கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையிலுள்ள கோட்டா முகாமில் வெளியுலகத் தொடர்புகள் அற்ற நிலையில் 700இற்கும் மேற்பட்டோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்ற இரகசியத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர், சாட்சிகளுக்கான உதவி மற்றும் பாதுகாப்புத் தொடர்பான சட்டமூல விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ள நிலையில் அவர்களின் பலர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. திருகோணமலையிலுள்ள 'கோட்டா' தடுப்பு முகாமில் வெளியுலகத் தொடர்புகள் அற்ற நிலையில 700இற்கும் மேற்பட்டோர் தடுத்துவைக்கப் பட்டிருக்கின்றனர் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளன. இந்தக் 'கோட்டா' தடுப்புமுகாம் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது. எனவே, இந்தக் 'கோட்டா' முகாம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ஜோன் அமரதுங்க உடனடி கவனம் எடுத்து அந்த முகாம் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும்.
தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 700இற்கும் மேற்பட்டோர் யார் என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்தவேண்டும். இதேபோல் திருகோணமலையிலுள்ள கடற்படைத்தளத்துக்கு வெளியுலகத் தொடர்புகள் இல்லாதவகையில் 35 குடும்பங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒருசில குடும்பங்கள் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் குடும்பங்கள் தொடர்பான விவரங்களையும் பகிரங்கப்படுத்தப்படவேண்டும். இந்தப் புதிய அரசு உருவாக தமிழ் மக்களும் பாரிய பங்களிப்பு செய்துள்ளனர் என்ற வகையிலும் இலங்கையில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் மக்களுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோமென நீங்கள் கூறுவது உண்மையானால் மேற்குறிப்பிட்டவற்றுக்கான விசாரணையை உடனடியாக ஆரம்பித்து தமிழ் மக்களுக்கு பதில் வழங்குமாறு கோருகின்றேன் என்றார்.
http://www.athirvu.com/newsdetail/2343.html
Geen opmerkingen:
Een reactie posten