தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 februari 2015

கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பில் கூட தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்: அரியநேத்திரன்

மில்லியன் பெறுமதியில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகைகள் ஹோட்டல்களாக மாற்றப்படும்: ரணில்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 05:57.04 AM GMT ]
மஹிந்த அரசாங்கத்தின் போது கட்டப்பட்ட சொகுசு ஜனாதிபதி மாளிகைகள் ஹோட்டல்களாக மாற்றப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அறுகம்பை மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு ஜனாதிபதி மாளிகைகளுமே இவ்வாறு ஹோட்டல்களாக மாற்றப்படும் என காலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர்  தெரிவித்தார்.
இந்த மாளிகைகள் இரண்டும் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவற்றை நிர்மாணிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவின் சகாக்களிடம் விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 06:33.50 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் அரசியல் ஒருங்கிணைப்பாளர்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது.
சர்வதேச ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகரான வெலே சுதாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் அண்மையில் விசாரணை நடத்தப்பட்டது.
அத்துடன் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
துமிந்த சில்வா மீதான போதைப் பொருள் வியாபார குற்றச்சாட்டு குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மூன்று குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.


ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் போக்குவரத்து பணிப்பாளர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 06:53.44 AM GMT ]
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் போக்குவரத்து பணிப்பாளர் கீர்த்தி நமரசிங்க திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் தற்பொழுது இடம்பெறுகின்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் போக்குவரத்து பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நம்பிக்கைக்கு பாதகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து பணிப்பாளர் கீர்த்தி நமரசிங்க திஸாநாயக்க குற்ற புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பில் கூட தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர்: அரியநேத்திரன்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 06:04.31 AM GMT ]
கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சு பதவி மு.கா  கைகளில் உள்ளது, அதனால் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு சில வேலைத்திட்டங்களை செய்யவேண்டியுள்ளது. இதன் காரணமாக நாங்களும் இந்த கிழக்கு மாகாணசபையில் இணைந்து ஆட்சி அதிகாரத்தை செய்யவேண்டிய நிலையிலுள்ளோம் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை மாலை விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்தகாலத்தில் கிழக்கு மாகாணசபையில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டார்கள். பாடசாலை சிற்றூழியர் நியமனங்களில் கூட, தமிழ் இளைஞர்கள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டு வேறு இனம் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தமை நாம் அனைவரும் அறிந்த உண்மை.
குறிப்பாக, படுவான்கரை பகுதியிலிருக்கும் பாடசாலைகளுக்கு, அம்பாறையிலிருக்கும் (சம்மாந்துறை, நிந்தாவூர்) முஸ்லிம் இளைஞர்களுக்கு நியமனங்களை வழங்கி வேலைக்கு அமர்த்திய கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றமை தமிழ் மக்களுடைய இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இவ்வாறான நிலைமைகளை தொடர்ந்து அனுமதிக்கமுடியாது. இதனை தடுக்கவேண்டிய தார்மீகக் கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய 11 ஆசனங்களை பெற்றவர்கள் நாங்கள். அந்த வகையில் முதலமைச்சர் பதவியை பெறவேண்டியவர்களும் நாங்களே.
இருந்தபோதும், முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களை பெற்று முதலமைச்சு பதவியை திட்டமிட்டு தன்வசப்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி நாங்கள் அவர்களுடன் இணைந்து, இரண்டு அமைச்சுகளையும், ஒரு பிரதி தவிசாளர் பதவியையும் ஏற்பதற்கு இருக்கின்றோம்.
இதனை ஏற்பதானது நாங்கள் ஏதோ முஸ்லிம் காங்கிரஸுக்கு அடிபணிந்து பதவிகளை ஏற்பது என்று யாரும் தவறாக நினைக்கக்கூடாது. கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டே இதனை பொறுப்பெடுக்கவுள்ளோம்.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எதிர்காலத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கவுள்ளோம். அதனை தமிழ் மக்களும் கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கவேண்டும் என்ற மனோநிலையை ஏற்படுத்தவேண்டும்.
மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில், கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டி வளர்த்தவர்கள் நாங்கள். அனைத்து தமிழ் மக்களும் ஒற்றுமையாக இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த முன்வரவேண்டும் அப்போதே, எமது இலக்கை நோக்கி தொடர்ந்து செல்லமுடியும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno2E.html

Geen opmerkingen:

Een reactie posten