தமிழ் இளைஞர்களை கடத்தி கப்பம் பெற்றுக்கொண்டு கொலை செய்த கடற்படை அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல லட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று அவர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவங்களுடன் மூன்று உயர் கடற்படை அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட உள்ள அதிகாரிகளில் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கடத்தப்பட்ட சில இளைஞர்கள் கப்பம் பெற்றுக் கொண்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு காலப் பகுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு கொட்டாஞ்சேனை, புளுமென்டல் வீதி, கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை போன்ற பல பகுதிகளில் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்டவர்கள் திருகோணமலை மற்றும் கொழும்பு சைத்திய வீதி கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு கப்பம் பெற்றுக்கொண்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட உள்ள உயர் கடற்படை அதிகாரியின் காரியாலய அறையிலிருந்து கொல்லப்பட்ட ஐந்து இளைஞர்களின் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழ் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு கடத்தல்களுடன் தொடர்புடைய உயர் அதிகாரியொருவர் வெளிநாட்டு பயிற்சி ஒன்றில் பங்கேற்றுள்ளதாகவும், அவரை மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட 28 இளைஞர்களில் 11 பேர் கொல்லப்பட்டமை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏனைய கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளை பாதுகாத்துக் கொள்ள கடற்படையினரும், சட்டத்துறையைச் சார்ந்த அதிகாரிகளும் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் அடையாள அட்டைகள் மீட்பு
தமிழ் இளைஞர்கள் 28 பேரை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக கடற்படையின் மூன்று உயர் அதிகாரிகள் உட்பட 9 அதிகாரிகளை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடத்திச் செல்லப்பட்ட சில இளைஞர்களிடம் கப்பம் பெற்ற பின்னர் அவர்களை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்த இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கூறியுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட இந்த இளைஞர்கள், திருகோணமலை மற்றும் கொழும்பு சைத்திய வீதியில் அமைந்துள்ள கடற்படை முகாமங்களில் தடுத்து வைக்கப்பட்டு, கப்பம் பெற்ற பின்னர், கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட உள்ள கடற்படை உயர் அதிகாரியின் அலுவலகத்தை சோதனையிட்ட போது, மேசை லாட்ச்சியில் இருந்து 5 இளைஞர்களின் அடையாள அட்டைகளும் கடவுச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த அடையாள அட்டைகளும், கடவுச்சீட்டும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு சொந்தமானது என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்ட 28 இளைஞர்களில் 11 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விதம் பற்றிய சகல தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதுடன் ஏனைய கொலை தொடர்பில் கண்டறிய குற்றப் புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஆட்கடத்தல் சம்பவங்களுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார். வெள்ளை வான் கலாசாரத்தின் ஆசிரியர் கோத்தபா ராஜபக்ச எனவும் அவர் கூறியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRUSUnq2E.html
Geen opmerkingen:
Een reactie posten