ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இலங்கையை புதிய திசையில் பயணிக்க வைத்துள்ளதாகவும், பொறுப்புக்கூறலுக்கான கதவைத் திறந்து விட்டுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்திருக்கின்றார்.
அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், இலங்கையின் மனித உரிமைகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்புக்குப் முன்னர் மங்கள சமரவீரவும், ஜோன் கெரியும் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினார். இதன்போது, கருத்து வெளியிட்ட மங்கள் சமரவீர, அமெரிக்காவுடன் கடந்த சில ஆண்டுகளாக இருந்த நெருடலான உறவு நிலைக்கு முடிவு கட்டி, நெருக்கமான, உறவை மீள ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனுடன் நெருக்கமாக பணியாற்ற இலங்கை விரும்புவதாகவும், புதிய அரசாங்கம் அமெரிக்காவை அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை என்றும், மிகப் அபெரிய வாய்ப்பாக கருதுவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, தேர்தல் இலங்கையை புதிய திசையில் பயணிக்க வைத்துள்ளதாகவும், பொறுப்புக்கூறலுக்கான கதவைத் திறந்து விட்டுள்ளதாகவும், மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் காக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஊழலுக்கு எதிராகப் போராடும், அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 |
Geen opmerkingen:
Een reactie posten