தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 februari 2015

தமிழரைப் பின்தள்ளுமா ஜெனீவா?

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்க இன்னமும் சரியாக ஒரு மாதமே இருக்கின்ற நிலையில், ஜெனீவா, வாஷிங்டன், பிரசெல்ஸ், புதுடில்லி என்று அவசரமான இராஜதந்திர கலந்துரையாடல்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது அரசாங்கம்.
இலங்கை அரசாங்கம் காட்டுகின்ற இந்த இராஜதந்திர முனைப்புகளின் அவசரத்துக்கு ஒரே காரணம் வரும் மார்ச் 26 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தான்.
கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, 28ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதுவும் கூட,கடந்த மார்ச் அமர்விலேயே தீர்மானிக்கப்பட்டு விட்டது.

இதனால்,அந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் ஜெனீவாவின் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் தான் அதனை தடுப்பதற்கான அல்லது தாமதப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயத்தொடங்கியுள்ளது அரசாங்கம்.
இப்போதைய நிலையில், இந்த அறிக்கை வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படாது போனால் ,அது இலங்கையின் புதிய அரசாங்கத்துக்குப் பெரியதொரு நிம்மதியான விடயமாக இருக்கும்.
ஏனென்றால்,இந்த அறிக்கையை எதிர்கொள்ளும் விடயத்தில்,தற்போதைய அரசாங்கத்தினால் ,தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கமுடியாது.
அதாவது அறிக்கையை முற்றிலும் நிராகரிக்கவோ அல்லது உண்மை என்று ஏற்றுக்கொள்ளவோ புதிய அரசாங்கத்தின் சூழல் இடமளியாது.
எனவே தான், ஒரு தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை ஐ.நாவுடன் செய்து கொள்வதற்கான சாத்தியங்களை ஆராயத் தொடங்கியிருக்கிறது.
கடந்த வாரம்,ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரது வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால,ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.
இந்தப் பேச்சுக்களின்போது, பொறுப்புக்கூறல் விவகாரத்தில் புதிய அரசாங்கத்தின் கொள்ளைகள் மற்றும் நிலைபாடுகளை அவர் விபரித்துக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க முடியாது, ஆனால் நம்பகமான உள்நாட்டு விசாரணையை நடத்த தயார் என்பதே புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
அதற்கு ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியைக் கூட அரசாங்கம் பெறத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
தேவைப்பட்டால் வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவோம் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுயிருக்கிறார்.
இதற்கு முந்திய அரசாங்கம்,நம்பகமான உள்நாட்டு விசாரணை,ஐ.நாவின் தொழில் நுட்ப உதவிகள் எதையுமே ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அது தான் ஐ.நாவுடனும் மேற்குலகுடனும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முரண்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. 
சர்வதேசத்துடன் முரண்படத் தயாராக இல்லாத புதிய அரசாங்கம், சர்வதேச விசாரணைகளை ஏற்கத் தயாராக இல்லாவிட்டாலும்,நம்பகமான உள்நாட்டு விசாரணை,ஐ.நா வின் தொழில்நுட்ப உதவிகளை ஏற்றுக்கொள்வது ஆகிய விடயங்களில் தாம் இறங்கி வரத் தயார் என்று ஜெனீவாவுக்குப் பச்சைக்கொடி காண்பித்திருகிறது.
இது சர்வதேச சமூகத்தை சற்றுப் பின்னால் இஐத்துச் செல்லும் முயற்சி
முன்னைய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறோம்,பின்னைய நடவடிக்கைகளை கைவிடுங்கள்,அல்லது பிற்போடுங்கள் என்பதே கொழும்பின் இப்போதைய உத்தியின் அடிப்படை. புதிய அரசாங்கம்,ஐ.நா வின் நிபந்தனைகளை ஏற்றுச் செயற்படுகிறது என உத்தரவாதம் அளிப்பதன் ஊடாக,சர்வதேச விசாரணை அறிக்கையின் விளைவுகளில் இருந்து தப்பிக்க முனைகிறது.
இதற்காக தான் ஜயந்த தனபால ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ”ஜயந்த தனபாலவின் ஜெனீவா பயணத்தை அங்குள்ள அதிகாரிகளின் மனோநிலையை கண்டறிவதற்கான ஒரு பயணமாகவே கருத வேண்டும்.
ஜெனீவா தீர்மானம் தொடர்பாக அவர்கள் இலங்கைக்கு உள்ள தெரிவுகள் தொடர்பாக என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் என்று கூறியிருந்தார்.
ஐ.நாவுடன் மட்டுமன்றி ,ஜெனீவா தீர்மானத்துக்கு ஆதரவளித்த நாடுகளுடனும் ஜயந்த தனபால ஆலோசனைகளை நடத்தியிருகிறார்.
உள்நாட்டு விசாரணைகளை உடனடியாக ஆரம்பிப்பதன் மூலம்,ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்த முடியுமா என்பதே இலங்கை அரசின் இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.
இது எந்தளவுக்குச் சாத்தியமான விடயம் என்பது குறித்து எந்த தகவலும் இந்தப் பந்தி எழுதப்படும் வரையில் தெரியவரவில்லை.
ஆனால், சர்வதேச சமூகம் புதிய அரசாங்கத்துக்கு குறுகியதொரு கால அவகாசத்தைக் கொடுக்கலாம்.எனினும்,அது ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை தாமதிக்கும் செயலாக இருக்குமா என்று கூற முடியாது.
ஒருவேளை அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு,அது தொடர்பாக விவாதம் நடத்துவதையோ ,மேல் நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதையோ, ஒத்திவைக்கும் சாத்தியங்கள் உள்ளன.
அவ்வாறானதொரு,நகர்வை சர்வதேச சமூகம் முன்னெடுத்தால், நிச்சயம் புதிய அரசாங்கத்துக்கு தெளிவானதொரு காலக்கெடுவை நிச்சயம் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த வாரம் கொழும்புக்கு வரவுள்ள தெற்கு,மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்,இந்த விவகாரத்தில்,முக்கிய பங்காற்றுபவராக இருக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து,உதவி இராஜாங்கச் செயலர் அல்லது வேறு உயர் அதிகாரிகள் ஜனவரி ,பெப்ரவரி மாதங்களில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கமாகிவிட்டது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தொடர்பாக சிவில் சமூக அமைப்புகள்,மனித உரிமை அமைப்புக்களுடன் கலந்தரையாடுவதும்,இங்குள்ள நிலைமைகளை அவதானிப்பதும் தான்,இந்தப் பயணங்களின் நோக்கம்.
கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் கொழும்பு வந்திருந்த நிஷா பிஸ்வால்,இலங்கைக்கு எதிரான கடுமையான நகர்வு இரக்கும் என்பதை சூசகமாக குறிப்பிட்டு விட்டே சென்றிருந்தார்.
அதுமட்டுமன்றி, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எதேச்சாதிகாரப் பாதையில் செல்வதான கருத்தையும் அவர் வெளியிட்டது மறந்திருக்காது. அவர் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வரவுள்ள நிலையில் ,இறங்குள்ள நிலைமைகள் முற்றாகவே மாறியுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவியில் இல்லை.
முன்னைய அரசாங்கம் நிறைவேற்ற மறுத்த விடயங்களை ,நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று கூறுகிறது புதிய அரசாங்கம்.
இத்தகைய கட்டத்தில், நிஷா பிஸ்வால் அமெரிக்காவினதும், ஐ.நா வினதும் அடுத்த கட்டநகர்வு எவ்வாறு அமையலாம் என்பதை,தீர்மானிக்கின்ற முக்கிய பாத்திரத்தை வகிக்கப் போகிறார்.
எப்படியாவது,அமெரிக்காவினதோ, ஐரோப்பிய ஒன்றியத்தினதோ ,காலில் கையில் விழுந்தாவது,ஜெனீவா நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க எத்தனிக்கிறது அரசாங்கம்.
அதேவேளை,தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில்,அண்மைய அரசியல் மாற்றங்களின் விளைவாக ,பொறுப்புக்கூறல் விவகாரத்தில் தம் மீதான சர்வதேச சமூகத்தின் அக்கறை குறைந்துவிடுமோ என்ற கவலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது.
புதிய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு,கடந்தகாலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை.
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்றும்,அதுவே நல்லிணக்கத்தை எற்படுத்தும் என்றும், வெளிவிவகார அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்கள் கூறியிருக்கின்றனர்.ஆனால் ,அது எந்தளவுக்கு நிறை வேற்றப்படும் என்ற கேள்வி தமிழர் தரப்புக்கு உள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு உள்நாட்டு விசாரணைகளும்,தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கவோ,அவர்களுக்கு நியாயம் வழங்கவோ இல்லை.
எனவே தமிழர் தரப்பு உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கை கொள்வதும் சரி,அதன் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதும் சரி கடினமான காரியமே.
அதேவேளை ,இந்த விவகாரத்தில் தமிழர் தரப்புக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டியது புதிய அரசாங்கத்தின் பொறுப்பு.  பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவது மட்டும் நல்லிணக்கத்துக்கு அவசியமானதல்ல.
அந்த நியாயம்,சரியான நியாயமாகவும் இருக்க வேண்டும்.  எதிர்காலத்தில் உள்நாட்டு விசாரணையின் மூலம் நீதியை நிலைநாட்டி விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிக் கொண்டாலும் கூட,சர்வதேச விசாரணைகளின் மூலம் முழுமையான நீதி கிடைத்திருக்கும் என்ற கருத்து தமிழ்மக்களிடம் ஏற்படக்கூடும்.
எனவு நம்பகமான உள்நாட்டு விசாரணை விவகாரத்தில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்குப் பெரும் பாய்ச்சலை பாய வேண்டும்.
ஆனால்,அது தற்போதைய இடைக்கால அரசாங்கத்தினால் முடியவே முடியாது.
அவ்வாறு பாய முற்பட்டால் பின்புறம் இருந்து இழுத்து விழுத்துவதற்குத் தயாராக அதன் கூட்டணிக் கட்சிகளே தயார் நிலையில் இருக்கின்றது.
ஜெனீவா விவகாரத்தில் அரசாங்கம் தனது நெருக்கடிகளை குறைத்துக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல்,அது தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடிய ஆழமான கசப்புணர்வையும் கருத்தில் எடுக்க வேண்டும்.
இல்லாது போனால் ,இலங்கை அரசின் மீதான நம்பிக்கைகள் மட்டுமன்றி,ஐ.நா மீதும்,சர்வதேச சமூகத்தின் மீதும்,தமிழர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் கூட சிதைந்து போகும்.அதுவும் கூட,நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்குப் பின்னடைவாக இருக்கும்.
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcew4.html

Geen opmerkingen:

Een reactie posten