புரொண்ட்லைன் சஞ்சிகை தனது புதிய வெளியீட்டில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1987 ம் ஆண்டு வழங்கிய பேட்டி மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
புரொண்ட்லைன் சஞ்சிகையின் புதிய பதிப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேட்டி மீண்டும் வெளியிடப்பட்டிருந்ததால், அதனை சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்திருந்தார்.
இலங்கை சுங்க திணைக்களத்தினால், தடுத்து வைக்கப்பட்டிருந்த புரொண்ட்லைன் (Fரொன்ட்லினெ) சஞ்சிகை பிரதிகளை விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு சுங்கத் திணைக்களம் தடுத்து வைப்பதற்கு பிரபாகரன் அப்படி என்னதான் அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்….?
புரொண்ட்லைன் சஞ்சிகைக்கு புலிகளின் தலைவர் 1987 ம் ஆண்டு வழங்கிய பேட்டி
எனது இறுதி சொட்டு இரத்தம் இருக்கும் வரை என் தாய் நாட்டின் விடுதலைக்காக போராடுவேன் என்று என் மேசையில் எழுதியிருப்பேன்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்தவர்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர் பிரபாகரன் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தனது எண்ணக்குமுறல்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தினார்.
பிரபாகரன் டெல்லியில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளதுடன் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் யாழ்ப்பாணம் திரும்பினார்.
ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி பிரபாகரன் ஆற்றிய உரை பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது. விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்தும் ஒப்பந்தத்தினை பற்றி திருப்தியின்மையையும் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவையும் அன்பையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
இந்தியா மீது கொண்டுள்ள அன்பின் நிமித்தமே இந்திய அமைதி காக்கும் படையினரிடம் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை கையளித்தனர் எனவும் எக்காரணம் கொண்டு இந்திய அமைதி காக்கும் படையினர் மீது போர் தொடுக்கக் கூடாது என்ற கொள்கையின் பற்றுறுதி காரணமாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க முன்வந்தனர் எனவும் பிரபாகரன் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து ஒரு வாரத்தின் பின்னர் புரொண்ட்லைன் செய்தியாளர் டி.எஸ்.சுப்ரமணியன் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர் டி..கிருஷ்ணன் ஆகியோர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் இந்த பேட்டிக்காக சந்தித்தனர்.
அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நம்பிக்கையின் நிமித்தம் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை கையளிக்க இணங்கினர்.
1987ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய பின்னர், விடுதலைப் புலிகளின் தலைமை தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது முதலாவது நீண்ட பேட்டியை, ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் தன்னை சந்தித்த புரொண்ட்லைன் மற்றும் இந்து பிரதிநிதிகளுக்கு வழங்கினார். ஒரு மணிநேரத்திற்கு மேலாக அந்த பேட்டியை அவர் வழங்கினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் மிகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் காணப்பட்டார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் தமிழர்களை தொடர்ந்தும் சித்திரவதை செய்வதாகவும் அதனை நேரில் சென்று காணுமாறு பிரபாகரன் கூறியுள்ளார்.
கேள்வி. இலங்கை இராணுவத்தினர் மே 26ம் திகதி யாழ்ப்பாணத்தில் வடமராட்சி பிரதேசத்தில் தாக்குதல் நடத்திய போது நீங்கள் வல்வெட்டித்துறையில் சிக்கிக் கொண்டதாகவும் பின்னர் தப்பிக்க முடிந்ததாகவும் ஊடக கதை உள்ளது. இது உண்மையா?.
(சிரிக்கிறார்) நான் 25 ம் திகதி இரவு யாழ்ப்பாணத்திற்கு வந்து விட்டேன். அதற்கு அடுத்த நாளே அவர்கள் தாக்குதலை ஆரம்பித்தனர். நான் வல்வெட்டித்துறையில் இருப்பதாக நினைத்து இந்த தாக்குதலை அவர்கள் நடத்தினர்.
கேள்வி. இலங்கை இந்திய ஒப்பந்தம் குறி்த்து உங்களுடைய மதிப்பீடு என்ன?. அது குறித்த உங்களது அச்சங்கள் என்ன?. உங்கள் எதிர்பார்ப்புகள் தொடர்பான விடயத்தில் அதில் ஒரு குறைபாடு இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அந்த அதிருப்தி தரும் முக்கிய பகுதிகள் என்ன?.
வடக்கையும் கிழக்கையும் இணைக்க வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சொல்கிறார். அந்த இணைப்பு சாதாரண பெரும்பான்மை மூலம் முடிவு செய்யப்படும் என்றும் கூறுகிறார்கள். வடக்கையும் கிழக்கையும் இணைப்பது என்பது பிரச்சினையல்ல. அது எமது தாயகம். இந்த விடயத்தில் பேச்சுவார்த்தை என்ற கேள்விகே இடமில்லை.
மேலும் சில சிக்கல்கள் உள்ளன. இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் இடையிலான ஒரு ஒப்பந்தம். 1983 ம் ஆண்டு வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் சில முகாம்களே இருந்தன. ஆனால் தற்போது 200 முகாம்கள் உள்ளது என்பதும் கவலைக்குரியது.
இந்த இராணுவ முகாம்களை அகற்றாமல் சிங்கள குடியேற்றங்களை அகற்றவோ கலைக்கவோ முடியாது. உண்மையில் இந்த முகாம்கள் சிங்கள குடியேற்றங்களை நியாயப்படுத்தி விட்டது. இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து ஒப்பந்தத்தில் எதுமில்லை.
இது போன்ற குடியேற்றங்களை நிறுத்தவும் கொடுமைகளை தடுக்க அங்கு இந்திய இராணுவம் இருக்க வேண்டும். ஆனால் விசித்திரமான விடயம் என்னவெனில், ஆனையிறவுக்கு அப்பால் யாழ்ப்பாண குடாநாட்டில் இந்திய இராணுவ முகாம்கள் உள்ளன.
கொடிகாமம், அச்சுவேலி, பலாலி, வண்ணாங்கேணி, இயக்கச்சி சந்தி, தாழையடி கரையோரம், பண்டத்தரிப்பு மற்றும் காங்கேசன்துறை வெளிச்ச வீடு போன்ற இடங்களில் இந்திய இராணுவ முகாம்கள் உள்ளன. இந்த இடங்களில் இந்திய இராணுவ முகாம்கள் தேவையில்லை, காரணம் அங்கு சிங்களவர்கள் இல்லை. ஆனால், இந்திய இராணுவம் அங்கு முகாம்களை ஏற்படுத்தியுள்ளது.
நாங்கள் வடக்கு, கிழக்கில் இருக்கும் 200 இலங்கை இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகிறோம். ஆனால், இந்திய இராணுவம் மேலும் முகாம்களை ஸ்தாபித்து வருகிறது. ஆரம்ப கட்டத்திலேயே மக்கள் மத்தியில் சந்தேகங்களுக்கும் அதிருப்திக்கும் இது வழிவகுத்துள்ளது.
அகதிகள் திரும்பி வருவதற்கு பாதுகாப்பு இடைவெளிகள் இல்லை. பாதுகாப்பு மற்றும் காண்காணிப்பு வலயங்கள் இன்னும் நீக்கப்படவில்லை. அங்கு இந்திய இராணுவ முகாம்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது.
மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகங்களுக்கு வந்து மனுக்களை கொடுக்கின்றனர். நாங்களை அவற்றை இந்திய அமைதிக்காக்கும் படையினரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளோம்.
கேள்வி: இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் வரைவு உங்களுக்கு கொடுக்கப்படவில்லை என நீங்கள் கூறியுள்ளீர்கள்.
அவர்கள் பிரதியை விலக்கி கொண்டுள்ளனர். ஒப்பந்தம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடக்கும் என்று திரு. ஜே.ஆர். ஜயவர்தன கூறினார். ஆனால், ஒப்பந்தம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை.
( இந்த கட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாளரான யோகி குறுக்கிட்டு கருத்து வெளியிட்டார். சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் தொழிநுட்ப சிக்கல்கள் உள்ளன. இரண்டில் மூன்று பெரும்பான்மை பலத்தை பெறுவதில் இலங்கை அரசாங்கத்திற்கு சாத்தியப்பாடுகள் இல்லை. எனவே அரசியலமைப்பில் மாற்றங்கள் இடம்பெறலாம் என யோகி கூறினார்)
வெட்டுப்புள்ளிகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். 1983ம் ஆண்டு தமது இடங்களில் இருந்து சென்ற மக்கள் திரும்ப முடியும் என அரசாங்க அதிபர்கள் கூறுகின்றனர். ஆனால், மக்கள் 1983ம் ஆண்டு முன்னர் தமது இடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன.
ஒன்று ஐக்கியப்பட்ட வடக்கு, கிழக்கு என்ற எமது தாயகம் தொடர்பானது. இரண்டாவது எமது நிலம். இவை இரண்டும் சிக்கலான பிரச்சினைகள். பெரிய பிரச்சினைகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் இந்த இரண்டு பிரச்சினைகளை தீர்க்கவில்லை. இது அடிப்படைப் பிரச்சினை.
இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி நடத்தை தொடர்பான உங்கள் அணுகுமுறை அதாவது உங்களது நிலைப்பாடு என்ன?
அவர்கள் தமது சொந்த நலன்களின் அடிப்படையில் அவசர அவசரமாக உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை சீர்தூக்கி பார்க்கவில்லை.
எப்படி?
முல்லைத்தீவில் அகதிகள் உள்ளனர். மக்கள் பேரணிகளை நடத்துகின்றனர். ஆனால், நாங்கள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் எப்படி நாங்கள் அதனை செய்வது. மக்கள் தமது சொந்த இடங்களுக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்பதே பிரச்சினை. அதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை இராணுவத்தின் முகாம்கள் அகற்றப்பட வேண்டும். இது பிரச்சினைக்கு தீர்வை கொண்டு வராது. ஆனால், அது நடக்கவில்லை.
ஒப்பந்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஆயுதங்களை கீழே வைக்க இதனை நாங்கள் நிபந்தனையாக விதித்தோம். இராணுவ முகாம்கள் கட்டாயம் அகற்றப்பட வேண்டும் என நாங்கள் கூறினோம். ஆனால் அது நடக்கவில்லை.
இராணுவ முகாம்கள் மே 25 ம் திகதி இருந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் கூறும் போது அவர்கள் ஏன் கொடிகாமத்தில் இந்திய இராணுவ முகாமை நிறுவியுள்ளனர்?. மக்கள் திரும்பிச் செல்ல முடியவில்லை. அகதிகள் மீள திரும்ப முடியவில்லை.
கேள்வி: சுதுமலை அம்மன் கோயில் மைதானத்தில் ஆகஸ்ட் 4 ம் திகதி நடந்த பொதுக் கூட்டத்தில் ராஜீவ் காந்தியுடன் மனம் விட்டு பேசியதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். அவர் உங்களுக்கு சில உத்தரவாதங்களை கொடுத்ததாக நீங்கள் கூறியிருந்தீர்கள். அந்த உத்தரவாதங்கள் என்ன?.
வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று ராஜீவ் காந்தி உறுதிமொழியை வழங்கினார். ஆனால், கிழக்கில் மக்கள் திரும்ப முடியாதுள்ளது.
இந்திய இராணுவம் அங்கு சென்றுவிட்டது. ஆனால் தமிழ் மக்களுக்கு அங்கு செல்ல முடியாதுள்ளது. சிங்கள ஊர்காவல் படை மற்றும் சிங்கள மக்களின் அதிகரித்த எதிர்ப்பு அங்கு காணப்படுகிறது.
அங்குள்ள ஒவ்வொரு வீடும், பாடசாலைகளும், கூட்டுறவு கடைகளும் இராணுவ முகாம்கள். ஆனால், அது போன்ற இடங்களில் இந்திய இராணுவம் நிறுத்தப்படவில்லை.
இலங்கை இராணுவம் அங்கிருந்து வெளியேறாமல் பிரச்சினையை தீர்க்க முடியாது. மற்றைய விடயம் இலங்கை இராணுவத்தை அகற்றப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்துள்ளது. இந்திய இராணுவம் சென்ற பின்னர் சிங்கள இராணுவம் திரும்பி வரும். மேலும் எங்களிடம் ஆயுதங்களை இல்லை.
கேள்வி. 200 இராணுவ முகாம்களை அகற்றுவது பற்றி ராஜீவ் காந்தி என்ன சொன்னார்?.
நாங்கள் சரியாக மதிக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே நாங்கள் ஒப்பந்தத்தை எதிர்த்தோம். யாரும் அதனை கவனத்தில் எடுக்க தயாராக இருக்கவில்லை.
டெல்லியிலா?.
ஆம். டெல்லியில்.(உறுதியாக)
கேள்வி ஆயுதங்களை கீழே வைத்து முடிந்தவுடன் வடக்கு மற்றும் கிழக்கின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் நீங்களும் விடுதலைப் புலிகளும் எதிர்பார்க்கும் பங்கு என்ன?.
அரசியல் பங்கை பற்றி கூறுவதென்றால், நாங்கள் ஒழுங்கமைப்பு அளவில் மக்களை தொடர்பு கொண்டு அதனை வலுப்படுத்துவோம். கிழக்கிலும் நாங்கள் எங்கள் அமைப்பை வலுப்படுத்துவோம். நாங்கள் ஏற்கனவே திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுடன் பணியாற்றி வருகிறோம். இது கடினமான பணியல்ல.
கிழக்கில் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கின்றனரா?.
கிழக்கில் உள்ள எமது மக்கள் குறிப்பாக சிங்களவர்கள் உள்ள பகுதிகளில் எமது மக்கள் தீவிரமான செயற்பாடுகளில் உள்ளனர். மூதூரில் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய இராணுவமும் அரசாங்க அதிபரும் அகற்ற வேண்டும் என்றனர். அந்தளவுக்கு மக்கள் விடயங்களை அறிந்துள்ளனர்.
பல கட்சி அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்வீர்களா?.
யூகோஸ்லாவியா அடிப்படையிலான ஒரு கட்சி அரசியல் இருக்க வேண்டும் என்று நீங்கள் முன்னர் கூறியிருந்தீர்கள். இது முக்கியமானது மற்றும் நீங்கள் எங்களது நிலைப்பாட்டை அறிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இன்னும் தமிழீழத்தை அடையவில்லை. தமிழீழத்தின் அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தேன்.
ஆனால் தற்போது தனிநாடு இல்லை. இது எம்மீது திணிக்கப்பட்ட ஒரு உடன்பாடு. இதில் அனைவரும் சமம், அனைவரும் ஒரே மாதிரி. நாம் எங்கள் அரசியல் நோக்கத்திற்காக போராட வேண்டும். நாம் எமது தமிழீழ அரசியல் நோக்கத்தை தொடர்ந்து எடுத்துச் செல்வோம்.
நாங்கள் எங்களது சொந்த அரசை நிறுவ வேண்டும் அப்போது அங்கு ஒரு கட்சி அல்லது அதற்கு பொருந்த கூடிய ஆட்சி முறை இருக்க முடியும். தற்போது என்ன நடந்துள்ளது.
இந்தியாவும் இலங்கையும் ஒரு ஒப்பந்தை செய்துள்ளன. இந்திய இராணுவம் இங்கு எங்கள் ஆயுதங்களை கேட்கிறது. நாங்கள் அதனை செய்ய போவதில்லை. நாங்கள் இந்திய இராணுவத்துடன் சண்டையிட வேண்டும். நாங்கள் இந்த ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும் எமது அரசியல் நோக்கத்தை கைவிடவில்லை.
கேள்வி: சமூக விரோத போராளி குழுக்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க முடியாது என ஆகஸ்ட் 5 ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நீங்கள் கூறியதாக முரண்பாடான அல்லது மாறுப்பட்ட தகவல்கள் உள்ளன. எது உண்மை?.
அனைவரையும் தேர்தலில் போட்டியிட அனுமதிப்போம். நாம் மக்கள் முன் எமது கருத்துக்களை முன்வைப்போம்.
கேள்வி – மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதிநிதிகளின் என்ன பங்கை நீங்கள் காண்கின்றீர்கள்.
அவர்கள் முன்னர் என்ன செய்தனர் என்பது தெரியும். தேர்தலில் போராடும் வேலை அவர்களுக்கு தெரியும். அவர்கள் தேர்தல் போராட்டத்திற்கு திரும்பி சென்று விட்டனர். அவர்களின் கைகளுக்குள் அதிகாரத்தை கொண்டு செல்லும் தேவை எமக்கில்லை. இதுவே எமது நோக்கமும் நிலைப்பாடும். மக்கள் தீர்மானிக்கட்டும். அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும். நாம் எமது காரணங்களுக்காக அவர்களுக்கு எதிராக நிற்போம். யார் பக்கம் நிற்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
கேள்வி: சுதுமலை பொதுக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் பலவகையானது என நீங்கள் கூறியிருந்தீர்கள். அவை என்ன?. அது வன்முறையற்ற மக்கள் சாரந்த போராட்டமா?. அல்லது நீங்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு செல்வீர்களா?.
நாங்கள் ஒரு வெகுஜன அடிப்படையிலான போராட்டத்தை நாட வேண்டும்.
கேள்வி: ஆனால் விடுதலைப் புலிகள் முற்றிலுமான ஒரு இராணுவ அமைப்பு அல்லவா?.
விடுதலைப் புலிகள் தற்போது பாரிய தளத்தை கொண்டுள்ள அமைப்பு. நீங்கள் எமது மே தின ஊர்வலத்தை பார்த்திருப்பீர்கள். அந்த ஊர்வலம் நடத்த போது இங்கு இராணுவ நிர்வாகம் இருந்தது. இராணுவ ஹெலிக்கொப்டர்கள் மேல் இருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டன. அதேநேரம் சிங்கள மக்கள் தெற்கில் மே தினத்தை கொண்டாட முடியாது. அப்படியான ஆபத்தான நிலைமை, அப்படியான சூழ்நிலையில் கொளுத்தும் வெயிலும் எம்மால் 2 லட்சம் மக்களை திரட்டி பேரணியை நடத்த முடிந்தது. இது எமது அமைப்பு பாரிய தளத்தை கொண்டுள்ள அமைப்பு என்பதை காட்டியுள்ளது. வெறுமனே போராளி அமைப்பாக இருந்தால், மக்கள் பெருமளவில் இ்நத மே தின பேரணியில் கலந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
கேள்வி: கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் தொடர்பான உங்கள அணுகுமுறை என்ன?.
முஸ்லிம்களை நாங்கள் தனியான பிரிவாக பார்க்கவில்லை. முஸ்லிம்களை தமிழர்களின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக நாங்கள் கருதுகிறோம். மொழியால் ஒன்றுபட்டுள்ள மக்கள் மதத்தால் வேறுபட்டுள்ளனர் என்பதே பிரச்சினை. ( இதன் போது குறுக்கிட்ட யோகி, இலங்கை அரசாங்கம் ஏனைய தமிழர்களிடம் இருந்து முஸ்லிம்களை பிரித்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.)
கேள்வி: இணைப்புக்கு எதிராக வாக்களிக்குமாறு கிழக்கு மக்களிடம் கோரிக்கை விடுத்து முஸ்லிம் மக்களை இணைப்புக்கு எதிராக வாக்களித்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?.
நாங்கள் அந்த நிலைமைக்கு திட்டமிடவில்லை. அது எதிர்காலத்தில் நடக்க உள்ளது ஒன்று. அந்த கட்டத்தில்தான் நாங்கள் அந்த பிரச்சினைக்கு பதிலளிக்க முடியும்.
கேள்வி: ஒரு போட்டி அரசியல் அமைப்பு தேர்தல் நடக்க போகிறது. அந்த அமைப்பு தொடர்பில் உங்கள் முன் உள்ள பிரச்சினைகள் என்ன?.
நாங்கள் ஏற்கனவே போட்டிகளை சந்தித்துள்ளோம். அந்த போட்டியில் நாங்கள் அந்நியர்கள் அல்ல. தமக்கு யார் வேண்டும் என்பதை மக்கள் இறுதியில் தீர்மானிக்கட்டும். குழப்பங்களில் இருந்து தம்மை விடுவித்து கொள்ள மக்கள் தமக்கான ஒரு சரியான தலைமைத்துவத்தை தெரிவு செய்து கொள்ளலாம்.
கேள்வி: 5 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ள உங்களது போராளிகளின் எதிர்காலம் என்ன?.
நாம் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு முறையான திட்டத்தை வகுக்க வேண்டும். நாங்கள் அவர்களை கைவிட மாட்டோம். அவர்களின் வாழ்வாதாரத்தை தொடர நாங்கள் வழிகளை கண்டுபிடிப்போம். நாங்கள் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவோம். யார் படிக்க விரும்புகிறார்களோ அவர்களை படிக்க அனுமதிப்போம். அவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை ஒழுங்கு செய்வோம். எம் எல்லோருக்கும் ஒழுக்கமான இருக்கும் ஒரு கூட்டு வழியிலான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
கேள்வி: ஆயுதங்களை கையளிப்பது மற்றும் உங்களது பேராளிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்புகள் குறித்து அவர்களின் எதிர்வினைகள் என்ன?. ஆயுதங்களை கையளிப்பதை அவர்கள் எதிர்க்கின்றனரா?.
போராளிகள் தனிப்பட்ட ரீதியில் என் மீது அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் என் வார்த்தையை மீறி செயற்பட மாட்டார்கள். ஆனால், இன்று எந்த பாதுகாப்பும் இல்லை. இலங்கை இராணுவம் மற்றும் ஏனைய ஆயுத அமைப்புகளிடம் இருந்து நாம் ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளோம்.
அப்படியானால், ஏதேனும் எதிர்ப்புகள் இருந்ததா?.
எதிர்கருத்துக்கள் இருக்கின்றன. நானே தயாராக இல்லை. பின்னர் போராளிகளின் மன நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். பாதுகாப்பு இல்லை. பல போராளிகள் இறந்து விட்டனர்.
கேள்வி: உங்கள் போராளிகள் அவர்களின் கழுத்தில் சயனைட் வில்லைகளை ஏன் அணிந்திருக்கின்றனர்?. ஆயுதம் இல்லாத போது அது தேவைதானா?
தற்போது அது தவிர்க்க முடியாதது, அது மிகவும் தேவையானது என நான் நினைக்கின்றேன். கிழக்கில், சிங்கள இராணுவம், கைக்கூலிகள் மற்றும் போட்டி குழுக்களிடம் இருந்து தம்மை பாதுகாக்க அதுவே ஒரே ஆயுதம். அது மட்டுமல்ல, அவர்கள் போரிட்டனர். தமது உயிர்களை தியாகம் செய்த தோழர்கள் நினைவாக அவற்றை அணிவது தொடரும்.
கேள்வி: உங்களது போராளிகள் கொல்லப்படும் போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்?. இலங்கை இராணுவத்துடன் போரிட்டு 1983ம் ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்த உங்களுக்கு விசுவாசமான போராளி சார்ள்ஸ் அன்டனியின் நினைவாக அவரது பெயரை உங்கள் மகனுக்கு சூட்டியுள்ளீர்கள்.
எமது போராளிகளின் மரணத்தின் உணர்வுகள் எமது மனங்களில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும். போராடி பலர் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். 20 ஆயிரம் மக்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். இந்த உயிர் தியாகங்கள் இந்தியாவின் மூலோபாய நலன்களால், தாழ்த்தப்பட்டுள்ளன. அத்தகைய தியாகிகளின் பிரதிநிதிகளான நாங்கள் ஒழுங்காக மதிக்கப்படவில்லை. எனவே இடைக்கால தீர்வை பார்க்கும் போது இந்திய அரசுக்கான ஆதரவை நிராகரித்து மக்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இந்தியா எங்களுக்கு அவகாசம் கொடுக்கவில்லை. எங்களுடன் ஆலோசிக்காமல் அவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். எனவே மக்களின் ஆதரவுடன் தமிழீழ இலக்கை நோக்கிய அரசியலுக்குள் செல்ல விரும்புகிறோம். இதுவே தகுந்த பதிலடியாக இருக்கும்.
கேள்வி: விடுதலைப் புலிகள் அமைப்பு தமது ஆயுதங்களை முழுமையாக ஒப்படைக்கவில்லை என அதன் பிரதிநிதி ஒருவரை மேற்கோள்காட்டி யாழ்ப்பாணத்தில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன
ஆம் நாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டோம், ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சாவதை விட போராடுவது மேலானது. ஆயுதங்கள் இன்றி பாதுகாப்பற்ற சூழ்நிலையில், பாரியளவிலான இறப்புகளில் இருந்து அது எம்மை பாதுகாக்கும்.
கேள்வி: உங்கள் வாழ்க்கையை வடிவமைப்பதில் எவை தாக்கங்களை ஏற்படுத்தின?
நல்லபெருமாள் கல்கி இதழில் வெளியிட்ட கல்லுக்குள் ஈரம் என்ற தொடர். அதனை நான் 5 முறை வாசித்திருக்கின்றேன். அந்த தொடர் இ்நதிய சுதந்திர போராட்டத்தை சுற்றி நகர்கிறது. திரு நல்லபெருமாள் அகிம்சை போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் சமப்படுத்தியுள்ளார்.
பொதுவாக எந்த விடுதலைப் போராட்டத்தையும் நான் படிப்பேன். ஜோன் ஒப் ஆர்க், நெப்போலியன் புத்தகங்களை படித்திருக்கின்றேன். எனக்கு எப்போதும் வரலாற்றில் ஆர்வம் இருந்தது. முகலாய ஆட்சிக்கு எதிராக முதல் கெரில்லா போராளி சிவாஜி. நான் சிறுவனாக இருந்த போது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் படங்களை வைத்திருப்பேன். படிக்கும் போது அவரது புகைப்படங்கள் என் மேசையில் இருக்கும்
எனது இறுதி சொட்டு இரத்தம் இருக்கும் வரை என் தாய் நாட்டின் விடுதலைக்காக போராடுவேன் என்று என் மேசையில் எழுதியிருப்பேன்.
நன்றி திரு பிரபாகரன் அவர்களே
http://www.tamilwin.com/show-RUmtyCRUSUnq5J.html
Geen opmerkingen:
Een reactie posten