தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

வடமாகாண சபையின் தீர்மானம் தேர்தலுக்கான முன்னாயத்தமல்ல: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

துன்பம் தரும் ஆசிரியர் இடமாற்றம்! பொருத்தமான பொறிமுறை அவசியம்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 10:25.54 AM GMT ]
பாலும் சோறும் உண்ணத்தந்து படிக்கச் சொல்லும் அம்மா...அழுதிடாமல் பள்ளிக்கூடம் அழைத்துச் செல்லும் அம்மா... பள்ளிக்கூடம் விட்ட நேரம் பாதி வழிக்கு வந்து...  வித்துவான் வேந்தனாரால் இயற்றப்பட்டு அன்றைய நாளில் நாங்கள் பாடியது இந்தப் பாடல்.
இன்று பாடலுமில்லை... பாற்சோறுமில்லை. ஆம் வன்னிக்கு ஆசிரிய இடமாற்றம் பெற்ற ஒரு அம்மாவால் பள்ளிக்கூடம் விட்ட நேரம் பாதிவழிக்கு வந்து எங்ஙனம் பிள்ளையைத் தூக்கமுடியும்?
வன்னிக்கான ஆசிரியர் இடமாற்றம் என்பது கல்வித்துறை சார்ந்த அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் இருந்து வன்னி மாவட்டங்களுக்கு ஆசிரியர் இடமாற்றங்களை வழங்கும் போது, 99 சதவீதமான ஆசிரியர்கள் தமது இடமாற்றத்தை ரத்துச் செய்யும்படி மேன்முறையீடு செய்கின்றனர்.
இவ்வாறு மேன்முறையீடு செய்கின்றவர்களின் காரணங்களைப் பார்க்கும் போது, உடல் சுகவீனம், சிறுபிள்ளைகளின் பராமரிப்பு, வயதுபோன பெற்றோர்களின் பராமரிப்பு என்றவாறாக இருக்க கூடவே, குழந்தை இல்லாக்குறைக்கு சிகிச்சை பெறுகிறோம்,  குழந்தைப்பேறு சுகப்பிரசவமாக இல்லாமல், சத்திர சிகிச்சை மூலமாகவே பிரசவம் நடந்தது. இதனால் தூரப்பயணம் கடினமானது என்ற காரணங்களும் இணைந்து கொள்கின்றன.
அக்ரஹாரா காப்புறுதி என்று அறிமுகமாகியதோ அன்றிலிருந்து வடக்கு மாகாணத்தில் அரசபணியாளர்களுக்கு சுகப்பிரசவம் என்பது இல்லாமல் போயிற்று என்ற உண்மையையும் இவ்விடத்தில் சொல்லித்தானாகவேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, வன்னி மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் எங்களுக்கு யாழ். மாவட்டத்திற்கு இடமாற்றம் தாருங்கள் என்று கேட்பதிலும் நிறைந்த நியாயம் இருக்கின்றது.
இந்த இரண்டு நியாயப்பாடுகளின் மத்தியில்; வடக்கு மாகாணத்தின் கல்வி அமைச்சர், கல்விச் செயலர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப் பாளர்கள், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் என சகல தரப்பினரும் மிகப்பெரும் நிர்வாகச் சிக்கல்களையும் மன உளைச்சலையும் எதிர்கொண்டுள்ளனர்.
அதாவது இடமாற்றம் தாருங்கள் என்கின்ற வன்னி மாவட்ட ஆசிரியர்கள் ஒரு புறம். இடமாற்றம் வேண்டாம் என்று கெஞ்சுகின்ற யாழ்.மாவட்ட ஆசிரியர்கள் மறுபுறம் என்ற இரு தரப்பிற்குமிடையில் தீர் மானம் எடுத்தல் என்பது மிகக்கடினமான விடயம்.
அதேசமயம் விருப்பமில்லாத இடமாற்றம், விருப்பமில்லாத இடத்தில் சேவை என்ற இரண்டும் கற்பித்தல் என்ற செயற்பாட்டை வினைத்திறனுடையதாக்காது.
எனவே, ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் பொருத்தமான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவது அவசியம்.
குழந்தை உள்ள ஆசிரியர் ஒருவரை வன்னிக்கு இடமாற்றம் செய்வது பொருத்தமற்றது என்பதை வடக்கின் கல்வி அமைச்சர், கல்விச் செயலாளர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொள்வர். அப்படியானால் இடமாற்றம் ஏன் வழங்கப்படுகின்றது? என்ற கேள்வி ஏற்படும்.
இங்குதான் மாற்றுவழி இல்லை என்ற பதில் வெளிப்படும். குறித்த பதில் நியாயமானதாயினும் ஆசிரியர் இடமாற்றம் எனும் போது எழுகின்ற சோகக் கதைகளும் கண்ணீர் விட்டு அழும் நிலைகளும் பரிதாபத்திற்குரியவை என்பதால், வடக்கு மாகாண அரசு ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இடமாற்ற முரண்பாட்டை சமன் செய்யும் வகையில் புதிய ஆசிரியர் நியமனம் பற்றிச் சிந்திப்பது பொருத்தமானது.
குறிப்பாக வன்னி மாவட்டத்தில் தகைமை உள்ளவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி, அவர்கள் தங்களது சொந்த இடங்களில் நீண்டகாலம் பணி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது பொருத்தமான பொறிமுறைகளில் ஒன்றாகும்.
எனவே ஆசிரிய நியமனம் தொடர்பில் வடக்கு அரசு அவசரமாகச் சிந்திப்பது கட்டாயம்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdht1.html


கழிவு எண்ணெய் கலந்த நீர் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது!
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 10:49.51 AM GMT ]
வலிகாமம் பிரதேசத்தில் கழிவு எண்ணெய் கலந்த கிணற்று நீர் இன்று பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் 10 கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டை அடுத்து, அப்பகுதி கிணறுகளின் தண்ணீர் மாதிரிகள் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மானிப்பாய், சுதுமலை, மாசியப்பிட்டி ஆகிய இடங்களிலுள்ள 10 கிணறுகளிலேயே கழிவு எண்ணெய் கலந்து தண்ணீர் மாசடைந்துள்ளது. இவற்றில் 4 கிணறுகளில் அதிகளவு பாதிப்புத் தென்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பிரதேச சபை, சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் குறித்த கிணறுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
பரிசோதனை முடிவு வரும்வரை குறித்த கிணறுகளின் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண சபையின் தீர்மானம் தேர்தலுக்கான முன்னாயத்தமல்ல: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 12:24.59 PM GMT ]
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என சுட்டிக்காட்டும் வகையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வரவேற்றுள்ளதுடன், முதலமைச்சரின் துணிச்சலை பாராட்டுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இன்றைய தினம் மாலை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலமைகளின் நிலைப்பாடு முதலமைச்சரின் தீர்மானத்திற்கு மாறாக இருக்கும் நிலையில், குறித்த தீர்மானத்தை துணிச்சலுடன் நிறைவேற்றியிருக்கும் முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபையினருக்கு எமது பாராட்டுக்களை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் குறித்த தீர்மானம் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னாயத்தம் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு நிலைப்பாடு மாறாக உள்ள கூட்டமைப்பின் தலைமைகளை நியாயப்படுத்தாமல் அவர்களை நிராகரித்து, முதலமைச்சர் அல்லது வேறு தலைமைகள் முதலமைச்சரின் நிலைப்பாட்டில், பயணிக்க தயாரானால் அவர்களுடைன் இணைந்து செயலாற்றுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.
மேலும் குறித்த தீர்மானம் வடமாகாண சபையில் முன்னர் கொண்டுவரப்பட்டபோது முதலமைச்சரே கூறியிருந்தார். இனப்படுகொலை என கூறுவதில் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. 
எனவே இனப்படுகொலைக்கு ஒப்பான என குறிப்பிடலாம் என கூறியிருந்தார். ஆனால் அந்த நிலைப்பாடுகள் அனைத்தும் மாற்றப்பட்டு இப்போது முதலமைச்சர் சுயமாக இந்த தீர்மானத்தினை கொண்டு வந்திருக்கின்றார்.
இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைமைகள் அரசாங்கத்தில் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அதனாலேயே நாம் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டோம் எனவும் கூறியிருக்கின்றார்கள்.
இந்த இரு நிலைப்பாடுகளுக்குமிடையில் எமக்கு சந்தேகங்கள் எழுகின்றன. எனவேதான் நாம் இந்த தீர்மானம் தேர்தலுக்கான முன்னாயத்தம் அல்ல என்பதை நிரூபித்து முதலமைச்சரின் தலைமையின் கீழ் அல்லது வேறு தலைமையின் கீழ், முதலமைச்சர் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டின் கீழ் பயணிக்க நாம் தயார் என தெரிவிக்கின்றோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdht5.html

Geen opmerkingen:

Een reactie posten