கம் மரணம்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 06:39.58 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் கடந்த 1996ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் சிங்க படையணிக்கு அன்பளிப்புச் செய்த சிங்கம் உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கோகர் என்ற பெயரைக் கொண்ட சிங்கமே நேற்று முன் தினம் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்படையணியின் கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இந்த சிங்கம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிங்கத்தின் இறுதிக் கிரியை, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க படையணி முகாமில் நேற்று நடைபெற்றது.
1996ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி பிறந்த கோகர், சிங்க படையணிக்கு அதேயாண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த இந்த சிங்கம், இறக்கும் போது இரண்டரையடி உயரமும் 5 அடி நீளமும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgu7.html


மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையில் மாற்றமில்லை: பான் கீ மூன்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 06:34.27 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு கட்டாயமாக தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
யுத்த குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என அவர் கருதுவதாக பான் கீ மூனின் ஊடக பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற ஐ.நா சபையின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் உள்ளகப் பொறிமுறைமை ஒன்றின் மூலம் மீள் விசாரணைகளை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தர நிர்ணயங்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த முறையில் நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டியது இலங்கையின் முக்கிய கடமையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளில் நடைபெற்ற யுத்தத்தின் பின்னர் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் பொறுப்பு கூறல்களின் ஊடாக நிலையான சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் எனவும் இலங்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காண தான் பூரண ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் ஐ.நா அமைப்பின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்ள சமரவீர இன்று ஐ.நா பொது செயலாளரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgu5.html

Geen opmerkingen:

Een reactie posten