தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 februari 2015

இந்தியாவில் இருந்து எங்களை போகச் சொல்லாதீர்கள்!: இலங்கை அகதிகள் கருத்து

பதவியை இராஜினாமா செய்தார் பைசர் முஸ்தபா
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 10:18.32 AM GMT ]
சற்று நேரத்திற்கு முன்னர் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இயங்கும் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சின் கீழ் இணைத்து வர்த்தமானியில் உள்ளடக்கியுள்ளமையே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே வேளை அமைச்சருக்கான வர்த்தமானியில் மத்தல விமானநிலையம் மாத்திரம் உள்ளடக்கியிருந்ததனால் மனவேதனைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் சட்டத்தரணியாக முழுநேரம் செயற்பட வேண்டும் என்பதற்காகவே அவர் அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதாக பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcew0.html
புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல்! 6 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 11:15.08 AM GMT ]
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்றிருந்த நிலையில் அந்தப் பகுதியில் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படாமையி னால் தேர்தலை உடனடியாக நடத்தமுடியாமல் போனது.
இந்நிலையில் குறித்த தேர்தல் எதிர்வரு ம் 28ம் திகதி நடைபெறவிருக்கின்ற,
மேற்படி இரு சபைகளுக்குமான தேர்தல் 2011ம் ஆண்டும் பின்னர் 2012ம் ஆண்டும் நடத்தப்படுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தேர்தலை நடத்த வேண்டாம் என மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைபெறவுள்ளது.
குறித்த தேர்தலில் புதுக்குடியிருப்பு சபையில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 72 பேர் போட்டியிடவுள்ளனர்.
இதில் தமிழரசு கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போன்ற கட்சிகளுடன் சேர்த்து 6 கட்சிகள் போட்டியிடவுள்ளன. இதில் 29 ஆயிரத்து 269பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கின்றனர்.
இதேபோன்று கரைத்துறைப்பற்று சபையில் 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 90 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த சபையிலும் 6 கட்சிகள் போட்டியிடவுள்ளதுடன், 23 ஆயிரத்து 489பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcew5.html

புதிய அரசியல் கூட்டமைப்பு தொடர்பில் இதுவரையில் முடிவு எட்டப்படவில்லை: மனோ கணேசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 11:31.09 AM GMT ]
தென்னிலங்கை தமிழ் கட்சிகள் மத்தியில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாவது தொடர்பில் தகவல்கள் சமூக ஊடகங்களிலும், இணைய தளங்கள் சிலவற்றிலும் வெளியானதும், மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
எனினும் இது தொடர்பில் இதுவரை எந்த வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் மாத்திரமே இதுவரையில் நடைபெற்றுள்ளன.
இந்த யோசனையையிட்டு சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் தலைவர்கள் பொது உடன்பாட்டுக்கு வர முடியுமானால் மாத்திரமே இந்த கூட்டமைப்பு உருவாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பு பிரைட்டன் உணவகத்தில் நடைபெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்தவர் ஒன்றுகூடலில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நாம் அமைக்க முயல்வது தென்னிலங்கை தமிழ் கட்சிகள் மத்தியிலான ஒரு அரசியல் கூட்டமைப்பு. மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாண இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களை இந்த கூட்டமைப்பு அரவணைக்கும்.
ஆனால், இது மலையகம் என்ற வரையறையை மாத்திரம் கொண்ட ஒரு கூட்டமைப்பு அல்ல. கொழும்பில் வாழும் வட-கிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களையும், களுத்துறை முதல் கொழும்பு, கம்பஹா, புத்தளம் உட்பட மேற்கு கரையோர மாவட்டங்களிலேயே பிறந்து வளர்ந்துவிட்ட அடையாளத்தை கொண்ட தமிழ் மக்களையும், நாம் கூட்டிணைப்போம்.
வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற பெரும்பான்மை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இருக்கின்றார்கள்.
வடக்கில் கிளிநொச்சி, வன்னி மாவட்டங்களில் குடியேறி வாழும் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட பெருந்தொகை மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
அதுபோல் தென்னிலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் நமது கூட்டமைப்புடன் இருப்பார்கள். ஏற்கனவே கொழும்பில் வாழும் பெரும்பான்மை தமிழ் மக்கள், நமது ஜனநாயக மக்கள் முன்னணியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் தென்னிலங்கையின் நுவரேலியா, கொழும்பு, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கம்பஹா, கேகாலை, மாத்தளை, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நிலவும் விசேட களநிலவரங்களின் அடிப்படையில் நமது கூட்டமைப்பு பெரும்பான்மை கட்சிகளுடனான தேர்தல்கால உறவுகளை தீர்மானிக்கும்.
இந்த அடிப்படையிலேயே கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளில் சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்களிப்பு செய்கின்றனர்.
இந்த முயற்சிகள் வெற்றி பெற்றால் மாத்திரமே இந்த கூட்டமைப்பு உருவாகும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcew6.html


இந்தியாவில் இருந்து எங்களை போகச் சொல்லாதீர்கள்!: இலங்கை அகதிகள் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 12:14.14 PM GMT ]
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களின் கருத்துக்களை த ஹிந்து வெளியிட்டுள்ளது.
மதுரை ஆனையூர்
தர்மதாஸ் (55):
இலங்கையின் மன்னார் அருகே உள்ள மாடியபட்டிதான் என் சொந்த ஊர். 1991-ல் தமிழகம் வந்தேன். மனைவி, 3 குழந்தைகளுடன் இங்கு வசிக்கிறேன். இலங்கையில் நிலங்கள் உள்ளன. வசிக்கவும் வேலைக்கும் இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துகொடுத்தால், நாடு திரும்பலாம்.
செல்வி (56):
மன்னார் மாவட்டம் கூலாங்குளம் சொந்த ஊர். 25 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். அங்கு இன்னும் முகாம்களில் உள்ள பல லட்சம் தமிழர்களை மீண்டும் சொந்த வசிப்பிடங்களில் அமர்த்த இலங்கை அரசு முதலில் நடவடிக்கை எடுக்கட்டும்.
4 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சென்ற கணவர் விஜயகுமார் தொழில் வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறார். அங்கு போனால் நாங்களும் கஷ்டப்பட வேண்டியதுதான்.
என்.சுகந்தன் (27): 
மன்னார் அருகே புதுக்குடியிருப்பு சொந்த ஊர். அப்பா, அம்மாவுடன் 2 வயது குழந்தையாக இங்கு வந்தேன். பி.எஸ்சி. படித்துவிட்டு, கணினி மையம் நடத்துகிறேன். கல்வி, தொழில் வாய்ப்புகள் இங்கு அதிகம். அரசும் உதவிகளை வழங்குகிறது. சகோதரர்களுக்கும் இங்குதான் நல்ல கல்வி கிடைக்கும். இலங்கை குடியுரிமைகூட தேவையில்லை. அகதியாக இங்கேயே வாழ்ந்து விடுகிறோம்.
விநாயகி (35):
பூர்வீகம் யாழ்ப்பாணம். கணவர் கரண், 2 பெண் குழந்தைகளுடன் வசிக்கிறேன். 1991-ல் வந்தோம். இலங்கையில் அமைதி திரும்பிவிட்டதாக கூறி 1996-ல் அழைத்துச் சென்றனர். அங்கு நிம்மதியாக வாழமுடியவில்லை.
2006-ல் மீண்டும் தமிழகம் வந்தோம். தற்போது வெற்றி பெற்றிருப்பதும் ராஜபக்ச கட்சிக்காரர்தான். தமிழர்கள் அதிக அளவில் கொல்லப்பட்டபோது இவரும் அமைச்சராக இருந்தார். மீண்டும் தமிழர்கள் மீது தாக்குதல் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
பாரதிதாசன் (48):
மன்னார் மாவட்டம் அடம்ப ஆக்கப்பட்டி சொந்த ஊர். 1985 முதல் இந்தியா வில் வசிக்கிறோம். பிள்ளைகளும் இந்திய கலாச்சாரத்தையே விரும்புகின்றனர்.
தமிழகத்தில் உள்ள சுமார் 50 ஆயிரம் அகதிகள், இந்திய வம்சாவளியினர். அவர்களுக்கு அங்கு ஓட்டுரிமை, குடியுரிமை, அரசு வேலை கிடைக்காது. அங்கு திரும்பிச் செல்வதால் பலனில்லை. நிதியுதவி எதுவும் வேண்டாம். இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை கொடுத்தால் போதும்.
விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை
விருதுநகர் மாவட்டத்தில் குல்லூர்சந்தை, ஆனைக்குட்டம், செவலூர், அனுப்பங்குளம், மல்லாங்கிணறு, கண்டியாபுரம், மொட்டமலை ஆகிய 7 இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளன. இங்கு இலங்கை அகதிகள் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். குல்லூர்சந்தை முகாமில் இருந்து.
சித்திரவேல் (72):
குடும்பத்தோடு 1990-ல் தமிழகம் வந்தேன். 2 முறை இலங்கை போய் வந்தேன். வாழ்வதற்கான சூழல் அங்கு இல்லை. இங்கு அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. நிம்மதியாக இருக்கிறோம். இதை விட்டுவிட்டு மீண்டும் நாடு திரும்பி, போராட்டமான வாழ்க்கை வாழ விரும்பவில்லை.
சண்முகநாதன் (65):
குடும்பத்துடன் 1995-ல் இங்கு வந்தேன். இலங்கை சொந்த நாடுதான். ஆனால், தற்போது அங்கு ஒரு அடிகூட சொந்த இடம் கிடையாது. இருக்க வீடு இல்லை. பிழைப்புக்கு வழியில்லை. வாழப்போவது கொஞ்ச காலம். அதை நிம்மதியாக இங்கேயே கழித்துவிடுகிறோம்.
(அருகே நின்றிருந்த பெண்கள் கூறியது: இங்கு பாதுகாப்பாக, நிம்மதியாக இருக்கிறோம். குழந்தைகள் பள்ளிக்கூடம் போய் நன்கு படிக்கிறார்கள். இலங்கை போனால் எங்கள் நிலை என்ன ஆகும் என்று தெரியவில்லை. வேலைக்காக வெளியில் செல்வோர் பத்திரமாக வீடு திரும்புவார்களா என்று தினம்தினம் பயந்துகொண்டே வாழ வேண்டும்.)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்தி நகரில் உள்ள முகாமில் இருந்து..
முகாம் தலைவர் லோகராஜ் (56):
யாழ்ப்பாணத்தில் எங்கள் நிலங்களை எல்லாம் விட்டுவிட்டு 1996-ல் 2 குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்தோம். 2004-ல் மீண்டும் சென்று 2006-ல் திரும்ப வந்துவிட்டேன். இதுநாள் வரை அடைக்கலம் கொடுத்த இந்திய அரசு, தமிழக அரசுக்கு மிக்க நன்றி. சீக்கிரமே குடும்பத்தோடு நாடு திரும்பப் போகிறேன்.
மில்டன் (21):
அகதியாக 4 வயதில் வந்தேன். அப்பா, அம்மாவுடன் வசிக்கிறேன். அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. படிக்கிறேன். தமிழகத்தில் அகதியாக உள்ள இளைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். அனைவரும் இலங்கை திரும்பினால், அங்கு வேலை கிடைக்காது. இலங்கையில் எனக்கு எதிர்காலம் இல்லை. இலங்கைக்கு போக விருப்பம் இல்லை.
நந்தகுமார் (45):
மலையகம் பகுதியைச் சேர்ந்தவன். 18 வயதில் தனி ஆளாக இந்தியா வந்தேன். திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் இருக்கிறேன். கூலி வேலை செய்தும், ஆட்டோ ஓட்டியும் ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறேன். அங்கு போனால் விவசாயம்தான் செய்ய முடியும். தமிழக கலாச்சாரத்தோடு வளர்ந்த என் பிள்ளைகளை அங்குள்ளவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.
வசந்தகுமாரி (35):
பத்து வயது சிறுமியாக 1989-ல் இந்தியா வந்தேன். 2002-ல் கொழும்பு சென்றபோது போராளி என்று ராணுவத்தினர் கைது செய்து 2 மாதம் சிறையில் அடைத்தார்கள். விடுதலையானதும் மீண்டும் இந்தியாவுக்கு வந்துவிட்டேன். திருமணம், குழந்தைகள் என இங்கேயே தங்கிவிட்டேன். நாங்கள் சாகக்கூடாது என்று என் பெற்றோர் நினைத்தார்கள். என் பிள்ளைகள் சாகக்கூடாது என நான் நினைக்கிறேன். இலங்கை போக விருப்பம் இல்லை.
கிறிஸ்துராஜா (50):
அகதியாக 1984-ல் இங்கு வந்தேன். 3 முறை இலங்கைக்கு போய்வந்தேன். அங்கு நிலைமை சரியில்லை. 1996 முதல் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட்டேன். வாழ வழி செய்துகொடுத்தால், இலங்கை திரும்புவதில் தயக்கம் இல்லை. கஷ்டப்பட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துள்ளோம். அதனால், கப்பல் ஏற்பாடு செய்யவேண்டும். ஓராண்டு அவகாசம் கொடுங்கள். போய்விடுகிறோம்.
கிருஷ்ணசாமி (62) தங்கரத்தினம் (60) தம்பதி:
19 ஆண்டுகளாக இங்கு குடும்பத்துடன் வசிக்கிறோம். மகள்கள் இங்கு கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்கள் யாருக்கும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. அங்கு எங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை திருப்பிக்கொடுத்தால் இலங்கை செல்வோம்.
லத்தீஷ்குமார் (48):
அகதியாக 21 வயதில் வந்தேன். மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் வசிக்கிறேன். இலங்கையில் எங்களுக்கு சமஉரிமை வேண்டும். பிரிவினை வேண்டாம். அகதி என்ற பட்டத்துடன் வாழ்ந்துவிட் டேன். பிள்ளைகளை அதுபோல வாழவைக்க விருப்பம் இல்லை. ராணுவத்தை வாபஸ் பெறச்சொல் லுங்கள். நாடு திரும்பத் தயாராக இருக்கிறோம்.
திருவண்ணாமலை அருகே அடிஅண்ணாமலையில் உள்ள முகாமில் இருந்து..
நாகேஸ்வரி (52):
தமிழகத்துக்கு 1990-ல் வந்தோம். எனக்கு ரூ.7.50 லட்சம் கடன் உள்ளது. மகள்களை தமிழகத்தில் கட்டிக் கொடுத்துள்ளேன். திடீரென போகச் சொன்னால் எப்படி? கடன்களை அடைக்க வேண்டாமா? எல்லாவற்றையும் விட்டுவிட்டு அகதிகளாக இங்கு வந்தோம். இப்போது அங்கு போனால், மீண்டும் அகதி நிலைமைதான்.
பிரேம் (18):
அப்பா ராஜேந்திரன், அம்மா லதா. அவர்கள் அகதிகளாக இங்கு வந்தவர்கள். நானும் சகோதரர்களும் இந்தியாவில்தான் பிறந்தோம். இலங்கையில் உள்ள உறவுக்காரர்களைப் பார்க்க அப்பா, அம்மாவுக்கும் எனக்கும் ஆசை யாக உள்ளது. பிழைக்க அரசு வழி ஏற்படுத்திக் கொடுத்தால், தாய் நாட்டுக்குச் செல்ல விரும்புகிறேன்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcew7.html

Geen opmerkingen:

Een reactie posten