தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 februari 2015

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான அதிகாரப்பரவலாக்கலையே கேட்கின்றோம்!- பொன்.செல்வராசா எம்.பி



லண்டனில் நடைபெற்ற "ஈகைப்பேரொளி" முருகதாசனின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 12:43.18 AM GMT ]
2009 ம் ஆண்டு தாயகத்தின் சிங்கள இனவாத அரசினால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு தாக்குதல்களை நிறுத்தக்கோரி சுவிஸ்சர்லாந்தில் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் தன்னைத்தானே தீ மூட்டி தியாகமரணம் அடைந்த "ஈகைப்பேரொளி" முருகதாசனின் 6ம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று லண்டனில் நடைபெற்றது.
வடமேற்கு லண்டனில் "ஈகைப்பேரொளி" முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்ட இடத்தில் அவரது நினைவாகவும் அவரைப்போல் தமிழர்களின் விடுதலைக்காய் தம்மை தீக்கு ஆகுதியாக்கிய 21 தியாகிகள் நினைவாகவும் அமைக்கப்பட்டுள்ள நினைவு கல்லறையில் இந்த நினைவு வணக்க நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
நேற்று காலை 10:45 மணிக்கு பொதுச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வும், நினைவுரையும் இடம்பெற்றது. மதியம் 12 மணிக்கு நிகழ்வுகள் நிறைவுபெற்றது.
இந்த நிகழ்வில் "ஈகைப்பேரொளி" முருகதாசனின் பெற்றொர், குடும்பத்தார், உறவினர், நண்பர்கள், மற்றும் தேசப்பற்றாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgs5.html


மரணதண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல்! சட்டத்தை திருத்த வேண்டும்! முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 12:08.03 AM GMT ]
மரணதண்டனை வழங்குவதற்கு ஜனாதிபதியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சட்டத்தைத் திருத்துவதன் மூலம் மரணதண்டனைக்கு காத்திருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.
சந்தேகநபர் ஒருவருக்கு நீதிமன்றத்தில் நீதிபதி மரணதண்டனை விதித்தாலும், ஜனாதிபதியின் அனுமதியுடன் தூக்கிலிடுமாறே நீதிமன்றம் அறிவிக்கும்.
இதனால் தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் அனுமதியைப் பெறுவதற்காக நீண்டநாட்கள் காத்திருக்கவேண்டி ஏற்படும். இது தொடர்பான சட்டம் திருத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் அனுமதி இன்றி நீதிமன்றமே தூக்கிலிடுமாறு உத்தரவிட்டால் சிறைச்சாலைகளில் காணப்படும் இடப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 1000 பேர் சிறையில் உள்ளனர்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பதவியேற்ற பின்னர் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை இன்னமும் காணப்படுகிறது.
யாழ்ப்பாணம் மற்றும் அங்குனுகொலபலஸ் சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டதும் இடப்பற்றாக்குறையை தீர்க்க முடியும் என நினைக்கின்றோம்.
அதேநேரம், சிறைச்சாலைகள் ஆணையாளராக இருந்த காலத்தில் பணியாளர்களுக்கான வளங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தேன்.
புதிய அரசாங்கத்தின் ஊடாக சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு 50 பஸ் வண்டிகளும், 10 லொறிகளும், 8 தண்ணீர் பவுசர்களும் இன்று பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
அடுத்தவாரம் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு புதிதாக 1300 பேர் உள்வாங்கப்படவுள்ளனர்.
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் இதன்மூலம் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgs4.html

05 கோடி ரூபா நாணய கடத்தல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முறியடிப்பு
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 11:53.28 PM GMT ]
இலங்கை நாணயப்படி சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு கரன்சி நோட்டுக்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை சுமார் 3.35 க்கு கட்டார் நோக்கி புறப்படவிருந்த கட்டார் எயார் வேஸுக்குச் சொந்தமான கியூ. ஆர். 663 ரக விமானத்தில் செல்வதற்காக வந்த கொழும்பு 15, மட்டக்குளியைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது பயணப் பொதிகளிலிருந்து 950 குவைத் தினார், 1,10,000 ஜப்பான் யென், 48,500 கட்டார் ரியால், 8,02,000 சவூதி ரியால், 72,000 அமெரிக்க டொலர், 450 யூரோ, 30,000 ஸ்டேர்லிங் பவுண், 33,500 ஐ. அ. இராச்சிய திர்ஹாம்  ஆகிய வெளிநாட்டு நாணய கரன்சி நோட்டுக்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை இலங்கை நாணயப்படி 4 கோடியே 83 லட்சத்து 9,692 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
உதவி சுங்க அத்தியட்சகர் திலங்க, சமரவீர, முதித விதான, லக்மால் தென்னகோன், டங்கன் ஹெட்டியாராச்சி, திருமதி சந்துலி ஆகியோர் இக்கடத்தல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான அதிகாரப்பரவலாக்கலையே கேட்கின்றோம்!- பொன்.செல்வராசா எம்.பி
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 11:35.30 PM GMT ]
நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான அதிகாரப்பரவலாக்கலையே நாங்கள் கேட்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு யோசப் வாஸ் வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது மாவட்டத்தின் கல்வி நடவடிக்கைகளை பார்க்கின்றபோது நாங்கள் கல்வியிலே சற்றுப் பின்னடைந்திருப்பதைக் காண்கிறோம்.
எமது தமிழ் சமூகம் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாட்டில் பீடித்திருந்த கொடிய யுத்தம் காரணமாக, கல்வியை மட்டும் இழக்கவில்லை. உடமைகள், உயிர்கள் எல்லாம் இழந்திருக்கின்றது.
ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாகிவிட முடியாது.
தென்னாபிரிக்காவிலே ஜனாதிபதியாக இருந்த நெல்சன் மண்டேலா, தனது கறுப்பின மக்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர். 27 வருடங்கள் சிறையிலே அனுபவித்தவர். கடைசியாக பேச்சுவார்த்தை மூலம் தமது இனத்தின் அரசியலை மேம்படுத்தி தமக்கென்று ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தியவர்.
நெல்சன் மண்டேலா அவர்களை ஒரு போதும் உலகத்திலே வாழுகின்ற எந்த சமூகமாக இருந்தாலும் அவரை போராளி என்றோ, பயங்கரவாதி என்றோ சொன்னது கிடையாது. விடுதலை வீரன் என்று சொன்னார்களே தவிர பயங்கரவாதி என்று உச்சரிக்க விரும்பவில்லை.
அதே போன்றுதான் இலங்கையில் கூட தமது இனத்துக்கு உரிமை கிடைக்கவில்லை என்று ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பயங்கரவாதிகளாக மாறிவிட முடியாது. அவர்கள் விடுதலை வீரர்களாக உச்சரிக்கப்பட வேண்டியவர்கள்.
ஆனால், 2009களில் கொடூரப் போர் மௌனித்து விட்டாலும், அதன் பின்னர் உண்மையான பயங்கரவாதம் ஒன்று இருந்தது. அதுதான் அரச பயங்கரவாதம்,
இந்த அரச பயங்கரவாதத்தினால் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதிவரை நம் இனத்தைச் சேர்ந்த எத்தனை இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள், எத்தனை இளைஞர்கள் காணாமல் போனார்கள். காணாமல் போனவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாமல் அவர்களது பெற்றோர், உறவினர்கள் தேடிவருகின்றனர்
அந்த வகையில் அரச பயங்கரவாதம் ஒன்று இந்த நாட்டில் இருந்தது என்பதனை மறந்து விடமுடியாது.
இன்று ஓரளவுக்கு இந்த அரச பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அதற்கான தீர்வுகள் கொண்டு வரப்படும் என்ற பச்சைக் கொடி புதிய அரசாங்கத்தினால் காட்டப்பட்டிருக்கிறது.
அது நடக்குமா அல்லது நடக்காமல் விடுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜனவரி 8ம் திகதி முதல் பயங்கரவாதம் இல்லாத வேட்கையில் நாம் இருப்பதை நாங்களாகவே உணர்கிறோம். இன்று நாங்கள் பயங்கரவாதம் இல்லாத ஒரு சமாதானத்தை அடைந்திருக்கிறோம்.
இந்த நாட்டில் முழுமையான சமாதானம் மலர வேண்டுமாக இருந்தால் தமிழர்களது அபிலாஷகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
கடந்த 65 - 70 ஆண்டுகளாக தமிழர்களது உரிமைகள் வழங்கப்படாமையினால்தான் நாடே பற்றியெரிந்தது.
கடந்தகால அரசுகள் தமிழ் மக்களது உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க மறந்து விட்டார்கள், அவ்வாறு தீர்த்திருந்தால் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கமாட்டார்கள்.
அபிலாசைகள் தீரும்வரை அது எந்த அரசாக இருந்தாலும் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராடிக் கொண்டே இருக்கும்.
நாங்கள் தனிநாடு கேட்கவில்லை, நாங்கள் கேட்பது எல்லாம் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் இனம் சுதந்திரமாக வாழ்வதற்கான அதிகாரப்பரவலாக்கலையே.
அந்த அதிகாரப்பரவலாக்கல் எந்த வழிமுறையில் இருந்தாலும் அதனைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgs2.html

Geen opmerkingen:

Een reactie posten