யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதியில், 100 அடிக்கு நிலத்தை துளையிட்டு அதில் கழிவு எண்ணையைக் கொட்டியுள்ளார்கள் ஆலையை பாராமரிக்கும் நபர்கள். இதனால் நிலத்தடி நீரோட்டத்தில் இந்த கழிவு எண்ணை கலந்து , தற்போது பரவி வருகிறது. பலரது கிணற்றில் இந்த கழிவு என்ணை பரவுவதால் இதுவரை பலர் இறந்தும் கடுமையான நோய்களுக்கும் உள்ளாகியுள்ளார்கள். இதன் காரணமாக சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இன அழிப்பில் ஈடுபட்ட இலங்கை அரசின் மற்றுமொரு வடிவமாக ( ) ரசாயன இனவழிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் மக்கள்.
மக்களை கொத்துக் கொத்தாக கொல்வது நடந்து முடிந்து, ரசாயன திரவங்களை தண்ணீரில் கலந்து அதனூடாக தமிழர்களை இன அழிப்பு செய்கிறது சிங்கள அரசு என்ற குற்றச்சாட்டே தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பாக மூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் என்ற குழு சில போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு - வௌ்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு அருகில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலப்பதால் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சுன்னாகம் உள்ளிட்ட வலிகாமம் பகுதி கிணறுகளில் எண்ணெய்கழிவுகளின் கலப்பினை வெளிப்படையாக கண்டுகொள்ள முடிகின்றது. நிலத்தடி நீரை மாத்திரமே ‘குடிநீர்’ உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்குமான நீராதாரமாக கொண்டுள்ள யாழ் குடாநாட்டின் நீர் வளத்தை மாசுபடாது பாதுகாப்பது அவசியமானது. அதுபோல, எண்ணெய்கழிவுகளினால் மாசடைந்துள்ள நிலத்தடி நீரினை விரைவாக சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால், நிலத்தடி நீர் மாசடைதலின் வேகம் இன்னமும் அதிகரிக்கலாம் என்று சூழலியலாளர்களும், துறைசார் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், எமது நீராதாரத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து விரைவாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ என்கிற கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம், நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களையும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள வைப்பதுடன், மத்திய அரசாங்கம், வடக்கு மாகாண சபை, துறைசார் நிபுணர்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களை இந்தப் பிரச்சினையில் விரைவான நடவடிக்கைக்கு வலியுறுத்துவதே எமது இலக்கு.
இது எந்தவிதத்திலும் அரசியல் கட்சிகள் சார்பிலான கவனயீர்ப்பு நிகழ்வு அல்ல. நாடெங்கிலுமுள்ள இளைஞர்களினால் ஒன்றிணைக்கப்பட்டு இனம், மதம், மொழி கடந்து முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வாகும். இன்று யாழ் குடாநாடு எதிர்நோக்கியுள்ள குடிநீருக்கான அச்சுறுத்தலை ஏற்கனவே கம்பஹா வெலிவேரிய மக்கள் எதிர்கொண்டிருந்தனர். எனவே, பிரதேசங்கள், மொழிகள் தாண்டி எமது மக்களின் குடிநீருக்கான உரிமையைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணையுமாறு அழைக்கின்றோம்.
http://www.athirvu.com/newsdetail/2270.html
Geen opmerkingen:
Een reactie posten